கரவெட்டி அத்துளு அம்மன்
அத்துளு அம்மன் கோயில் நெல்லியடி - கொடிகாமம் வீதியில், கோயிற் சந்தையிலிருந்து கரவெட்டி கிழக்கு செல்லும் பாதையில். பச்சைப்பசேல் என்ற அத்துளு வயலும், குளமும் சூழ, மரங்களும், கொடிகளும், பற்றைகளுமே இராசகோபுரங்களும், மதில்களுமாக, இயற்கையையே கோயிலாகக் கொண்ட இடம் ஆகும்.
கண்ணகி மதுரையை எரித்து விட்டு வந்து தங்கிய இடங்களாக ஐதீகம் சொல்லும் இடங்களில் கரவெட்டி அத்துளு அம்மன் ஆலயமும் ஒன்று. பொதுவாகவே அம்மன் ஆலயங்களில்தான் பொங்கல் பொங்கப்படுகின்றது. பெண்களுக்கு முக்கியமாக கருதப்படும் இவ்வாலயங்களைப் போலவே கேரளத்திலும் திருவனந்தபுர மாவட்டத்தில் அட்டுக்கல் என்ற இடத்தில் மாசி - பங்குனி மாதங்களில் பகவதி ஆலயத்தில் பெண்களே கலந்துகொள்ளும் பொங்கல் வைபவம் சிறப்பாக நடைபெறுகின்றது. அவர்களும் கண்ணகி வந்து தங்கிய இடமாகவே அந்த ஆலயத்தை கருதுகிறார்கள் என்பதுதான் சுவையான விடயம்.
பன்றிதலைச்சி அம்மன் ஆலயத்தின் அளவில் இல்லாவிடினும், அத்துளு அம்மன் ஆலயத்திலும் வருடந்தோறும் கரவெட்டி, அதன் அயல் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் வந்து இரவில் பொங்கி, படைத்துப் போவார்கள்.