கரீம் கனி
கரீம் கனி இந்திய வமிசாவளியைச் சேர்ந்த ஒரு தென்கிழக்காசிய அரசியல்வாதி. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் இவர் மியான்மரில் பா மௌ என்பவரின் கீழ் பாராளுமன்றச் செயலாளராக இருந்தார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், சுபாஷ் சந்திர போஸினால் மலாயாவில் நிறுவப்பட்ட ஆசாத் ஹிந்த் அரசின் அரசுத்துறை அமைச்சராக ஆனார். இவரே "முஸ்லிம் பதிப்பு இல்லம்" என்பதன் முகாமையாளரும், மலாயாவிலிருந்து வெளிவந்த தமிழ் நாளிதழான மலாயா நண்பன் என்பதன் ஆசிரியரும், "டோன்" என்னும் நாளிதழின் மலாயு மொழிப் பதிப்பான சினாரான் என்பதன் ஆசிரியரும் ஆவார்.
கரீம் கனி இவற்றுடன் நில்லாது முஸ்லிம் லீக் என்பதன் தொடர்பையும், அகில மலாயா முஸ்லிம் பரப்புச் சங்கம் (AMMMS) என்பதன் தலைமைத்துவத்தையும், இன்னும் பல அமைப்புக்களின் நிறைவேற்றுக் குழுவிலும் இருந்தார். இரண்டாம் உலகப் போரின் பின்னர், இவர் தென்கிழக்காசிய முஸ்லிம் அரசியலில் ஈடுபட்டார். இவரது செயற்பாடுகளில் 1950 இல் சிங்கப்பூரில் இடம் பெற்ற மாரியா எருட்டோகு கலவரங்கள் குறிப்பிடத் தக்கவை.
பர்மாவில் இவரது செயற்பாடுகள்
தொகுகரீம் கனி பர்மாவில் வெளியான தமிழ் மற்றும் பர்மிய மொழிச் செய்தித்தாள்களின் ஆசிரியராக இருந்தார். இவர் சுலியா சங்கத்தின் இளைஞர் அணியின் செயலாளராக இருந்ததுடன், 1932 இல் பர்மா சட்டவாக்கப் பேரவைக்கும், 1936 இல் பிரதிநிதிகள் அவைக்கும் தெரிவு செய்யப்பட்டார்.[1] பிரித்தானிய உளவுத்துறை அறிக்கையில் “உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டியோர்” பட்டியலில் இவரது பெயர் உள்ளடக்கப்பட்டது.[2] இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் இவர் பா மௌ என்பவரின் கீழ் பாராளுமன்றச் செயலாளராக இருந்தார்.