கரும்பலகை என்பது அழித்து அழித்து எழுதக்கூடிய ஒரு எழுது பரப்பு ஆகும். தொடக்கத்தில் கரும்பலகைகள் "சிலேட்" எனப்படும் இயற்கைக் கற்பலகைகளால் செய்யப்பட்டது. எனினும் இது பிற நாடுகளுக்கும் பரவிப் பரவலான பயன்பாட்டுக்கு வந்தபோது, மரப் பலகைகளில் கறுப்புப் பூச்சுப் பூசிக் கரும் பலகைகளாகப் பயன்படுத்தினர். சுவரின் ஒரு பகுதியில் கறுப்பு மை பூசிக் கரும் பலகையாகப் பயன்படுத்துவதும் உண்டு. கரும்பலகையில் எழுதுவதற்கு கல்சியம் சல்பேட்டு என்னும் வேதியியல் சேர்வையினால் செய்யப்படும் சிறிய உருளை வடிவான குச்சிகள் பயன்படுகின்றன. இவை வெண்ணிறமாக இருப்பதால் வெண்கட்டிகள் என அழைக்கப்படுகின்றன.

அமைப்பு தொகு

 
தாங்கியுடன் நிரந்தரமாகப் பொருத்தப்பட்ட கரும்பலகை

கரும்பலகைகள் பலவிதமான அமைப்புக்களில் உள்ளன. அத்துடன் அவ்வக்காலத்துத் தேவைகளைப் பொறுத்தும் கரும்பலகைகளின் வடிவமைப்புக்கள் மாறி வந்துள்ளன. நிரந்தரமான, முழுச் சுவர்களால் சூழப்பட்ட வகுப்பறைகளில் உள்ள கரும்பலகைகள் பொதுவாக ஒரு பக்கச் சுவரில் பொருத்தப்படுவது வழக்கம். முதலில் கரும்பலகைகளை மரத்தினால் செய்து சுவரில் நிரந்தரமாகப் பொருத்திப் பயன்படுத்தினர். இதன் அளவும் வசதிக்கு ஏற்றபடி அமையும். வளர்ச்சியடைந்துவரும் நாடுகளிலுள்ள பாடசாலைகள் பலவற்றில் வகுப்பறைக் கட்டிடங்கள் அரைச் சுவர்களுடன் அமைவதுண்டு. தேவையேற்படும்போது பல வகுப்பறைகளை ஒன்றாக்கி பரீட்சை மண்டபம் முதலியனவாகப் பயன்படுத்தும் தேவைகளுக்காக வகுப்பறைகளுக்கு இடையில் நிரந்தரமான பிரிசுவர்களும் இருப்பதில்லை. இதனால் கரும்பலகைகளை நிரந்தரமாகச் சுவரில் பொருத்தும் சாத்தியம் கிடையாது.


இவ்வாறான வேளைகளில் தனியான தாங்கிகளுடன் கூடியவைய கரும்பலகைகள் பயன்பட்டன. இவ்வாறான கரும்பலகைகள் பொதுவாக மரத்தினால் செய்யப்பட்டன. இவற்றுட் சிலவற்றில் கரும் பலகையும் தாங்கியும் தனித்தனியாக இருக்கும். மூன்று கால்களைக் கொண்ட தாங்கியை நிறுத்தி, அதில் பொருத்தப்பட்டிருக்கும் முளைகளின்மீது கரும்பலகையை வைத்துப் பய்ன்படுத்துவர். பொதுவாக இவ்வாறான வடிவமைப்புக்களில் கரும்பலகையின் உயரத்தை மாற்றும் வசதிக்காக பலகையைத் தாங்கும் முளைகளை ஏற்றியோ இறக்கியோ வைப்பதற்கான வசதிகள் இருப்பதுண்டு. கரும்பலகையின் இரண்டு பக்கங்களிலும் மை பூசப்பட்டிருப்பதால் ஒரு பக்கத்தில் எழுதியதை அழிக்காமல் மறு பக்கம் திருப்பி வைத்துப் பயன்படுத்த முடியும்.


தனியான தாங்கிகளைக் கொண்ட வேறொரு வகையில் கரும்பலகை தாங்கியில் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், இரண்டு கால்களையும் மேலே ஒரு நீள்சதுர வடிவான சட்டத்தையும் கொண்டிருக்கும் இவ்வகையில், சட்டத்துக்குள் பொருந்தும் படியான அளவைக் கொண்ட கரும்பலகை அதன் கிடை அச்சுப்பற்றிச் சுழலக் கூடிய வகையில் பொருத்தப்படும். இதன்மூலம் கரும்பலகையைச் சுழற்றுவதன் மூலம் பலகையின் இரண்டு பக்கங்களையும் இலகுவாகப் பயன்படுத்த முடியும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்பலகை&oldid=3112577" இருந்து மீள்விக்கப்பட்டது