கருவூர்ப் பசுபதீசுரர் பாமாலை
கருவூர்ப் பசுபதீசுரர் பாமாலை என்பது ஒரு சிற்றிலக்கியம். இதனை இயற்றியவர் உறையூர் தே. பெரியசாமி பிள்ளை. இவர் திரு ஆனிலையப்பர் போற்றிப் பதிகம், சௌந்தரநாயகி தசகம் என்னும் பெயரில் வேறு இரண்டு சிற்றிலக்கியங்களையும் படைத்துள்ளார். இந்த நூல்களுக்கு முன்னுரை போல, சிறப்புப் பாயிரங்களை யாழ்ப்பாணம் நா. கதிரைவேற்பிள்ளை மூன்று பாடல்களைப் பாடியுள்ளார். இதில் ஆசிரியர் பெரியசாமி பிள்ளையின் ஊர், பண்பு, திறமை பற்றிய குறிப்புகள் உள்ளன.[1] கருவூர் ஆனிலையப்பர் கோயிலில் உள்ள சிவபெருமானைப் போற்றும் பாடல்களாக இவை உள்ளன.
எடுத்துக்காட்டு - பாடல்கள்
தொகுஇந்த நூலில் 30 விருத்தப் பாடல்கள் உள்ளன. அவை எப்படி உள்ளன என்று அறிந்துகொள்தற்காக மூன்று பாடல்கள் எடுத்துக்காட்டுகளாகத் தரப்படுகின்றன.[1]
காப்புச் செய்யுள்
எவன் பிரணவப் பொருள் என மறை இயம்புறும்
எவன் உரு இரு திணைக்கு இறை என இலக்குறும்
எவன் அடியவர் வினை எறி சிவன் அருள் சுதன்
அவன் இரு சரண் தொழுது அடைகுவம் கதியே.
- இது ஆனைமுகனை இரு திணைக் கடவுள் என்று போற்றுகிறது
பாடல் 11
வஞ்சமே புரியும் கொடு மனத்து எளிய மடந்தையர் மயல் கடல் ஆழ்ந்து
நெஞ்சமே மெலிந்து இங்கு உழிதராது எனை நின் இறைகழற்கு அன்பன் ஆக்கினையே
கஞ்சமேல் அயன் மால் இந்திரன் முதலாம் கடவுளர் கை தொழுது ஏத்தும்
மஞ்சம் மேன்மேல் ஓங்கு அகன் பணைக் கருவூர் ஆனிலைப் பசுபதீசுரனே
பாடல் 12
தேம் பதுமத்தம் பொகுட்டில் உறையும் திசைமுகப் பிரமனார் வாழ்வும்
பாம்பணைத் துயில் கூர் மாயவன் வாழ்வும் பண்ணவர்க்கு இறையவன் வாழ்வும்
வேம்பென வெறுத்தேன் கனவிலும் வேண்டேன் வேண்டல் தின் அடி பணி ஒன்றே
வாம்பிர நதி மேல் கரை அமல் கருவூர் ஆனிலைப் பசுபதீச்சுரனே
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 கருவூர்ப் பசுபதீசுரர் பாமாலை, திரு ஆனிலையப்பர் போற்றிப் பதிகம், சௌந்தரநாயகி சதகம் - நூலாசிரியர் தே. பெரியசாமி பிள்ளை, பொருளாளர், சைவ சித்தாந்த சபை, உறையூர் - பதிப்பித்தவர்: க. பொ. சி. முத்துக்கருப்ப பிள்ளை, லாலாபேட்டை கிழார், நூலாசிரியர் பெரியசாமி பிள்ளையின் தாய்மாமன் - பதிப்பு : ஸ்ரீ வாணி விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், ஆண்டு 1911