கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை

கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்பவன் சங்ககால சேர மன்னன் ஆவான். இவனே கடைச்சங்ககால சேரர்களில் முதல் மன்னனாக அறியப்படுபவன். கருவூர் ஏறிய என்ற இவன் புணைப்பெயரைக் கொண்டு கருவூரை தலைநகராக்கி ஆண்ட முதல் சேரன் இவனென்று அறியலாம். ஒள்வாள் என்பது இவன் ஒளி படைத்த வாளைக்கொண்டவன் என்பதை கூறுகிறது.

இவனை நரிவெரூஉத்தலையார் புறநானூற்றுப் பாடலில் கூறியிருக்கிறார். இவனை நேரில் கண்டதும் பிணம் தின்னும் நரியே வெறுக்கும்படியாக இருந்த இவரது தலை மாறி, தன் முந்தைய நல்லுடம்பைப் பெற்றார் என்று கூறப்படுகிறது. [1]

பாடலில் புலவர் இவனைக் ‘கானக நாடன்’ எனக் குறிப்பிடுகிறார். எருமை போன்ற கற்களுக்கு இடையே, மாடுகள் மேய்வது போல யானைகள் மிகுதியாக மேயும் நாடு இவன் நாடு.

அருளும் அன்பும் நீக்கி வாழ்பவர்களுக்கு நிரையம் (நரகம்) கிடைக்கும். அவர்களோடு ஒருவனாகச் சேராமல் குழந்தையைக் காப்பாற்றுபவர்கள் போல நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று புலவர் இந்தப் பாடலில் இந்த மன்னனுக்கு அறிவுரை கூறுகிறார்.

அடிக்குறிப்பு தொகு

  1. புறநானூறு 5-ம் பாடலின் அடிக்குறிப்பு தெரிவிக்கிறது.