கலங்கற்றன்மை
கலங்கற்றன்மை (Turbidity) என்பது, பொதுவாக வெறும் கண்ணுக்குத் தெரியாத சிறு துணிக்கைகள் பெரும் எண்ணிக்கையில் நீர்மம் ஒன்றில் தொங்கல் நிலையில் காணப்படும்போது அந்நீர்மம் கலங்கிய நிலையில் இருப்பதைக் குறிக்கும். கலங்கற்றன்மையை அளப்பது, நீரின் தரத்தைக் கண்டறிவதற்கான முக்கிய சோதனை ஆகும்.
நீர்மங்கள், பல்வேறு அளவுகளிலான திண்மப் பொருட்களைத் தொங்கல் நிலையில் கொண்டிருக்கக்கூடும். இவ்வாறு தொங்கல் நிலையில் உள்ள துணிக்கைகள் போதிய அளவு பெரியனவாகவும், எடை கொண்டனவாகவும் இருந்தால், அவை விரைவாக அந்நீர்மம் இருக்கும் கலத்தின் அடிப்பகுதியில் படிந்துவிடும். சிறிய, எடை குறைவான துணிக்கைகள் மிக மெதுவாகவே அடியிற் படிகின்றன. நீர்மம் அடிக்கடி கலக்கப்பட்டாலோ, துணிக்கைகள் கூழ் நிலையில் இருந்தாலோ துணிக்கைகள் அடியில் படியாமலேயே இருக்கவும் கூடும். இவ்வாறான சிறிய துணிக்கைகள் நீர்மங்களைக் கலங்கல் நிலையில் வைத்திருக்கின்றன.
கலங்கற்றன்மை அல்லது மங்கற்றன்மை கண்ணாடி, நெகிழி போன்ற திண்மப் பொருட்கள் தொடர்பிலும் பயன்படுகின்றன. நெகிழி உற்பத்தியில், மங்கற்றன்மை என்பது, உட்புகும் ஒளியின் திசையில் இருந்து, 2.5°க்கு மேல் விலகிச் செல்லும் ஒளியின் நூற்று வீதத்தால் குறிக்கப்படுகிறது.[1]
காரணங்கள்
தொகுதிறந்த நீரில் தாவர மிதவை நுண்ணுயிரிகளின் வளர்ச்சியால் கலங்கற்றன்மை ஏற்படலாம். கட்டுமானம், அகழ்வு வேலை, வேளாண்மை போன்ற நிலத்தைக் குழப்புகின்ற மனித நடவடிக்கைகளால், மழைக் காலங்களில் வழிந்தோடும் நீருடன் கலக்கும் அதிக அளவான படிவுகள் நீர்நிலைகளிற் கலப்பதால் நீர் கலங்கற்றன்மை பெறுகிறது. கரைகள் அரிக்கப்படுவதாலும், நகரப் பகுதிகளில் சாலைகள், பாலங்கள், வண்டிகள் தரிப்பிடங்கள் போன்றவற்றினூடாக வடிந்தோடும் நீர் மாசடைவதாலும், அருகில் இருக்கக்கூடிய நீர்நிலைகள் பெருமளவு கலங்கற்றன்மை கொண்டனவாக மாறுகின்றன.[2]
குடிநீரில் எவ்வளவு அதிக அளவில் கலங்கற்றன்மை காணப்படுகின்றதோ இரையகக்குடலிய நோய்கள் உருவாவதற்கான வாய்ப்பும் கூடுதலாகக் காணப்படும்.[3] நீரில் தொங்கல் நிலையில் உள்ள துணிக்கைகளில் தீநுண்மங்களும், பக்டீரியாக்களும் ஒட்டியிருக்கக்கூடும் என்பதால், நோயெதிர்ப்புத்திறன் குறைவாக உள்ளவர்களுக்கு இது பெரிய பிரச்சினையாக இருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Haze technical definition". Archived from the original on 2015-08-22. பார்க்கப்பட்ட நாள் 2016-09-18.
- ↑ U.S. Environmental Protection Agency (EPA). Washington, D.C. "National Management Measures to Control Nonpoint Source Pollution from Urban Areas." Chapters 7 and 8. Document No. EPA 841-B-05-004. November 2005.
- ↑ A.G. Mann, C.C. Tam, C.D. Higgins, & L.C. Lodrigues. (2007). The association between drinking water turbidity and gastrointestinal illness: a systematic review. BMC Public Health. 7(256): 1 - 7