பல்கல உயிரினங்களின் கலங்களை பொறிமுறை ரீதியாகவும், முதலுருவை இணைக்கும் வகையிலும் செயற்படும் கலப்புற அமைப்புகள் கலச்சந்தி அல்லது கலச்சந்திப்புகள் [1] எனப்படும். தாவரங்களில் 'முதலுரு இணைப்பு' எனப்படும் ஒரு வகைத் தொடர்பாடல் சந்தி காணப்படுகின்றது. எனினும் தாவரங்களை விட விலங்குகளிலேயே இச்சந்திகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. விலங்குகளின் மேலணி இழையங்களில் இக்கலச் சந்திகள் அதிகளவில் உள்ளன. இச்சந்திகள் பல்கல உயிரினத்தின் கலங்கள் சுயாதீனமாக இயங்குவதைத் தடுக்கின்றன.

விலங்கு இழையங்களிலுள்ள கலச்சந்தி வகைகள்

தொகு
 
விலங்கு இழையங்களிலுள்ள கலச்சந்தி வகைகள்

முள்ளதண்டுள்ள விலங்குகளில் பிரதானமாக மூன்று வகைக் கலச்சந்திகள் உள்ளன.

  • இறுக்கமான சந்தி (Tight junctions)[2]
  • ஒட்டல் சந்தி (anchoring junctions)
  • தொடர்பாடல் சந்தி (Gap junctions)

தாவரங்களில் முதலுரு இணைப்பு (Plasmodesma) தொடர்பாடல் சந்தியாகத் தொழிற்படும்.

ஒட்டல் சந்திகள்/ தாங்கும் சந்திகள்

தொகு

ஒரு கலத்தின் குழிய வன்கூட்டை இன்னொரு கலத்தின் குழியவன்கூடுடன் பொறிமுறை ரீதியில் இணைக்கும் சந்திகளே ஒட்டல் சந்திகளாகும். மூன்று வகை ஒட்டற் சந்திகள் அறியப்பட்டுள்ளன.

  • தெசுமோசோம்
  • அரை-தெசுமோசோம்
  • அட்ஹெரென்ஸ் சந்தி [3]
ஒட்டல் சந்தி குழியவன்கூட்டு இணைப்பான் மென்சவ்வு இணைப்பான் கலத்துடன் இணைக்கப்படுவது
தெசுமோசோம் இடைத்தர இழைகள் Cadherin புரதம் அருகிலுள்ள கலம்
அரை-தெசுமோசோம் இடைத்தர இழைகள் Integrin புரதம் கலப்புறத் தாயம்
அட்ஹெரென்ஸ் சந்தி அக்தின் இழை (நுண்ணிழை) Cadherin/Integrins அருகிலுள்ள கலம்/ கலப்புறத் தாயம்

தொடர்பாடல் சந்தி

தொகு
 
தொடர்பாடல் சந்தி கட்டமைப்பு

கலங்களுக்கிடையில் நேரடியான குழியவுருத் தொடர்பை ஏற்படுத்த உதவும் கலச் சந்திகள் தொடர்பாடல் சந்திகளாகும். இவற்றின் உதவியால் கலப்புறத் தாயத்துக்கு இரசாயனத் தொடர்பாடலுக்காகத் தேவையில்லாமல் சுரத்தலைத் தவிர்க்க முடிகின்றது. தொடர்பாடல் சந்தியினூடாக ஒரு கலத்திலுள்ள கரையம் நேரடியாக பரவல் மூலம் அடுத்துள்ள கலத்தை அடைகின்றது. இச்சந்தியூடாக மின்சைகைகளையும் கடத்த முடியும். அடுத்துள்ள இரு கலங்களின் மென்சவ்வூடாகவும் செல்லும் 6 மென்சவ்வுக்குக் குறுக்கான மையத்தில் துளையுள்ள connexin புரத மூலக்கூறுகளால் இத் தொடர்பாடல் சந்தி ஆக்கப்பட்டுள்ளது. இப்புரதங்களைக் கொண்டு தொடர்பாடற் சந்தியின் துவாரத்தைத் திறந்து மூட முடியும்; தேர்ந்து பதார்த்தங்களைக் கடத்த முடியும். முளைய விருத்தியின் போது கலங்கள் அருகிலுள்ள கலங்களை அறிந்து கொண்டு இழைய வியத்தத்துக்கு உள்ளாவதில் இத் தொடர்பாடல் சந்தி முக்கிய பங்கு வகிக்கின்றது. இதயத் தசை சீராகச் சுருங்குவதில் மின் சைகையை அனைத்து இதயத் தசைக் கலங்களுக்கும் கடத்துவதன் மூலம் இச்சந்தி முக்கிய பங்களிப்பு வகிக்கிறது. மூளையில் நியூரான்களுக்கிடையேயான தொடர்பைப் பேணுவதிலும் இது உதவுகின்றது.

இறுக்கமான சந்தி/ நெருக்கமான சந்தி

தொகு
 
இறுக்கமான சந்தி கட்டமைப்பு

அருகருகே உள்ள கலங்களின் மென்சவ்வுகளை ஒன்றாக ஒரு தகடு போல இணைக்கும் சந்திகள் இறுக்கமான சந்திகளாகும். இச்சந்திகள் கலத்திடைவெளி ஊடாக சிறிய மூலக்கூறுகள் கசிந்து செல்வதைத் தடுக்கின்றன. இச்சந்திகள் பொதுவாக முள்ளந்தண்டுளி விலங்குகளின் மேலணி இழையங்களில் பதார்த்தக் கசிவைத் தடுப்பதற்காக உள்ளன. குடலின் சடைமுளைக் கலங்களை ஒன்றாக இயங்கும் உறிஞ்சற் படையாகத் தொழிற்பட இக்கலச் சந்தி வகை பெரும் பங்களிப்பைப் புரிகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. Mitchell, Richard Sheppard; Kumar, Vinay; Abbas, Abul K.; Fausto, Nelson. "Ch. 13: Box on morphology of squamous cell carcinoma". Robbins Basic Pathology (8th ed.). Philadelphia: Saunders. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4160-2973-7.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. Andrew L Harris and Darren Locke (2009). Connexins, A Guide. New York: Springer. p. 574. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-934115-46-6.
  3. Yan HH, Mruk DD, Lee WM, Cheng CY (2008). "Cross-talk between tight and anchoring junctions-lesson from the testis". Adv. Exp. Med. Biol. 636: 234–54. doi:10.1007/978-0-387-09597-4_13. பப்மெட்:19856171. http://dx.doi.org/10.1007/978-0-387-09597-4_13. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலச்_சந்தி&oldid=2746377" இலிருந்து மீள்விக்கப்பட்டது