கலப்புப் பொருளாதாரம்
கலப்புப் பொருளாதாரம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட பொருளாதார முறைகளின் அம்சங்களை உள்ளடக்கிய ஒரு பொருளாதார முறை ஆகும். பொதுவாக இது, தனியுடைமை மற்றும் அரசுடைமை நிறுவனங்கள் இரண்டையும் கொண்ட அல்லது முதலாளித்துவம், சோசலிசம் ஆகிய இரண்டினதும் கூறுகளைக்கொண்ட அல்லது சந்தைப் பொருளாதாரம், திட்டமிட்ட பொருளாதாரம் இரண்டினதும் கலப்பாக அமைந்த ஒரு பொருளாதாரம் ஆகும்.
கலப்புப் பொருளாதாரம் என்பதற்கு "ஒரு" வரைவிலக்கணம் கூறமுடியாது. ஆனால் கலப்புப் பொருளாதாரத்தோடு தொடர்புடைய அம்சங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட முடியும்: மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டமிடலுடன் கூடிய ஓரளவு தனியார் பொருளியல் சுதந்திரம். இப் பொருளாதாரத் திட்டமிடல், சூழலியம், சமுதாய நலம் தொடர்பான தலையீடு ஆகவோ, சில உற்பத்திச் சாதனங்களை அரச உடைமையாக வைத்திருத்தல் என்பவற்றை உள்ளடக்கலாம்.