கல்முனைக்குடி நாகூர் ஆண்டகை தர்ஹா

நாகூர் ஆண்டகை தர்ஹா என்பது இலங்கையின் கிழக்கே கல்முனைக்குடி கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஆகும். இது வங்காள விரிகுடாக் கடலோரத்தில் அமைந்துள்ளதினால் இது கடற்கரைப் பள்ளிவாசல் என்றும் அழைக்கப்படுகின்றது. ஏழு அடுக்குகளைக் கொண்ட பிரமாண்டமான மினாரும், மூன்று அடுக்குகளைக் கொண்ட சிறிய மினாரும் இப்பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ளன.

கல்முனைக்குடி நாகூர் ஆண்டகை தர்கா
கல்முனைக்குடி நாகூர் ஆண்டகை தர்கா

வரலாறுதொகு

கரவாகு (கல்முனைக்குடி) மக்களுக்கு மட்டுமல்லாது, அதை அண்டியுள்ள அனைத்து கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கல்முனைக்குடி நாகூர் ஆண்டகை தர்கா புனிதமானதொன்றாகும். இதன் அண்மையிலேயே கல்முனைக் குடாக்கடல் உள்ளது. குடாக்கடல் துறைமுகத்திற்கு ஆதிகாலம் தொட்டே கப்பல்கள் வந்திருக்கின்றன. கடல் வர்த்தகத்தைத் தொழிலாகக் கொண்டிருந்த அரேபிய மற்றும் அண்மைய நாடுகளிலிருந்த முஸ்லிம்கள் துறைமுகங்களில் குடியேறி அங்கு திருமணம் முடித்து வாழ்ந்திருந்தனர். அதே போல் கல்முனையிலும் முஸ்லிம்களின் குடியேற்றம் ஏற்பட்டு, அவர்கள் " முனைக்குடியினர் " என்றுஅழைக்கப்படலாயினர். துறைமுகங்களில் குடியேறி வாழ்ந்திருந்த முஸ்லிம்களின் வர்த்தகம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரினால் தடுக்கப்பட்டபோது அவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டனர்.

நாகூர் ஆண்டகை அவர்கள் கல்முனைக்குடிக்கு எந்தக் காலகட்டத்தில் வந்து சென்றார்கள் என்பது தெளிவாக இல்லாத போதும் கி.பி. 1637ம் ஆண்டு ஒல்லாந்தர் கல்முனைக் குடாக் கடற்கரையை அடைந்தபோது, அங்கு வெண்ணிற ஆடை அணிந்த முஸ்லிம்கள் இருந்ததாக ஒல்லாந்தரின் குறிப்பொன்று கூறுகின்றது[1]. இது கி.பி. 1637ம் ஆண்டுக்கு முன்பிருந்தே கல்முனையில் முஸ்லிம்கள் வாழ்ந்ததைக் காட்டுகிறது. நாகூர் ஆண்டகை அவர்கள் கல்முனைக்குடிக்கு வந்து சென்றதன் அரை நூற்றாண்டுக்குப் பின்னர் டச்சுத்தளபதி வில்லியம் ஜாக்கபஸ் கோஸ்டர் நான்கு கப்பல்களுடன் கல்முனையில் வந்து இறங்கினான். அப்போது கண்டி அரசனாக இருந்த இரண்டாவது இராசசிங்கன் 28.03.1638 ஆம் திகதி 'கொணறுவ' என்ற இடத்தில் போர்த்துக்கேயரை தோற்கடித்து அழித்தான் என்னும் செய்தியை அறிந்து அவன் கல்முனையிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்றான். இந்தக் குறிப்பு A History of Ceylon என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.[2]

கடற்கரைப் பள்ளிவாசல் ஏறத்தாள 400 வருடங்களுக்கு முன்னரே நாகூர் ஆண்டகை அவர்களால் அமைக்கப்பட்டிருந்தது. அப்பள்ளிவாசல் கடற்கோளினால் காவு கொள்ளப்பட்டதன் பின்பு கி.பி. 1806 ஆம் ஆண்டு தற்போதுள்ள இடத்தில் பெரியார் முகம்மதுத் தம்பிலெவ்வை அவர்களால் தற்போதிருக்கும் தர்ஹா அமைக்கப்பட்டது.[3] இந்தத் தர்ஹா பல முறை புனருத்தானம் செய்யப்பட்டு தற்போதைய தோற்றத்தைப் பெற்றுள்ளது. கல்முனைக்குடி நாகூர் ஆண்டகை தர்காவில் ஆண்டு தோறும் ஜமாதுல் ஆகிர் மாதம் பிறை 01ல் கொடியேற்றப்பட்டு 12 நாட்கள் நாகூர் ஆண்டகை அவர்களின் புகழ்பாடி விழா கொண்டாடப்படுகின்றது.

மேற்கோள்கள்தொகு

  1. அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்
  2. A History of Ceylon by Fr S.G.Prera. S.J. Revised Edition, Page - 104.
  3. காசிம்ஜீ கண்ட கரவாகு வரலாறு.