கல வட்டம்
ஒரு கலத்தின் கலப்பிரிவின் ஆரம்பத்துக்கும், அடுத்த கலப்பிரிவின் ஆரம்பத்துக்கும் இடையே கலத்தில் நடைபெறும் சகல செயற்பாடுகளும் ஒருமித்து கல வட்டம் (cell cycle, அல்லது cell-division cycle) என அழைக்கப்படும். கலவட்டத்தின் இறுதியில் புதிய கலங்கள் தோற்றுவிக்கப்படும். பாக்டீரியா கலங்களில் இருகூற்றுப் பிளவு இறுதியாக நடைபெற்று இரு புதிய கலங்கள் தோற்றுவிக்கப்படும். யூக்கரியோட்டா (மெய்க்கருவுயிரி) கலங்களில் தாய்க்கலத்தை ஒத்த இரு மகட்கலங்கள் தோற்றுவிக்கப்படும் இழையுருப்பிரிவோ அல்லது புணரி உருவாக்கத்துக்காக நடைபெறும் ஒடுக்கற்பிரிவு நடைபெறலாம். பொதுவாக இழையுருப்பிரிவு இரண்டு மகட் கலங்களையும், ஒடுக்கற்பிரிவு நான்கு மகட் கலங்களையும் தோற்றுவிக்கின்றன. கலப்பிரிவு கல வட்டத்தை எல்லைப்படுத்தும் அவத்தையாக இருந்தாலும், அனேகமான கலங்களில் அது கல வட்டத்தின் குறுகிய நேரத்தையே பிடித்திருக்கும். கல வட்டத்தில் கலப்பிரிவு (இழையுருப்பிரிவு அல்லது ஒடுக்கற்பிரிவு) நடைபெறாத அவத்தை இடையவத்தை என அழைக்கப்படும். இடையவத்தையின் போதே கலம் வளர்ச்சியடைவதுடன் ஊட்டச்சத்துக்களையும் சேமிக்கின்றது. பொதுவாக கலவட்டத்தில் இடையவத்தையே மிக நீண்ட அவத்தையாகும். போதியளவு வளர்ச்சியடைந்த பிற்பாடே கலப்பிரிவு நடைபெறும். பல கல வட்டங்கள் பூர்த்தியாக்கப்படுவதாலேயே கருக்கட்டலின் போது உருவாகும் தனிக்கல நுகம் வளர்ச்சியடைந்து பல்கல முழுவுடலி ஆகின்றது. தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் கலத்திரளில் இடையவத்தை, இழையுருப்பிரிவு அவத்தை ஆகிய இரு அவத்தைகளே உள்ளன. எனினும் வியத்தமடைந்த கலங்கள் G0 எனும் நிலைக்கும் செல்கின்றன. இது இறுதி கல வட்டத்தின் இறுதியில் பெறப்படும் அவத்தையாகும். இந்நிலையை அடைந்த கலங்கள் மீண்டும் கலவட்டத்துக்குள் சென்று புதிய கலங்களைத் தோற்றுவிப்பதில்லை. தூண்டப்படும் போது சில G0 அவத்தைக் கலங்கள் மீண்டும் கலவட்டத்துக்குள் உள்வாங்கப்படலாம். கல வட்ட அவத்தைகள்:
அவத்தை | உப அவத்தை/ விளக்கம் | சுருக்கக் குறியீடு | |
---|---|---|---|
வியத்தமடைந்த நிலை | Gap 0 | G0 | கல வட்டம் நிறுத்தப்பட்டு கலப்பிரிவுக்குட்படாத நிலை. |
இடையவத்தை | Gap 1 | G1 | இவ்வவத்தையின் போது அனுசேப வீதம் உயர்ந்தளவில் இருக்கும். கலத்தினுள் புதிய பதார்த்தங்கள் தொகுக்கப்படும். டி.என்.ஏ தொகுப்பு நடைபெற அனைத்தும் தயாராக உள்ளதா என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் S அவத்தை ஆரம்பமாகும். |
Synthesis | S | டி.என்.ஏ இரட்டித்தல் இந்த அவத்தையில் நடைபெறும். | |
Gap 2 | G2 | கலம் மேலும் வளர்ச்சியடையும். புன்னங்கங்கள் இரட்டிக்கும். இழையுருப்பிரிவுக்கான தயார் நிலை, டி.என்.ஏ இரட்டித்தல் S அவத்தையில் சரியாக நடைபெற்றமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இழையுருப்பிரிவு ஆரம்பிக்கும். | |
கலப்பிரிவு | இழையுருப்பிரிவு | M | கலம் இரட்டிப்படைந்து இரண்டு புதிய மகட் கலங்கள் உருவாக்கப்படும். இவை தமக்குரிய கல வட்டத்தை ஆரம்பிக்கின்றன. |
மேற்கோள்கள்
தொகு- ↑ Cooper GM (2000). "Chapter 14: The Eukaryotic Cell Cycle". The cell: a molecular approach (2nd ed.). Washington, D.C: ASM Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87893-106-6.
{{cite book}}
: Unknown parameter|chapterurl=
ignored (help)