கழற்சிங்க நாயனார்
கழற்சிங்க நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[1]. இவர் பல்லவர் குலத்திலே தோன்றியவர்[2]; சிவனடி அன்றி வேறொன்றை அறிவினிற் குறியாதவர்; வடபுலவேந்தரை வென்று அறநெறியில் நின்று நாடாண்ட வேந்தராகிய இவர் ஒரு நாள் திருவாரூரை அடைந்து திருக்கோயிலை வணங்கச் சென்றார். அப்பொழுது திருக்கோயிலை வலம்வந்து திருப்பூ மண்டபத்தை அடைந்த பட்டத்தரசி அங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலரொன்றை எடுத்து மோந்தாள். அவள் கையில் புதுமலரைக் கண்ட அங்குவந்த செருத்துணையார் என்னும் சிவனடியார் இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை மோந்தாள் என்று வெகுண்டு அம்மலரை எடுத்து மோந்த மூக்கினை கத்தியால் அரிந்தார். பட்டத்தரசி கீழே விழுந்து அரற்றி அழுதாள். உள்ளே பூங்கோயில் இறைவரைப் பணிந்து வெளியேவந்த கழற்சிங்கர், அரசியின் புலம்பலை அறிந்து வந்து மிகவும் வெகுண்டு 'அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர் யார்?' என வினவினார் .அருகே நின்ற செருத்துணையார், 'இவள் இறைவர்க்குச் சாத்துதற்குரிய மலரை எடுத்து மோந்தமையாலே நானே இதைச் செய்தேன்' என்றார். அப்போது கழற்சிங்கர் அவரை நோக்கி, 'பூவை எடுத்த கையையன்றோ முதலில் வெட்டுதல் வேண்டும்? என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப் பட்டத்தரசியின் கையைத் தடிந்தார். இத்தகைய அரிய தொண்டினைச் செய்த கழற்சிங்க நாயனார் சைவநெறி தழைத்தோங்க அரசாண்டு சிவபெருமான் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் பெருவாழ்வு பெற்றார்.
கழற்சிங்க நாயனார் | |
---|---|
பெயர்: | கழற்சிங்க நாயனார் |
குலம்: | குறுநில மன்னர் |
பூசை நாள்: | வைகாசி பரணி |
அவதாரத் தலம்: | திருக்கச்சி |
முக்தித் தலம்: | திருக்கச்சி |
- "கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
- காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத்தொகை.
பல்லவ மன்னரான மூன்றாம் நந்திவர்மனே, கழற்சிங்க நாயனார் என்பது ராசமாணிக்கனாரின் பெரிய புராண ஆராய்ச்சி நூல் தகவல். இராஷ்டிர கூட அரச மரபில் வந்த சிறந்த சமண பக்தரான அமோகவர்ஷ நிருபதுங்கன் மகள் சங்கா தான் தண்டிக்கப்பட்ட பட்டத்துஅரசி என்பதும் ராசமாணிக்கனாரின் ஆராய்ச்சி முடிவு.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 63 நாயன்மார்கள், ed. (01 மார்ச் 2011). கழற்சிங்க நாயனார். தினமலர் நாளிதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: numeric names: editors list (link) - ↑ மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ http://www.tamilvu.org/library/nationalized/pdf/03-rasamanickam/periyapuranamarachi.pdf
- பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்