கழார் என்பது சங்ககாலத்தில் சிறப்புற்றிருந்த ஊர்களில் ஒன்று. கழை என்னும் சொல் மூங்கிலைக் குறிக்கும். ஆற்றோரம் மூங்கில் புதர் இருந்த ஆற்றுத்துறை கழார் (கழை ஆர்ந்திருந்த இடம்) எனப்பட்டது. [1]

சங்கப் பாடல்கள் பலவற்றில் இந்த ஊர் சிறப்பித்துப் பேசப்படுகிறது.

கழாரில் நீச்சல் விழா தொகு

  • நீச்சல் நடனம் Synchronized Swimming

கழார்த்துறையில் ஆட்டனத்தி புனலாடினான். அப்போது அவன் தன் ஆற்றலை வெளிப்படுத்தி பல சாகசங்களைச் செய்து காட்டினான். அவற்றை அரசன் கரிகாலன் கண்டு களித்தான். ஆட்டனத்திக்கும், காவிரி என்பவளுக்கும் இடையில் நடந்த நீச்சல்நடனப் போட்டிக்கு நடுவராகவும் விளங்கினான்.

இன்னிசை முழங்கிற்று. ஆட்டனத்தி தன் காலில் அணிந்திருந்த கழல் நீருக்கு வெளியே தெரியும்படி புரட்டிக் காட்டினான். வயிற்றிலிருந்த பொலம்பாண்டில் மணி ஒலிக்கும்படி தன் உடம்பையே நீளவாக்கில் உருட்டிக் காட்டினான். [2]

கழார் முறையீட்டு மன்றம் தொகு

கழார் நகரைத் தலைநகராகக் கொண்டு மத்தி என்னும் அரசன் ஆண்டுவந்த காலத்தில் மக்கள் முறையீடு செய்துகொள்ளும் வழக்குமன்றம் ஒன்று இருந்தது. பரத்தையைப் பிரிந்து மனை திரும்பிய தலைவனைத் தலைவி அவனை வீட்டிற்குள் நுழைய விடவில்லை. ‘இனி அவ்வாறு செய்யமாட்டேன்’ என்று தலைவியிடம் கெஞ்சுகிறான். அவன் தன் வாக்குறுதியை உறுதிப்படுத்திக்கொள்ளக் கழார் ‘நல்லோர் நல்லோர்’ கூடும் மன்றத்தில் முறையிட்டுக்கொள்ளுமாறு தலைவி கூறித் தலைவனை அனுப்பிவிடுகிறாள். [3]

கழார் சோற்று மன்றம் (அன்னதானச் சத்திரம்) தொகு

கழாஅர் எனப்பட்ட இவ்வூர் வெல்போர்ச் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அங்குக் கட்டுக்கடங்காப் பெருஞ்சோறு சமைத்து வந்தவர்களுக்கெல்லாம் கொடையாக வழங்கப்பட்டது. ‘விடக்கு’ என்னும் கறிக்குழம்புப் பிரியாணி வழங்கப்பட்டது. பெருங்காற்று வீசிப் பறக்க முடியாத காலத்தில் அங்கு இருந்த மாசில்லாத மரத்தில் காக்கைகள் அமர்ந்திருந்து அவர்கள் இடும் பலிச்சோற்றை உண்ணுமாம். - கழார்க் கீரன் எயிற்றியார் - நற்றிணை 281 மத்தி அரசன் ஆண்டுவந்த இந்தக் கழார் போன்றது தலைவியின் இளமை என்கிறார் புலவர். அங்குள்ள தாமரைப் பொய்கையில் வள்ளைக் கொடிகளை அறுத்துக்கொண்டு வாளைமீன்களை மேய்ந்த நீர்நாய் அங்குள்ள பிரம்புமுள் புதரில் பதுங்கிக்கொள்ளுமாம். [4]

கழார் அரசன் மத்தி தொகு

கழார் முன்துறை ‘பரதவர் கோமான் பல்வேல் மத்தி’க்கு உரியது. [5]

கழார்ப் பெருந்துறையில் ஆட்டனத்தியும், காவிரி என்பவளும் சேர்ந்து நீராடினர். ஆட்டனத்தியின் அழகினை விரும்பிய காவிரி தன் கூந்தலில் மறைத்து அவனை ஆற்றோடு இழுத்துச் சென்றாள். அப்போது காவிரியை ஆறு அடித்துச் சென்றுவிட்டது. ஆட்டனத்தி கரையில் ஒதுக்கப்பட்டுக் கிடந்தான். மருதி என்பவள் அவனைக் காப்பாற்றி அவனோடு வாழ்ந்துவந்தாள்.

(ஆதிமந்தி என்பவள் அரசன் கரிகாலன் மகள்.) அவள் ஆட்டனத்தியைக் காதலித்தாள். காதலன் ஆட்டனத்தியைக் காவிரியாறு கொண்டுசெல்லவில்லை என உறுதியாக நம்பினாள். ஊர் ஊராகத் தேடிக்கொண்டு ஆற்றோரமாகச் சென்றாள். உண்மை தெரிந்துகொண்ட மருதி ஆட்டனத்தியை ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்டுத் தான்மட்டும் கடலில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டாள். [6]

அடிக்குறிப்பு தொகு

  1. காவிரி ஆற்றுப் படுகையில் காவிரியிலிருந்து பிரியும் ஆறுகள் பல. அவை வெள்ளம் வராத காலத்தில் மணல் வாரித் தூய்மை செய்யப்படும். அப்போது காவிரியின் ஊற்றுநீர்க் கழிவு இந்தக் கழார் ஆற்றில் திருப்பி விடப்படும். கழிவு திருப்பி விடப்பட்ட ஆறு கழார். இந்தக் கழார்ஆறு பிரியுமிடத்தில் இருந்த ஊர் கழார் எனக் கருதுதலும் ஒருவகை மொழியியல் கண்ணோட்டம்.
  2. பரணர் – அகம் 376
  3. ஓரம்போகியார் - ஐங்குறுநூறு 61
  4. பரணர் – அகம் 5
  5. பரணர் – அகம் 226
  6. பரணர் – அகம் 222, 376,
"https://ta.wikipedia.org/w/index.php?title=கழார்&oldid=1636374" இலிருந்து மீள்விக்கப்பட்டது