கழுநீர் (மலர்)

கழுநீர் மலர் பொய்கை [1] முதலான நீர்நிலைகளில் பூக்கும்.

சங்கப்பாடல் தரும் செய்திகள்

தொகு
  • வையை ஆற்று வெள்ளத்தில் வந்த மலர்களில் ஒன்று கழுநீர். [2]
  • திருப்பரங்குன்றச் சுனை, [3] கச்சிமாநகர மதில்புற அகழி [4] முதலான இடங்களில் பூத்திருந்தன.
  • எருமை தாமரையை விட கழுநீரை விரும்பி மேயும். [5] [6]
  • மாலையாகத் தொடுப்பர். [7] [8] [9] [10]
  • காதலர் படுக்கையில் தொங்கும் சரமாகப் பயன்படுத்தப்பட்டது. [11]
  • கோவலனும் மாதவியும் குவளை, கழுநீர் மலர்ப் படலை (படுக்கைக்கு மேலே தொங்கும் சரம்) மேல் மகிழ்ந்திருந்தனராம். [12]
  • கோவலனும், கண்ணகியும் சேர்ந்து மகிழ்ந்தபோது மல்லிகை மாலையும் கழுநீர்ப் பிணையலும் அணிந்திர்ந்தனராம். [13]
  • கோவலனும் கண்ணகியும் இடைநிலை மாடத்தில் இருந்தபோது வீசிய தென்றல் காற்றில் பல மலர்களின் மணம் வீசிற்றாம். அவற்றில் ஒன்று கழுநீர்ப்பூவின் மணம். [14]
  • கோவலன் பிரிந்தபோது மாதவி அவனுக்குக் முடங்கல்(கடிதம்) எழுதி அனுப்பினாள். முடங்கல் தாழைமடலில் எழுதப்பட்டது. அந்த முடங்கலை நடுவில் வைத்து ஒப்பனை செய்வதற்கு பல மலர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று செங்கழுநீர். இது வேரோடு வைத்து ஒப்பனை செய்யப்பட்டிருந்தது. (பிற: சண்பகம், மாதவி, தமாலம், கருமுகை, மல்லிகை, கத்திகை) [15]
  • வைகையில் நீராடிய மகளிர் மணலில் பாவை எழுதினர். கயத்தில் பூத்திருந்த கழுநீர்ப் பூக்கள் வெள்ளத்தில் வந்து எழுதிய பாவை மேல் நின்றுவிட்டது என அவர்கள் அழுதனராம். [16]
  • கண்ணீர் விழுதலைக் கூறும்போது கழுநீர் மலர் உவமையாக்கப்படும். [17]

அடிக்குறிப்பு

தொகு
  1. கழுநீர் பொரிந்த கண் அகன் பொய்கை - மதுரைக்காஞ்சி 171,
  2. பரிபாடல் 12-78
  3. அந்துவன் பாடிய சந்து கெழு நெடுவரை இன் தீம் பைஞ்சுனை ஈர் அணிப் பொலிந்த தண்ணறுங் கழுநீர் - அகநானூறு 59-14,
  4. கழுநீர், தாமரை, குவளை, ஆம்பல் மணிமேகலை 28-20
  5. கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை பழனத் தாமரைப் பனிமலர் முனைஇ - நற்றிணை 260-1,
  6. வள் இதழ் கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை - சிறுபாணாற்றுப்படை 43
  7. கழுநீர்ப் பிணையல் - சிலப்பதிகாரம் 13-21,
  8. கழுநீர்க் கோதை - சிலப்பதிகாரம் 13- 119,
  9. அஞ்செங் கழுநீர் ஆயிதழ் பிணிப்போர் - மணிமேகலை 19-88,
  10. ஒண் செங் கழுநீர்க் கண்போல் ஆயிதழ் ஊசி போகிய சூழ்செய் மாலையன் - அகநானூறு 48-8,
  11. காதல் இன்துணை புணர்மார் ஆயிதழ்த் தண்ணறுங் கழுநீர் துணைப்ப - மதுரைக்காஞ்சி 551,
  12. சிலப்பதிகாரம் 4-40,
  13. சிலப்பதிகாரம் 2 -34,
  14. சிலப்பதிகாரம் 2-14,
  15. சிலப்பதிகாரம் 8-47,
  16. பரிபாடல் 7-23,
  17. கள் உக நடுங்கும் கழுநீர் போல ... கண்ணில் நீர் - சிலப்பதிகாரம் 5-236,
"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுநீர்_(மலர்)&oldid=1088719" இலிருந்து மீள்விக்கப்பட்டது