காடு (புதினம்)

காடு ஜெயமோகன் எழுதிய ஐந்தாவது நாவல். இதை 2003-ல் தமிழினி பதிப்பகம் வெளியிட்டது. ஏறத்தாழ நாநூறு பக்கங்கள் கொண்ட நாவல் இது. மழைக்கால இளவெயில்போல வாழ்க்கையில் அபூர்வமாக வந்து உடனேயே இல்லாமலாகும் முதற்காதலை இக்கதையில் சொல்லியிருப்பதாக ஆசிரியர் சொல்கிறார். இதன் இரண்டாவது பதிப்பு இப்போது கிடைக்கிறது.

கதைச் சுருக்கம்

தொகு

காடு நாவலின் கதாநாயகன் கிரிதரன். இவன் அப்பா எதிலும் பிடிப்பில்லாத மனிதர். அம்மா மிகவும் பரபரப்பும் பதற்றமும் கொண்டவள். மகனை முன்னேற்றவேண்டும் என்பதற்காக தன் அண்ணாவிடம் அவனை ஒப்படைக்கிறாள். அண்ணா மலையில் காடுகளை வெட்டுவதை குத்தகை எடுத்துச் செய்துவருகிறார். அவரது மனைவி அழகானவள். அவளுக்கும் அந்த வீட்டில் வேலைசெய்பவருக்கும் தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பில் பிறந்த மகள் அவருக்கு இருக்கிறாள். அவலட்சணமான பெண் அவள்

கிரிதரன் மாமாவின் ஊழியனாக காட்டுவேலையை மேற்பார்வையிட காட்டுக்குச் செல்கிறான். அங்கே குட்டப்பன் என்ற ஒருவனை அறிமுகம்செய்துகொள்கிறான்.குட்டப்பன் காட்டைப்பற்றி எல்லாமே தெரிந்தவன். சாகஸக்காரன். மிகநகைச்சுவையாக பேசுவான். அவனைத்தவிர அங்கே ரெசாலம் குரிசு போன்றவர்களும் இருக்கிறார்கள்

காட்டில் கிரிதரன் அய்யர் என்ற எஞ்சீனியரை சந்திக்கிறான். பேசிக்கொண்டே இருக்கும் இயல்புள்ள அய்யர் ஒரு அறிவுஜீவி. காட்டுக்கு வேலைக்கு வந்து காடு மீது காதல்கொண்டவர். அவரது தொடர்பால் கிரிதரன் இலக்கியம் இசை எல்லாவற்றையும் அறிகிறான்

காட்டில் கிரிதரன் அழகான கரியநிறமுள்ள ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவள் ஒரு ஆதிவாசிபெண்.நீலி என்று அவளுக்குப் பெயர். அவள்மேல் அவன் தீவிரமான காதல் கொள்கிறான். அவளைச் சந்திக்கச் சென்று இரவெல்லாம் காட்டில் அவள் வீட்டுமுன் நிற்கிறான். அவள் மெல்லமெல்ல அவனை விரும்புகிறாள்

நீலியை ஒரு மலைதெய்வமாகிய நீலி அம்மனாகவே கிரிதரன் மயங்குகிறான். அவள்மேல் காதலும் அச்சமும் கலந்த உணர்ச்சியே அவனுக்கு இருக்கிறது. ஆகவே அவன் அவளை தீண்டுவதே இல்லை.

இந்நிலையில் பெரும் மழை வருகிறது. மழையில் அவன் நீலியுடன் மலையுச்சிக்குச் சென்று குறிஞ்சி மலரை பார்க்கிறான். அந்த மலருக்கு அழகோ மணமோ இல்லை. அது 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் என்ற அபூர்வம் தவிர. அந்த மலரைப் பார்க்கும்போது ஏமாற்றம் ஏற்படுகிறது

காட்டுக்குள் கடுமையான விஷக்காய்ச்சல் பரவுகிறது. காட்டில் இருக்கும் மிஷனரி டாக்டர் நோயாளிகளைக் காப்பாற்றுகிறார். ஊருக்குள் சென்று மருந்து வாங்கி வரும் கிரிதரன் அப்போது நீலி காய்ச்சலில் இறந்துவிட்ட சேதியை கேட்கிறான். அவன் மனம் உடைகிறான்

அப்போது அவனுக்கு ஏற்கனவே அறிமுகமான புதிய எஞ்சீனியர் மேனனின் மனைவி அவனை தன் காமத்துக்கு பயன்படுத்திக்கொள்கிறாள். அவனது அந்த முதல் அனுபவம் நடக்கும்போது அவன் அந்த வீட்டுக்கு வெளியே நீலி அழுதுகொண்டு நிற்பதாக உணர்கிறான்.

இந்த இடத்தில் நாவல் முடிகிறது. ஆனால் கிரிதரன் முதிர்ந்து கிழவனாகி மகள் வீட்டுக்குச் செல்லும்போது அப்போது நாகரீக ஊராக ஆகிவிட்டிருந்த அந்த காட்டுப்பகுதியில் இறங்கி பார்க்கும்காட்சியில் கதை தொடங்குகிறது. நினைவுகள் முன்னும் பின்னும் கலந்து ஓடும் பாதையில் கதை செல்கிறது.

கிரிதரன் அந்த உறவுக்குப் பின் காட்டைவிட்டு வந்து விடுகிறான். அதன்பின் வியாபாரம்செய்து தோற்கிறான்.வேணியை திருமணம் செய்து கசப்பான மணவாழ்க்கையை வாழ்கிறான். பலவகையான சரிவுகளுக்குப் பின்னர் அவன் ஒருவகையில் வாழ்க்கையில் சமனம் அடைகிறான். அவனது மொத்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்த நாட்கள் காட்டில் இருந்த அந்தச் சில நாட்கள் மட்டுமே. மிச்ச வாழ்நாள் முழுக்க அவன் அந்நாட்களை எண்ணி ஏங்கி ஏங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

பசுமை மாறாக் காட்டின் மிகஅழகான சித்திரத்தை உருவாக்கி அளிக்கும் நாவல் இது. அதற்காகவே இது விரும்பப்படுகிறது. வர்ணனைகள் மிகவும் புதியனவாகவும் நுட்பமான காட்சிகளை உருவாக்கக் கூடியனவாகவும் உள்ளன. மிருகங்களும் அழுத்தமான கதாபாத்திரங்களாக காட்டபட்டிருக்கின்றன. குறிப்பாக இதில் வரும் யானைகள் . குட்டப்பன் இந்நாவலின் உண்மையான கதாநாயகன் என்று சொல்பவர்கள் உண்டு

ஜெயமோகன் நாவல்களில் அதிகமான வாசகர்க¨ள்க் கவர்ந்தது இதுதான். காரணம் இதில் உள்ள மென்மையான கவித்துவம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காடு_(புதினம்)&oldid=3293164" இலிருந்து மீள்விக்கப்பட்டது