காபூலிவாலா

காபூலிவாலா என்ற வங்காள மொழிச் சிறுகதையை ரவீந்திரநாத் தாகூர் எழுதினார். காபூலிவாலா என்ற சொல்லுக்கு காபூலைச் சேர்ந்தவர் என்று பொருள். ஆப்கானிஸ்தான் நாட்டவர் என்றும் மேலோட்டமாக பொருள் கொள்ளலாம். இது தாகூரின் ஐந்து வயது மகளுக்கும், ஆப்கானிய பழ வியாபாரிக்கும் இடையேயான நட்பையும், தம் மகள்கள் மீது தாகூரும் பழவியாபாரியும் கொண்டுள்ள அன்பைப் பற்றிய கதை. தாகூரின் புகழ் பெற்ற கதைகளுள் ஒன்றான இக்கதை தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[1]

புதினத்தை இயற்றிக் கொண்டிருக்கும் தாகூர், தன் மகள் பழ வியாபாரியுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்வதைக் காண்கிறார். ஆப்கானிஸ்தானில் இருந்து கல்கத்தாவுக்கு பழ விற்பனைக்கு வந்துள்ள அந்த பழ வியாபாரி, தாகூரின் மகளுக்கு ஆசையாக பழங்களை தந்து அக்குழந்தையின் நண்பராகிறார். தாகூரின் மகளான மினி, பழ வியாபாரியை கண்டு மகிழ்வதும், இதற்காகவே நாள்தோறும் ஒரு வேளையாவது மினியை கண்டு பழங்களை தந்து செல்லும் பழ வியாபாரியின் அன்பும் கதையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மினியிடம் காட்டும் அன்பினில், ஆப்கனில் வாழும் தன் மகளை நினைவுகூர்கிறார் வியாபாரி. தன் மகள் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்த பழ வியாபாரி, தன் வாடிக்கையாளர்களிடம் பெற வேண்டிய நிலுவைப் பணத்தை பெற்றுக் கொண்டு புறப்பட எண்ணுகிறார். அச்சமயம், பணம் தர வேண்டிய ஒருவர் தர மறுப்பதால் சண்டை ஏற்பட்டு, கத்தியால் குத்திவிடுகிறார் பழ வியாபாரி. அதனால் வழக்கு மன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது. பழ வியாபாரியின் நேர்மையால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக சில ஆண்டுகளுக்கு சிறைவாசம் அளிக்கப்படுகிறது. சிறையில் இருந்து விடுதலையானதும், தாகூரின் வீட்டுக்கு வருகிறார் அவர். தாகூரின் 14 வயதுடைய மகளுக்கு திருமணம் நிகழ்கிறது. ஐந்து வயதுச் சிறுமியாய் இருந்த மினி இன்னும் தன் மீது அன்பு கொண்டிருப்பாள் என்றெண்ணிய அந்த காபூலிவாலா/பழ வியாபாரி, தாகூரிடம் பழத்தை தந்து, அவர் மகளை காட்டுமாறு வேண்டுகிறார். திருமண நிகழ்வின்போது, இத்தகைய குற்றவாளி அங்கிருந்தால் சிக்கல் ஏற்படக் கூடும் என்று மறுக்கிறார் தாகூர். இதனால் மனம் வருந்திய அந்த பழ வியாபாரி, தன் மகளுக்கும் இப்போது திருமண வயதாவதையும் உணர்கிறார். தன்னிடமுள்ள ஒரு தாளை தாகூரிடம் நீட்டுகிறார். அதில் கரியால் தீட்டிய பழ வியாபாரியின் மகளின் கைச்சின்னம் தெரிகிறது. வருந்திய தாகூர், தன் மகளை அழைக்கிறார். மினியால் பழ வியாபாரியை அடையாளம் காண முடியவில்லை. தன் மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த பணத்தில் கொஞ்சத்தை எடுத்து பழ வியாபாரியிடம் தந்து, பழ வியாபாரியின் குடும்பம் ஒற்றுமையாய் இருக்குமாறு வாழ்த்தி, அதன் எதிரொலி தம் குடும்பத்தினரையும் வாழ்த்தட்டும் என்று கூறுகிறார். இருவரும் தத்தம் மகள் மீது கொண்டுள்ள அன்பையும் பறைசாற்றி கதை முடிகிறது.

தழுவல்கள்

தொகு

இந்தச் சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் வங்காளத்திலும், இந்தியிலும் வெளியாகியுள்ளன.

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காபூலிவாலா&oldid=2696555" இலிருந்து மீள்விக்கப்பட்டது