காய்சின வழுதி

காய்சின வழுதி என்பவன் சங்கநூல் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தொல்பழங்காலப் பாண்டியன். இறையனார் களவியல் உரையில் மட்டும் இவனைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. முதற்சங்கம் பேணிய 89 அரசர்களில் இவன் முதல்வன். இக்குறிப்பின்படி காய்சின வழுதி தமிழ்ச்சங்கம் தோற்றுவித்தவன் ஆகிறான். இவன் தலைச்சங்கத்தை நிறுவிய இடம் கடல் கொள்ளப்பட்ட மதுரை. [1]

வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் பலர் இருந்தனர். அவர்களில் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி என்பவன் சினப்போர் வழுதி எனப் போற்றப்பட்டுள்ளான். இவன் கடைச்சங்க காலத்து மன்னன். காய்சின வழுதி தலைச்சங்க காலத்து அரசன்.

அடிக்குறிப்பு

தொகு
  1. தலைச் சங்கம் இடைச் சங்கம் கடைச் சங்க மென மூவகைப்பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள். அவருள் தலைச்சங்க மிருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளுங், குன்ற மெறிந்த குமரவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனுமென இத் தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினா ரென்ப. அவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மார் பாடினா ரென்ப. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையு மென இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப. அவர்களைச் சங்கமிரீஇயினார் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோ னீறாக எண்பத்தொன்பதின்ம ரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப. அவர்க்கு நூல் அகத்தியம். - இறையனார் அகப்பொருள் உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=காய்சின_வழுதி&oldid=1422079" இலிருந்து மீள்விக்கப்பட்டது