காரட்டுமானி
காரட்டுமானி (Karatmeter) என்பது தங்கத்தின் தூய்மையைத் துல்லியமாகப் படிக்க எக்சு-கதிர்களைப் பயன்படுத்தும் ஒரு அறிவியல் கருவியாகும். காரட்டுமானி எக்சுக்கதிர் உடனொளிர்வு நிறமாலைமானி என்றும் குறிப்பிடப்படுகிறது. இதன் மிக உயர் துல்லியம், விரைவான முடிவு ஆகியவற்றின் காரணமாக, தங்கத்தை அடையாளப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் சான்றிதழ் செயல்முறையின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களால் எக்சு-கதிர் பகுப்பாய்வு ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1] இது தங்கம் மற்றும் பிற தொடர்புடைய தனிமங்களின் தூய்மையை சோதிக்கும் துல்லியமான, அழிவில்லாத வழிமுறையாகும். இந்த நிறமாலைமானிகளைப் பயன்படுத்தி தங்கத்தைப் பகுப்பாய்வு செய்வது 10-12 மைக்ரான்கள் வரை தங்கத்தின் தூய்மையைக் கொடுக்கிறது, எனவே இது பூச்சு பற்றிய பகுப்பாய்வை மட்டுமே தருகிறது.
இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு திடமான நகையில் உள்ள துல்லியமான சதவீதம் அல்லது காரட் 30 வினாடிகளில் தீர்மானிக்கப்படுகிறது. இது துல்லியமாக (10-12 மைக்ரான் வரை) அனைத்து வகையான தங்கம், வெள்ளைத் தங்கம், பிளாட்டினம், வெள்ளி, பலேடியம், உரோடியம் மற்றும் தொடர்புடைய உலோகக் கலவைகளின் உறுப்புகளைத் தீர்மானிக்கிறது.
தங்கத் தூய்மை சோதனை இயந்திரங்கள் - கையடக்க (இலகு எடை) முதல் தொழில்துறை தர இயந்திரங்கள் வரை - பல மாதிரிகள் உள்ளன.
எக்சு-கதிர் நுட்பத்தைத் தவிர, தங்கத்தின் தூய்மையை சோதிக்க பழைய பாரம்பரிய முறைகள் உரைகல், அமிலங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இவை அழிவுகரமான சோதனைகள் ஆகும், இதன்போது தங்கத்தின் ஒரு சிறிய மாதிரி வெட்டப்பட்டுப் பின்னர் சோதிக்கப்படுகிறது. மாதிரியை உரைகல்லில் தேய்த்து, அதன் மீது ஒரு துளி அமிலத்தை வைத்து, பொற்கொல்லர் உருப்பெருக்கி வில்லையைப் பயன்படுத்தி எச்சத்தைக் கவனிக்கிறார். அனுபவத்தின் அடிப்படையில், தங்கம் வெட்டுபவர் தங்க மாதிரியின் தூய்மையைத் தீர்மானிக்க முடியும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Gold-testing meter introduced, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, நவம்பர் 13, 2001