காரி (வள்ளல்)

காரி கடையெழு வள்ளல்களுள் திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே "மலாடு" ஆகும். இவர் மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார். இரவலரிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பினர்.

உலகத்தார் கேட்டு வியக்கும் வகையில் இவர் கொடுத்த கொடை ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார்.

காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கிடையே, தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு நாடு அமைந்திருந்தது. மலைகள் அதிகம் கொண்டது என்பதால் மலையமா நாடு என்று மலாடு என்றும் அழைக்கப்பட்ட நாடு அது. அந்த மலைகளுள் பெரியது முள்ளூர் மலை. மலையடிவாரத்தில் முள்ளுள்ள கொடிகள் பல முளைத்து மலையின் மேல் ஊர்ந்து செல்லும் காரணத்தினால் அப்பெயர் பெற்றிருந்தது. அம்மலை நாடு பெண்ணையாற்றின் உதவியால் பலவளங்களும் பெற்றுச் சிறந்திருந்தது. திருக்கோவிலூரை தலைநகரமாகக் கொண்ட அம்மலையமா நாட்டை காரி என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் முதலில் முள்ளூருக்கும் முள்ளூர் மலைக்கும் தலைவனாகிப் பிறகு மலை நாட்டிற்கே திருமுடி புனைந்து அரசன் ஆனான். அவனுடைய குதிரை கார் நிறமுடையது. அதனால் அவன் மலையமான் திருமுடிக்காரி என்று அழைக்கப்பட்டான்.

காரி ஒரு சிறந்த கல்விமான். ஊர்கள் தோறும் கல்விக்கூடங்கள் பல அமைத்தவன். பாலின பேதமின்றி மக்கள் கல்வியறிவு பெற ஏற்பாடு செய்தவன். காரி கல்வியில் சிறந்து விளங்கியதோடு மட்டும் நில்லாமல் போர்ப் பயிற்சியிலும் வலிமை கொண்டவனாக விரும்பினான். எனவே, தனக்கென ஒரு பஞ்சகல்யாணி குதிரையைத் தேர்ந்தெடுத்து அதனைப் போருக்கு ஏற்ப பழக்கினான். அத்துடன் வில், வாள், வேல் போன்ற படைக்கல பயிற்சிகளிலும் பங்கேற்று வல்லமையாளனாக விளங்கினான். அதனால் மூவேந்தர்களும் தங்களுக்கு வேண்டிய பொழுதெல்லாம் அவனைப் படைத்துணையாக அழைப்பர். காரி எப்பக்கமோ வெற்றி அப்பக்கமே என்ற நிலையில் காரியின் போர்த்திறன் பெரிதும் போற்றப்பட்டது.ஒருமுறை சோழ வேந்தர் பரம்பரையில் வந்த பெருநற்கிள்ளி என்ற சிற்றரசன் உறையூரை ஆண்டு வந்தான். அவனுடைய காலத்தில், சேரர் பரம்பரையில் தோன்றிய யானைக்கண் சேய் என்னும் சிற்றரசன் தொண்டி என்ற ஊரை ஆண்டு வந்தான். யானைக்கண்ணுக்கு உறையூர் மீது ஒரு கண். அதனால் அவன் பெருநற்கிள்ளியைப் பகைத்துக்கொண்டு உறையூரின் மீது அநீதியாகப் படை எடுத்துச் சென்றான். கிள்ளியோடு சண்டையிட்டு பலத்த சேதம் ஏற்படுத்தினான். முடிவில் கிள்ளிக்கு தோல்வியும் இறப்பும் ஏற்பட்டு விடும் என்கிற சூழல் உருவாகியிருந்தது. இந்நிலையில் காரி செய்தியறிந்தான். காரி, கிள்ளியின் பழைய நண்பன். நண்பனுக்கு உதவும்பொருட்டு பெருஞ்சேனையுடன் உறையூர் அடைந்தான். யானைக்கண் சேயின் படைகளை துரத்தியடித்தான்.

காரி வீரத்தில் மட்டுமின்றி நெஞ்சின் ஈரத்திலும் நிகரில்லாத வள்ளலாக இருந்தான். போரில் செய்த உதவிகளின் பொருட்டு மூவேந்தர்களும் அவனுக்கு பல பொருள்களைப் பரிசிலாகவும், ஞாபகார்த்தமாகவும் வழங்குவார்கள். அங்ஙனம் பெற்ற செல்வத்தை ஒருபோதும் தன்னுடையதாக கொண்டதில்லை காரி. அவன் அவனுடைய இல்லத்தலைவி தவிர்த்து மற்ற அனைத்தும் பிறருடையது என்ற எண்ணம் கொண்டிருந்தான். காரி தன்னுடைய அரண்மனை வாயிலில் எவர் வந்து நின்றாலும் வந்தவர்களின் தரத்தையும் திறத்தையும் சீர்த்தூக்கி பாராமல் அனைவருக்கும் வேண்டுவன அளித்தான்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரி_(வள்ளல்)&oldid=4031626" இலிருந்து மீள்விக்கப்பட்டது