கார்த்தியா
கார்த்தியா என அறியப்படும் கார்த்தியா ஏங் லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ் (Cartilha ē lingoa Tamul e Portugues) (தமிழில்: "தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த [திருமறைச்] சிற்றேடு") என்பது அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல் ஆகும். இந்த நூலில் தமிழ்ச் சொற்கள் இலத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோர்க்கப்பட்டிருந்தன. இது 1554ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் நாள் லிசுபனில் வெளியானது. இதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருசு ஆகியோர் ஆவர். இம்மூவரும் தமிழ் அறிந்த இந்தியர்களே என்றும் அவர்களுடைய கிறித்தவப் பெயர்களே நமக்குத் தெரிந்துள்ளன என்றும் அறிஞர் கருதுகின்றனர்.