காற்றடக்கல்
காற்றடக்கல் என்பது, காங்கிறீட்டுக் கலவையுள் நுண்ணிய காற்றுக் குமிழிகளை நெருக்கமாகவும் ஒருதன்மைத்தாகப் பரவியிருக்கும்படியும் வேண்டுமென்றே உருவாக்குவதற்கான ஒரு வழிமுறை ஆகும். காங்கிறீட்டு இறுகியதும் இக் குமிழிகள் அதன் ஒரு பகுதியாக ஆகிவிடுகின்றன. தற்செயலாகக் காற்றடக்கப்பட்ட காங்கிறீட்டு முன்னரே சில இடங்களில் அறியப்பட்டிருந்தாலும், காங்கிறீட்டின் தன்மைகளை மேம்படுத்துவதற்காக வேண்டுமென்றே செய்யும் காற்றடக்கல் கடந்த 45 ஆண்டு காலமாகவே இருந்து வருகிறது. காங்கிறீட்டில் மட்டுமன்றி சீமெந்துச் சாந்து, சிப்சம் சாந்து போன்றவற்றிலும் காற்றடக்கல் செய்வது உண்டு.
காங்கிறீட்டில் காற்றடக்கல் பல காரணங்களுக்காகச் செய்யப்படுகின்றது. முக்கியமாக நீர் உறையும் தட்பவெப்பம் கொண்ட பகுதிகளில் காங்கிறீட்டினால் உறிஞ்சப்படும் நீர் உறைந்து உருகுவதால் காங்கிறீட்டுப் பாதிக்கப்பட்டு நீண்டநாள் பயன்பட முடியாமல் போகிறது. காற்றடக்கப்பட காங்கிறீட்டு இந்த நிலைமைகளைத் தாக்குப் பிடிக்க வல்லது. இறுகுவதற்கு முன்னர் காற்றடக்கிய காங்கிறீட்டு சாதாரண காங்கிறீட்டைவிடக் கையாள்வதற்கு இலகுவானது. அத்தோடு இது நிறையும் குறைவானது. காங்கிறீட்டுக் கலவையில் சில வேதிச் சேர்மங்களையும் சேர்ப்பதன் மூலம் காற்றடக்கல் செய்யப்படுகிறது.