காற்றிழுப்பு தாரைப் பொறிகள்
காற்றிழுப்பு தாரைப் பொறி (அல்லது உள்ளமை தாரைப் பொறி - ducted jet engine) என்பது உள்நுழை-குழாய் வழியே காற்றை இழுத்து எரித்துக் கிடைக்கும் சூடான காற்றை வெளித்தள்ளுதல் மூலம் உந்துகையை ஏற்படுத்தும் தாரைப் பொறி ஆகும்.
செயல்பாட்டில் இருக்கும் அனைத்து காற்றிழுப்பு தாரைப் பொறிகளும் உள் எரி பொறிகள் ஆகும். இவை எரிபொருளை எரிப்பதன் மூலம், உள்வரும் காற்றை சூடாக்குகின்றன; இந்த சூடான காற்றை உந்துகைத் தூம்புவாய்கள் வழியே வெளியேற்றுவதன் மூலம் உந்துகையை ஏற்படுத்துகின்றன. வேறுவழிகளில் காற்றைச் சூடாக்குவதற்கும் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான தாரைப் பொறிகள் சுழல் விசிறிகள் ஆகும்; சில சுழல் தாரைகளும் பயன்பாட்டில் உள்ளன. இவை, வளிமச் சுழலிகளைப் பயன்படுத்தி உயர்-அழுத்தவீதங்களைப் பெறுகின்றன; அதன் விளைவாக அதிக செயல்திறனையும் கொண்டிருக்கின்றன. மேலும், திமிசு (Ram) மற்றும் துடிப்பு எரிதல் (Pulse combustion) மூலம் அழுத்தமேற்றும் பொறிகளும் உந்துகையை அளிக்கின்றன.
பெரும்பாலான வணிகரீதியான வானூர்திகளில் சுழல்விசிறிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பெரிய காற்றழுத்திகள் பயன்படுத்தப்படும்; சுழல்தாரைக்கு-முன் விசிறி போல பெரிய காற்றழுத்திகள் பொருத்தப்பட்டிருக்கும். பெருமளவு காற்று, எரி-அறைக்கு செல்லாமல் புறவழியில் செல்லும்; இந்த புறவழியில் செல்லும் காற்றின் மூலமே பெரிய அளவில் உந்துகை பெறப்படும். மேலும், இது சுழல்தாரையை விட குறைந்த அளவிலேயே ஒலி எழுப்பும்.
காற்றிழுப்பு தாரைப் பொறிகள் பெரும்பாலும் தாரை வானூர்திகளுக்கான உந்துகையை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படும்; சில இடங்களில், தாரை தானுந்துகளிலும் (Jet Cars) பயன்படுத்தப்படும்.