காளான் வளர்ப்பு

(காளான் வித்திடுதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காளான் வளர்ப்பு அல்லது பூஞ்சை வளர்ப்பு (Fungiculture) என்பது காளான்கள் போன்ற புஞ்சைகளை செயற்கை முறையில் பண்ணை வளர்ப்பாகும். இம்முறையில் காளான்கள், உணவுக்காகவும், மருந்துக்காகவும், கட்டிடப் பொருள்களாகவும் பண்ணை முறையில் வளர்க்கப்படுகிறது.

வளர்ப்புக் காளான் சீத்தேக்கு

இலைவெட்டி எறும்புகள், கறையான்கள், அம்ப்ரோசியா வண்டுகள், இலிட்டோராரியா இரோராட்டா எனும் சதுப்புநில நத்தைகள் போன்ற விலங்குகளின் வளர்ப்புமே இச்சொல்லின் கீழ் கூறப்படுகிறது.

சீத்தேக்கு வளர்தல்


காளான் வளர்ப்பு முறைகள்

தொகு

காளானின் தன்மைக்கேற்ப, கீழ்க்காணும் வெவ்வேறு முறைகளில், காளான் வளர்க்கப்படுகிறது.[1]

அனைத்து காளான் வளர்ப்பு நுட்பங்களுக்கும் ஈரப்பதம், வெப்பநிலை, அடி மூலக்கூறு (வளர்ச்சி ஊடகம்) மற்றும் இனோகுலம் (ஸ்பான் அல்லது ஸ்டார்டர் கலாச்சாரம்) ஆகியவற்றின் சரியான கலவை தேவைப்படுகிறது.

வளர்ப்பு ஊடகம்

தொகு

சிப்பி காளான் வளர்க்க நெகிழிப் பைகளில் உருளைப் படுக்கைகள் உருவாக்க வேண்டும். வணிக முறையில் காளான் விளைவிக்க, நெல் வைக்கோல் சிறந்தது. படுக்கைகள் தயாரிக்கும் முன் வைக்கோலைப் பதப்படுத்துவது மிகவும் தேவை. பொதுவாக மூன்று பதப்படுத்தும் முறைகள் கையாளப்படுகின்றன. அவையாவன: 1. கொதிக்கும் நீரில் பதப்படுத்துதல் 2. நீராவியில் பதப்படுத்துதல் 3. வேதியியல் முறையில் பதப்படுத்துதல்

காளான் குடில்

தொகு

தென்னங் கீற்று வேய்ந்த குடிலைக் காளான் சாகுபடி செய்யப் பயன்படுத்தலாம். குடிலின் அளவு தினசரி நாம் உற்பத்தி செய்யும் காளான் அளவைப் பொறுத்து அமைய வேண்டும். நாளொன்றுக்கு சுமார் 20 கிலோ காளான் உற்பத்தி செய்வதாக இருந்தால் சுமார் 300 ச.மீ அளவுக்குக் குடிலின் அளவு இருக்க வேண்டும். காளான் குடிலை இரண்டாகத் தடுத்து ஒன்றை வித்துப் பரவும் அறையாகவும், மற்றொன்றைக் காளான் தோன்றும் அறையாகவும் பயன்படுத்தலாம். வித்துப் பரவும் அறையின் வெப்ப நிலை 20-30° செ வரை இருக்கலாம். அதிகப்படியான வெளிச்சம் தேவையில்லை. ஆனால் காற்றோட்டம் தேவை. அறையின் சன்னல்களுக்கு 35 மெஷ் அளவுள்ள நைலான் வலைகளைப் பயன்படுத்தி காளான் ஈ போன்ற தீமை பயக்கும் பூச்சிகள் புகாத வண்ணம் தடுக்கலாம்.

தட்பவெப்பநிலை

தொகு

காளான் தோன்றும் அறையில் 23-25°செல்சியஸ் வெப்ப நிலையும் காற்றின் ஈரப்பதம் 85 சதவிகிதத்திற்கு மேலும் இருக்க வேண்டும். தரையில் பரப்பியுள்ள மணலையும் அறையின் சுவர்களை ஒட்டி உட்புறத்தில் தொங்க விடப்பட்டிருக்கும் சாக்கு படுதாக்களையும் தண்ணீரால் நனைத்து (இரண்டு அல்லது மூன்று முறை) தேவையான சூழ்நிலையை உருவாக்கலாம். அறையில் நல்ல காற்றோட்டமும் தேவையான வெளிச்சமும் வேண்டும்.

காளான் வித்திடுதல்

தொகு

பதப்படுத்திய வைக்கோலை 65-70% ஈரப்பதம் இருக்குமளவிற்கு உலர்த்தி பின் சுமார் 60×30 அல்லது 75×45 செ.மீ அளவுள்ள நெகிழிப் பைகளில் அடுக்கு முறையில் வித்திட்டு உருளை படுக்கைகள் தயாரிக்க வேண்டும். ஒரு வித்துப் புட்டியைப் பயன்படுத்தி 2 அல்லது மூன்று படுக்கைகள் தயாரிக்கலாம். பைகளில் வைக்கோலை 5 செ.மீக்கு நிரப்பி 25 கிராம் காளான் வித்துக்களைத் தூவவேண்டும். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று அடுக்குகளைத் தயாரிக்கலாம்.

காளான் வித்து உருவாக்குதல்

தொகு

காளான் வளர்ப்பில் “காளான் வித்து” உற்பத்தி செய்தல் தலையாய ஒன்று. திசு வளர்ப்பு நுணுக்கத்தால் பெட்ரித் தட்டு அல்லது சோதனைக் குழாயில் வளர்க்கப்பட்டுள்ள மூலவித்தைக் கொண்டு தாய் வித்து பின் அதிலிருந்து படுக்கை வித்தும் தயாரிக்கப்படுகின்றன. பிரித்தெடுத்த காளான் பூசண மூலவித்தை சோளம் போன்ற தானியங்கில் வளரச் செய்து அவற்றைத் தாய் வித்தாகப் பயன்படுத்தலாம். ஒருமுறை இவ்வாறு உற்பத்தி செய்த தாய் வித்துப்புட்டிகளிலிருந்து இரண்டு முறை படுக்கை வித்துத் தயாரிக்கலாம். மக்காச்சோளம், கோதுமை, சோளம், காய்ந்த வைக்கோல் போன்றவை தளப் பொருளாக பயன்படுத்தலாம். இதனைத் தூய்மையான போத்தல்களில், காற்று புகாத பஞ்சை வைத்து அடைத்து நுண்கிருமி நீக்கம் செய்த பின்னர் காளான் வித்துக்களை அறை வெப்பநிலையில் 15 முதல் 18 நாட்கள் வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் காளான் படுக்கையில் வளர்வதற்கேற்ப காளான் வித்து கிடைக்கும்.[2]

 
காளான் வளர்ப்பு

காளான் வித்திடுதல் என்பது காளான் வளர்ப்பிற்கான வேளாண் செயல்முறை ஆகும். வைக்கோலைப் பதப்படுத்தி உலர்த்தி, நெகிழிப் பைகளில் அடுக்கி உருளைப் படுக்கைகள் உருவாக்கப்படும். நெகிழி பையின் நடுவில் துளையிட்டு, அதன் அடிப்பகுதியில் நூலால் கட்டி, பையைத் திறந்து வைக்கோல் துண்டுகள் நிரப்பப்படும். அதன் மேல் காளான் வித்துக்கள் தூவப்படும். இதேபோன்று 5 அடுக்குகளை உருவாக்கிப் பையின் மேற்பரப்பை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி ஓரளவு இறுக்கமாகக் கட்டி, படுக்கைகள் ஆயத்தம் செய்யப்படும்.[3]

காளான் படுக்கை தயாரிப்பு

தொகு

ஐந்து மணி நேரம் தண்ணீர் ஊற வைத்து ஒரு மணி நேரம் நன்கு வேக வைத்து வடிகட்டப்பட்ட வைக்கோலை எடுத்து தூய்மையான நெகிழிப் பைகளில் 5 செ.மீ அளவு உயரத்திற்கு நன்கு அழுத்தி வைத்து அதன் மீது 25 கிராம் அளவுள்ள காளான் வித்தை தூவ வேண்டும். ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பையை நன்கு இறுக்கமாக கட்ட வேண்டும். பிறகு நெகிழிப் பையை குடிலினுள் உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விட வேண்டும். நாள்தோறும் கை தெளிப்பான் கொண்டு காளான் படுக்கையில் தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த 15 அல்லது 20 நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருப்பதை காணலாம். பிறகு தூய்மையான கத்தியை கொண்டு நெகிழிப் பையைக் கிழிக்க வேண்டும்.

காளான் அறுவடை

தொகு

பாலீதீன் பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திரள் போன்று காணப்படும். 23 நாட்களில் காளான் முழுவளர்ச்சி அடையும். தண்ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறுவடை செய்து விட வேண்டும். நாள்தோறும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்ய வேண்டும்.

பை நீக்கும் முறைகள்

தொகு

காற்றின் ஈரப்பதம் அதிகமாகிப் படுக்கையின் மேல் ஈரம் இருப்பின் நெகிழிப் பைகளை முழுவதுமாக நீக்க வேண்டும். மாறாக ஈரப்பதம் குறையுமானால் முழுவதுமாக நீக்காமல் ஆங்காங்கே துளைகள் இட்டு காளான் தோன்ற வகை செய்ய வேண்டும்.

பயன்கள்

தொகு
 
உமிப்பைப் பொதியில் வளரும் சிப்பிக் காளான் அறுவடை

நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப தேவைப்படும் புரதப் பற்றாக்குறை, பண்ணைக் கழிவுகளை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுசூழல் பாதுகாப்பை பேணவும், வேலையில்லாத் திண்டாட்டத்தினை போக்கிடவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயா்த்திடவும் ஓரு நல்ல தீர்வாக காளான் வளர்ப்பு அமைந்துள்ளது. [4] காளான் வளர்ப்பு, என்பது ஓரு தனிநபர் தொழில் வேலைவாய்ப்புமாகும் இதன்மூலம் உழவர்களுக்கும் நல்ல இலாபத்தை தருகிறது. இன்றைய நாளில் அசைவ உணவினை போன்ற சுவையை காளான் தருவதினால் மக்கள் அதிகம் காளான் வகைகளை விரும்பி உண்ணத் துவங்கி விட்டனர். இதில் வைட்டமின் சி, வைட்டமின் டி ஆகியவற்றுடன் கால்சியம், பாஸ்பேட்டு, பொட்டாசியம், செம்பு போன்ற கனிமச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. இதில் உள்ள மருத்துவ குணம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "காளான் வளர்ப்பு அதிக மகசூல் பெற".
  2. "web page". பார்க்கப்பட்ட நாள் 12 சூலை 2017.
  3. முனைவர் ச.மோகன் (2015). வேளாண் செயல்முறைகள். தமிழ்நாடு பாடநூல் கழகம்.
  4. "பண்ணை சார் தொழில்கள்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளான்_வளர்ப்பு&oldid=3911658" இலிருந்து மீள்விக்கப்பட்டது