காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.[1] இவர் பாடிய சங்கப் பாடல்கள் 3 உள்ளன. அகநானூறு 103, 271, நற்றிணை 389 ஆகிய பாடல்கள் அவை.

அகநானூறு 103 சொல்லும் செய்தி

தொகு
  • பாலைத்திணை

அவர் பொருள் தேடச் சென்றார். என் உடல் நலத்தையும் உடல் அழகையும் தம்முடன் எடுத்துச் சென்றுவிட்டார். என்னை நயந்தவர் அவற்றைத் திருப்பித் தரமாட்டார் போலும் - என்கிறாள் தலைவி.

எழால் பறவை

தொகு

வல்லூறு என்னும் கழுகு வகையைச் சேர்ந்தது எழால் என்னும் பறவை. இதன் தலைமயிர் கதிர்த்து இருக்கும். (பொது பொது என்று சிலிர்த்துக்கொண்டிருக்கும்). நிழலில்லாத வெட்டவெளியில் பறந்து இரை தேடும். மக்கள் விட்டு விலகிய பாழ் மன்றங்களில் இருக்கும். அது தன் உயிர்ப்புக் குரலை எழுப்பித் தன் துணையை அழைக்கும். குட்டிச்சுவர் மனையில் இருந்துகொண்டு அது எழுப்பும் ஒலியை எண்ணிப் பார்த்து என்னை நினைக்கமாட்டாரா என்று எண்ணித் தலைவி ஏங்குகிறாள்.

அகநானூறு 271 சொல்லும் செய்தி

தொகு
  • பலைத்திணை

அவியன் நாட்டு மூங்கில் போன்ற இவள் தோள் நலம் நெகிழ்ந்து போய்விட்டால் அதனை நலமுறச் செய்யும் மருந்து தலைவனைத் தவிர வேறு யார்? என்று தோழி தலைவன் உணரும் வகையில் தலைவியிடம் கூறுகிறாள்.

அரசன் அவியன்

தொகு

அவியன் என்னும் அரசன் ஆண்ட நாட்டில் வளமான மூங்கில்கள் மிகுதி. தலைவியின் தோள் இந்த அவியன் நாட்டு மூங்கில் போல் இருந்தது என்கிறார் இந்தச் செங்கண்ணனார்.

பழந்தமிழ்

தொகு

ஞெகிழின் = நெகிழின்
வல்லுவதாக செய்வினை = செய்யஃம் செயல் நிறைவேறுவதாக
இயவு = நடந்து இயங்கும் ஆற்று வழி

தெளிந்த உண்மை

தொகு

'நிலையரும் பொருட் பிணி' = பொருள் மேல் உள்ள ஆசை ஒரு பிணி. பொருள் நிலையில்லாதது.

புறா கல் உண்ணல்

தொகு

சிவந்த கால்களைக் கொண்டது வரிப்புறா. அது தன் துணையுடன் நெடுந்தொலைவு சென்று மேயும். ஆற்றுப்படுகையில் உள்ள சிறு சிறு கற்களை உண்ணும். (இது அதன் இரையைச் செரிமானம் செய்ய உதவும்) மழை பெய்யாத்தால் வாடிக் கிடக்கும் மரல் என்னும் புல்லின் விதைகளையும் உண்ணும்.

நெல்லி

தொகு

வெயிலில் நடந்து செல்வோர்க்கு நெல்லிக்காய் தாகம் தீர்க்கும் மருந்தாக உதவும்.

நற்றிணை 389 சொல்லும் செய்தி

தொகு

என் தாய் என்னை விருப்பத்தோடு பார்த்தாள். கிளி ஓட்டத் தினைப்புனம் செல்க என்றாள். என் தந்தை தன் ஏவல் இளையருடன் மா வேட்டைக்குச் சென்றுள்ளான். வாரணம் என்னும் காட்டுக் கோழி புழுதியைக் கிண்டும்போது நல்ல பொன் துகள்கள் இமைக்கும் நாட்டை உடையவர் அவர் (தலைவன்) என்கிறாள் தலைவி. (தன்னைப் பொன்னோடு பொருத்திக் காட்டுகிறாள்)

'அன்புறு காமம் அமைந்த நம் தொடர்பு'

தொகு

தொல்காப்பியர் காதலன் தாரலிக்கு இடையே அமைந்த தொடர்பை 'அன்பொடு புணர்ந்த ஐந்திணை' என்று குறிப்பிடுகிறார். செங்கண்ணனார் இந்தத் தொடர்பை அன்புறு காமம் என்கிறார்.

உவமை

தொகு
  • வேங்கை மரம் புலியைப் போலப் பூத்துக் குலுங்கியது.
  • மலை மணியின் நிறம் போல நீல நிறத்துடன் காணப்பட்டது.

பொருள் விளக்கத் தமிழ்த்தொடர்

தொகு

'சிதர் கால் வாரணம்' - வாரணம் என்னும் சொல் யானையையும் கோழியையும் குறிக்கும். யானையின் காலில் சிதைவு இல்லை. கோழியின் காலில் பிளவு பட்ட விரல்கள் இருக்கும். எனவே கோழியைக் குறிக்கும் பொருள் விளக்கத் தொடராகச் சிதர்க்கால் வாரணம் என்னும் தொடரை இந்தச் செங்கண்ணனார் பயன்படுத்தியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. கா., கோவிந்தன் (1964). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கக. மாநகர்ப் புலவர்கள் -2. (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 75.