கிரகணம்
கிரகணம் (eclipse) என்பது வானியல் பொருள் ஒன்று வேறொரு பொருளின் நிழலினாலோ அல்லது வேறொரு பொருள் இப்பொருளுக்கும் பார்வையாளருக்கும் இடையில் செல்லுவதாலோ தற்காலிகமாக மறைக்கப்படும் போது ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வு ஆகும்.
கிரகணம் என்ற சொல் பெரும்பாலும் நிலாவின் நிழல் பூமியின் மேற்பரப்பைத் தாண்டும் போது நிகழும் சூரிய கிரகணத்தையோ, அல்லது நிலா பூமியின் நிழலினுள் செல்லும் போது ஏற்படும் சந்திர கிரகணம் ஆகியவற்றை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், பூமி-சந்திரன் தவிர்ந்த வேறு தொகுதிகளுக்கும் கிரகண நிகழ்வு பயன்படுத்தப்படுகிறது: எடுத்துக்காட்டாக, கோள் ஒன்று தனது நிலாக்களில் ஒன்றின் நிழலினுள் செல்லுவது, நிலா ஒன்று தனது கோளின் நிழலினுள் செல்லுவது போன்றவற்றைக் குறிப்பிடலாம். இரும விண்மீன் தொகுதி ஒன்றிலும் இவ்வாறான கிரகணம் ஏற்படும்.