கிருபை தயாபத்து செபம்
கிருபை தயாபத்து செபம் அல்லது "இரக்கத்தின் அரசி செபம்" என்பது, கத்தோலிக்க திருச்சபையில் தூய கன்னி மரியாவுக்கு திருப்புகழ்மாலையில் பாடப்படும் திருவழிபாட்டு கால பாடல்கள் நான்கினுள் ஒன்றாகும். வழக்கமாக இது திரித்துவ ஞாயிறுக்கு முன் இரவு துவங்கி திருவருகைக் கால முதல் ஞாயிறுவரை திருப்புகழ்மாலையின் இரவு செபத்தில் பயன்படுத்தப்படுகின்றது. இச்செபமானது கத்தோலிக்க செபமாலையின் நிறைவுசெய்யும் விதமாகவும் பலரால் பயன்படுத்தப்படுகின்றது. இச்செபம் நடுக் காலமுதல் பழக்கத்தில் உள்ளது.[1]
தமிழில் செபம் (பழைய வழக்கு)
தொகுகிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகின்றோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதனன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப ரசமுள்ள கன்னிமரியாயே!
- இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
- சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
ஜெபிப்போமாக சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரம் தூய ஆவியின் அனுக்கிரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாட்டினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென். [2]
தமிழில் செபம் (புதிய வழக்கு)
தொகுஇரக்கத்தின் அன்னையாகிய எங்கள் அரசியே வாழ்க! எங்கள் வாழ்வே, தஞ்சமே, இனிமையே வாழ்க! நாடிழந்து தவிக்கும் நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்த கண்ணீர் பள்ளத்தாக்கிலே நின்று மனம் நொந்து அழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய இரக்கமுள்ள திருக்கண்களை எங்கள்பேரில் திருப்பியருளும். மேலும் நாங்கள் இந்த வேற்றிடம் கடந்த பிறகு, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசு கிறிஸ்து நாதருடைய, முழுமையான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும், இரக்கமும் கனிவும் இனிமையும் உள்ள கன்னி மரியாவே!
தமிழில் செபம் (புதிய வழக்கு - கவிதை நடையில் திருப்புகழ்மாலையில் உள்ளபடி)
தொகு- வாழ்க அரசியே தயைமிகு அன்னையே
- வாழ்வே இனிமையே தஞ்சமே வாழ்க
- தாயகம் இழந்த ஏவையின் மக்கள்
- தாயே என்றுனைக் கூவி அழைத்தோம்.
- கண்ணீர்க் கணவாய் நின்றுனை நோக்கி
- கதறியே அழுதோம் பெருமூச் செறிந்தோம்
- ஆதலால் எமக்காய் பரிந்து உரைப்பவளே
- அன்புடன் எம்மைக் கடைக்கண் பாராய்.
- உன்திரு வயிற்றின் கனியாம் இயேசுவை
- இம்மை வாழ்வின் இறுதியில் காட்டுவாய்
- கருணையின் உருவே தாய்மையின் கனிவே
- தருவாம் இனிமையே கன்னி மரியே. ஆமென்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Salve Regina". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- ↑ ஏ. கே. வேலன் (ed.). மேரியின் திருமகன் (PDF). ஏ. கே. பதிப்பாளர், சென்னை. p. 56.