கிறித்தவ பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
கிறித்தவ பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் என்பன கிறித்தவர்கள் வழிபடுகின்ற இறைமன் இயேசு கிறித்துவையோ அவரது அன்னை மரியாவையோ பிற கிறித்தவப் புனிதர்கள் மற்றும் கிறித்தவ சான்றோரையோ குழந்தையாக உருவகித்துப் பாடுகின்ற தமிழ்ச் சிற்றிலக்கிய வகையைக் குறிக்கும்.
கிறித்தவப் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் வீரமாமுனிவர் காலத்திலிருந்தே தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில கீழே குறிக்கப்படுகின்றன.[1]
இயேசுவின் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள்
தொகு- இயேசுபிரான் பிள்ளைத்தமிழ்
- ஏசுநாதர் பிள்ளைத்தமிழ்
- ஏசு பிள்ளைத்தமிழ்
- சேசுநாதர் பிள்ளைத்தமிழ்
- இறைமைந்தர் பிள்ளைத்தமிழ்
- இம்மானுவேல் பிள்ளைத்தமிழ்
- திவ்விய இரட்சகர் பேரில் பிள்ளைத்தமிழ்
அன்னை மரியா மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள்
தொகு- தேவமாதா பிள்ளைத்தமிழ்
- வேளை மரியன்னை பிள்ளைத்தமிழ்
- கன்னிமரி பிள்ளைத்தமிழ்
கிறித்தவப் புனிதர் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள்
தொகு- தொன் போஸ்கோ பிள்ளைத்தமிழ்
கிறித்தவ சான்றோர் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள்
தொகு- வீரமாமுனிவர் பிள்ளைத்தமிழ்
- வேதநாயகர் பிள்ளைத்தமிழ்
வீரமாமுனிவர் பாடிய "தேவமாதா பிள்ளைத்தமிழ்"
தொகு"தேவமாதா பிள்ளைத்தமிழ்" என்ற நூல் வீரமாமுனிவர் (1680-1946) பாடியதாக முனைவர் வி.மி. ஞானப்பிரகாசம் பாரிசிலுள்ள தேசிய நூலகத்தில் கண்டுபிடித்துள்ளார். இந்நூலைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. "வீரமாமுனிவரின் நிருபங்கள்" என்ற பெயரில் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலின் பின்பகுதியில் "தேவமாதா பிள்ளைத்தமிழ்" இடம் பெறுகிறது.
அம்மானை, அந்தாதி, கலம்பகம், பதிகம், மாலை, வெண்கலிப்பா, வண்ணம் ஆகிய சிற்றிலக்கியங்களைப் படைத்த வீரமாமுனிவர் "தேவமாதா பிள்ளைத்தமிழ்" பாடியுள்ளமை அவரது பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
"தேவமாதா பிள்ளைத்தமிழ்" காப்புப் பருவத்திற்கு முன் "கடனரி அகவல்" என்ற முன்னுரைப் பகுதியைப் பெற்றுள்ளது. இப்பகுதியில் பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பத்துப் பருவங்களும், ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பத்துப் பருவங்களும் இடம்பெற்றுள்ளன. பிற பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்களில் "நீராடல்" என்று அழைக்கப் பெறும் பருவம் தேவமாதா பிள்ளைத்தமிழில் "அபிஷேகம்" என்று அமைந்துள்ளது.
முத்தப்பருவத்தில் ஒரு மாற்றமாக, அன்னை மரியாவின் அடியார்கள் மரியா என்னும் குழந்தையின் திருவடியை முத்தம் செய்ய இசைவு தருமாறு வேண்டுவதாகப் பாடப்பட்டுள்ளது:
"முளரிப் பதத்தில் அருள்கனிந்த முத்தம் தருக"
"அரிய திருத்தாளின் முத்தம் தருக"
"மொழியும் கருணைத் திருத்தாளின் முத்தம் தருக"
"பன்னு முத்தம் பரிவு முத்தம் பாத முத்தம் தருகவே"
என்பவற்றைச் சான்றாகக் காட்டலாம்.
உலக முடிவில் இறைமகன் எல்லா மக்களுக்கும் தீர்ப்பு வழங்கும் ("நடுத்தீர்வை") நீதித்தலைவராக வருவார் என்பது கிறித்தவ நம்பிக்கை. அப்போது மண்ணுலகிலும் கதிரவன் மற்றும் நிலவிலும் நடுக்கம் ஏற்படும் என்பது விவிலிய உருவகம். "அம்புலியே, நீயும் நடுக்கமுறுவாய். எனவே மரியன்னையின் திருத்தாள்களிலே சரணடைந்து விடு" என்னும் பொருள்பட, கீழ்வருமாறு பாடுகிறார்:
"நன்னடுத் தீர்வையில் உனைப் பீடொடுங்கச் செய்ய நாயகன்தாய் பரிவுசேர்
அற்புதக் கன்னியிவள் பதத்தினில்நீ பணிந்து அம்புலியாட வரவே
அன்புடைய ஞானக் குழந்தை மரியாயி சரணம் புலியாட வரவே"
வீரமாமுனிவர் இயற்றியதாகக் கருதப்படுகின்ற இந்த "தேவமாதா பிள்ளைத்தமிழ்" இலக்கியமே தமிழில் எழுந்த முதல் கிறித்தவப் பிள்ளைத்தமிழ் என்று தெரிகிறது.
கிறித்தவ பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் சில
தொகு- திருநெல்வேலியில் உள்ள பரங்குன்றாபுரம் ஊரைச் சார்ந்த மு. நல்லசுவாமி பண்டிதர் "பிள்ளைத்தமிழ்" என்னும் தலைப்பில் எழுதிய நூலில் அம்புலிப் பருவ பாடல்கள் மட்டுமே உள்ளன. இயேசு குழந்தையோடு ஆடவருமாறு அம்புலியை அழைப்பதாக இப்படல்கள் பாடப்பட்டுள்ளன. அப்பாடல்களோடு பண்டிதரின் பிற சிற்றிலக்கியங்களும் இணைந்த நூலை ஆர்.எஸ். ஜேக்கப் தொகுத்து "சிலுவைத் தியானமாலை" என்ற பெயரில் 1980இல் வெளியிட்டுள்ளார்.
வான வீதியில் தவழும் அம்புலிக்குப் பல குறைகள் உண்டு. அவற்றைச் சுட்டிக்காட்டி, அதே நேரத்தில் இயேசு பெருமானின் சிறப்பையும் எடுத்துக்கூறி அம்புலியை விளையாட அழைக்கிறார் கவிஞர்:
"...உலகருனைத் தூற்றுபழி
இனிக் கழிய வேண்டுவாயேல்
இத்தலம் போற்றலம் பிறிதில்லை ஆதலால்
இசைந்தஇப் பெத்தலையினில்
அடுபவம் தீர்த்திடும் அத்தன்முனம் பணிவுடன்
அம்புலீ ஆடவாவே
அண்டர் நாயகன் தொண்டர் தாயகன் இவனுடன்
அம்புலீ ஆடவாவே"
- "வேதநாயகர் பிள்ளைத்தமிழ்" என்னும் நூலில் பருவத்துக்கு ஒருபாடல் என்றே உள்ளது.
- திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த பாவலர் அருள் செல்லத்துரை 1985ஆம் ஆண்டு "இயேசுபிரான் பிள்ளைத்தமிழ்" என்ற பெயரில் நூல் வெளியிட்டார். பொறியியல் துறையில் பணிசெய்த இவர் அறிவியல் கருத்துகளையும் விவிலிய மற்றும் தமிழ் மரபுகளையும் இணைத்து இந்நூலில் சமைத்தளிக்கிறார்.
- கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். தம்புரான் தோழபிள்ளை என்பவர் "கன்னிமரி பிள்ளைத்தமிழ்" எழுதினார். அந்நூல் 1972ஆம் ஆண்டு வெளிவந்தது.
- தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள கோட்டரப்பட்டி என்னும் கோட்டூரில் 1910ஆம் ஆண்டு பிறந்தவர் புலவர் சூ. தாமஸ். இவர் பல சிற்றிலக்கியங்களை உருவாக்கியுள்ளார். அவர் எழுதிய "வேளை மரியன்னை பிள்ளத்தமிழ்" உட்பட அவரது பிற நூல்களும் "ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்" என்னும் தலைப்பில் புலவர் நாகசண்முகம் என்பவரால் 1993இல் பதிப்பிக்கப்பட்டன.
பிள்ளைத்தமிழில் வரும் ஒரு பாடலில் அவர் திங்கள் முதல் ஞாயிறு வரையிலான நாட்பெயர்களை அமைத்துள்ளார். அத்துடன் திருவடிகளில் நிலவையணிந்து, செம்மை நிறம் பொருந்திய வாயுடன் அன்புமாறாத தம் சேயை அழகுமிக்க பொன்னையொத்த மலர்க்கைகளில் ஏந்தி, வெள்ளி என்னும் விண்மீனைச் சென்னியில் சூடித் துன்பம்நீக்கிக் கதிரவனை ஆடையாகப் புனைந்து ஆரோக்கியமாதா விளங்குகிறாள் என்று இரட்டுற மொழிதலாகவும் பாடியுள்ளமை அறிந்து இன்புறத்தக்கது. இதோ அப்பாடல்:
"பேறாம் பதத்தினில் திங்களைச் சூடிப் பிறங்கு செவ்வாய்
மாறாத அற்புதன் தான்வியாழம் ஒத்த மலர்க்கைதுன்ன
சீரான வெள்ளிகொண் டேசனி யோட்டிச் செஞ் ஞாயிறிட்டு
நீராரும் வேளைவந் தாய் தயை தான் நிதம் செய்குவையே"
நூல் ஆதாரம்
தொகு- ↑ முனைவர் இர. ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, பூரண ரீத்தா பதிப்பகம், தஞ்சாவூர் (வெளியீடு: கிறித்தவ ஆய்வு மையம், திருச்சிராப்பள்ளி), 2010.