கிளாடு செயல்முறை

கிளாடு செயல்முறை (Claude's Process) என்பது வாயுக்களைத் திரவமாக்கப் பயன்படும் ஒரு செயல்முறை ஆகும். இம்முறையில் அழுத்தப்பட்ட வாயுவானது விரிவடைதல் வேலையை செய்ய வைக்கப்படுகிறது. இம்முறையானது மாறாவெப்பச் செயல்முறையின் (Adiabatic process) தத்துவத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. இம்முறையில், வாயுவானது, இயக்க ஆற்றலை இழந்து வேலையைச் செய்வதால் தனது வெப்பநிலை குறைந்து குளிர்வடைகிறது. இம்முறையானது சூல்-தாம்சன் விளைவுடன் சேர்ந்து காற்றைக் குளிர்விக்கப் பயன்படுகிறது. இந்தச் செயல்முறையில் காற்றானது 200 வளிமண்டல அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு ABC என்ற குழாய் வழியே செலுத்தப்படுகிறது குழாயின் C என்ற பகுதியில் காற்றின் ஒரு பகுதியானது J என்ற குழாய் வழியாகவும், மற்றொரு பகுதி பக்கக்குழாய் வழியே சென்று D என்ற பகுதியில் உள்ள உந்து தண்டுடன் கூடிய உருளைப்பகுதியை அடைந்து உந்து தண்டைத் தள்ளுவதன் மூலம் வேலை செய்து, விரிவடைந்து குளிர்ச்சியடைகிறது. இவ்வாறாக, குளிர்விக்கப்பட்ட காற்றானது, குளிர்விக்கும் பகுதியை அடைந்து உள்ளே வரும் காற்றை குளிர வைக்கிறது. குழாய் J வழியாக வரும் காற்றானது, சூல்-தாம்சன் விளைவிற்குட்படுத்தப்பட்டு குளிர்ச்சியடைகிறது. காற்றானது, இதே செயல்முறையில், மீண்டும், மீண்டும் குளிர்விக்கப்பட்டு திரவமாக்கப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. டாக்டர் வ. பாலசுப்பிரமணியன் (2007). வேதியியல் மேல்நிலை முதலாம் ஆண்டு தொகுதி I. சென்னை-6: தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம். பக். 230,231. 
  2. Harold Cecil Greenwood (Before 1923). Industrial Gases. BiblioLife. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாடு_செயல்முறை&oldid=2749133" இலிருந்து மீள்விக்கப்பட்டது