கிளைப்பாட்டியல்
கிளைப்பாட்டியல் என்பது படிவளர்ச்சி நோக்கில் உயிரினங்கள் எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ளன, எவ்வாறு உயிரினங்கள் கிளைத்தன என்று பொருத்தி அறியும் இயல். முக்கியமாக இரண்டு கிளைவழி பெருகிய உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவாக ஒரேயொரு முன் உயிரிவகை வடிவம்தான் உண்டு என்னும் கொள்கை உடையது. ஓரு முன்னுயிரான இனமும் அதன் வழி இரண்டிரண்டாக கிளைகள் வழி கிளைத்த எல்லா பிற உயிரினங்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கொப்பு (clade, கிளேடு)) என்று அழைக்கப்படுகின்றது. இம்முறையானது 18 ஆம் நூற்றாண்டில் இருந்து லின்னேயசின் வழி வளர்ந்து வந்திருக்கும் உயிரினங்களை வகைப்படுத்தும் முறைகளில் இருந்து பல வழிகளில் மாறுபட்டது. இன்றுவரை உயிரியல் அறிவாளிகளால் பரவலாக அறியப்பட்டும் ஏற்கப்பட்டும் இருக்கும் அறிவியல் வகைப்பாட்டியலுக்கு இது மாறுதலான ஒரு முறையாக அமைந்துள்ளது.
கிளைப்பாட்டியலர் உயிரினங்களின் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ முதலானவற்றையும், கணினி முறைகளையும் கொண்டு கிளைத்தொடர்புகளை அறிவர். இவற்றிற்கு கிளைப்படம் (cladogam) என்று பெயர். இவ்வகைப் படங்களைக் கொண்டு காலங்காலமாக வளர்ச்சி பெற்று வந்திருக்கும் எல்லா உயிரினங்களையும் இணைத்து ஓர் உயிர்மரம் என்று கூறப்படும் படத்தை வரைய முற்படுகின்றனர்.