கீழ்த்திசை பச்சைப் பஞ்சுருட்டான்

பறவை துணையினம்

கீழ்த்திசை பச்சைப் பஞ்சுருட்டான் (அறிவியல் பெயர்: Merops orientalis orientalis) என்பது பச்சைப் பஞ்சுருட்டானின் துணையினம் ஆகும்.[1] இது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

விளக்கம் தொகு

கீழ்த்திசை பச்சைப் பஞ்சுருட்டான் பறவையானது சிட்டுக்குருவி அளவில் சுமார் 23 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு கறுப்பாகவும், விழிப்படலம் சிவப்பாகவும், கால்கள் கறுப்பாகவும் இருக்கின்றன. நெற்றி பச்சையாகவும், தலையும் பிடரியும் பொன் நிறத்திலும் இருக்கின்றன. மோவாயும் கண்ணுக்குக் கீழ் ஒரு சிறு கோடும், தொண்டை நாலங் கலந்த பச்சையாக இருக்கும். மார்புக்கும் கழுத்துக்கும் இடையே சிறு கருவளையம் காணப்படும். மார்பும் வயிறும் பச்சை நிறத்தில் இருக்கும். ஐந்து செ. மீ. நாளமுள்ள இதன் வாலின் நடு இறகுகள் மேலும் ஐந்து செ.மீ. அளவுக்கு கம்பி போல நீண்டிருக்கும்.

நடத்தை தொகு

காக்கை, மைனா போல எங்கும் சாதாரணமாக காணப்படும் பறவைகளுள் இதுவும் ஒன்றாகும். வேலிகளிலும், மின்கம்பிகளிலும் அமர்ந்திருக்க காணலாம். உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்து தாவிப் பறந்து பூச்சிகளைப் பிடித்து மீண்டும் அமர்ந்து விழுங்கும். கடற்கரைப் பகுதிகளிலும் இப்பறவையைக் காண இயலும். அங்கு மணல் வெளியில் தரையில் அமர்ந்து புழு பூச்சிகளைப் பிடிக்கும். பறக்கும் பூச்சிகளை விடாது துரத்தி இலாவகமாக பிடிக்கும் ஆற்றல் வாய்ந்தது. இதன் முதன்மை உணவாக வண்டுகள், பூச்சிகள் போன்றவை ஆகும்.[2]

ட்ரீஇ, ட்ரீஇ, ட்ரீஇப் என பறக்கும் போதும் அமர்ந்திருக்கும் போதும் கத்தும்.

இனப்பெருக்கம் தொகு

இவை மார்ச் முதல் மே முடிய இனப்பெருகம் செய்கின்றன. ஆற்றங்கரையில் உள்ள மண் திட்டுகள், சாலையோர கால்வாய்களின் மணல் திட்டுகள் போன்றவற்றில் வங்கு குடைந்து அதன் உள்ளே நான்கு முதல் ஏழு வரையிலான வெள்ளை முட்டைகளை இடும். வங்கு குடைவது குஞ்சுகளைப் பேணுவது போன்றவற்றில் ஆண் பெண் பறவைகள் இணைந்து செயல்படும்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Ali, S; S D Ripley (1983). Handbook of the birds of India and Pakistan. 4 (2nd ). Oxford University Press. பக். 108–111. 
  2. 2.0 2.1 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 303-304.