குடும்பப் பெயர்

குடும்பப் பெயர் என்பது, தற்காலத்தில் ஒருவருடைய பெயரில் சூட்டிய பெயருடன் சேர்த்து வழங்கப்படும் பெயர் ஆகும். இந்த வழக்கம் மேற்கு நாடுகளில் தொடங்கி இன்று உலகின் பல பாகங்களிலும் கைக்கொள்ளப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் உயர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் மரபுப் பெயர் அல்லது பட்டப் பெயர்களை சூட்டிய பெயர்களுடன் சேர்த்து வழங்கினர். இது கூடுதல் பெயர் என்னும் பொருளில், ஆங்கிலத்தில் surname என வழங்கப்பட்டது.[1] இன்று குடும்பப் பெயர், கூடுதல் பெயர் இரண்டும் ஒரு பொருட் சொற்களாகவே பயன்பட்டு வருகின்றன.[2] மேனாட்டு வழக்கில் குடும்பப் பெயர் முழுப் பெயரின் இறுதியில் வருவதால், இதை இறுதிப் பெயர் என்றும் அழைப்பது உண்டு. எனினும் பொதுவான ஐரோப்பிய வழக்கத்துக்கு மாறாகச் சில ஐரோப்பிய நாடுகளிலும், உருசியா, சீனா, சப்பான், கொரியா, மடகாசுக்கர், வியட்நாம் போன்ற நாடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் இது சூட்டிய பெயருக்கு முன் வைக்கப்படுகிறது.

உலகின் எல்லாப் பண்பாடுகளிலும் ஒருவரது பெயரில் சூட்டிய பெயர், குடும்பப் பெயர் எனக் கூறுகள் இருப்பதில்லை. பல பண்பாட்டினர், சூட்டிய பெயர் ஒன்றையே கொண்ட தனிப்பெயர் முறை கொண்டவர்களாக உள்ளனர்.

கூடுதல் பெயர் அல்லது குடும்பப் பெயர் என்னும் கருத்துரு ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்தைச் சேர்ந்தது. இது மத்திய காலத்தில் வழக்கில் இருந்த துணைப்பெயர் அல்லது பட்டப்பெயர் வழக்கத்தில் இருந்து உருவானது. ஒருவருடைய தொழில் அல்லது வாழும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு துணைப்பெயர்கள் வழங்கப்பட்டன. ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்டோர் இருக்கும்போதே பெரும்பாலும் துணைப் பெயர்களின் தேவை ஏற்பட்டது.

பெயர் ஒழுங்கில் குடும்பப் பெயர்

தொகு

பெரும்பாலான மேல் நாட்டுப் பண்பாடுகளில் குடும்பப் பெயர் சூட்டிய பெயருக்குப் பின்னால் இறுதிப் பெயராக வரும். ஆனால், ஐரோப்பாவின் சில பகுதிகளிலும், உருசியா, சீனா, சப்பான், கொரியா, மடகாசுக்கர், வியட்நாம் போன்ற நாடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் இது சூட்டிய பெயருக்கு முன் வைக்கப்படுகிறது. எனினும் சப்பான், தாய்லாந்து, அங் ஆங்க் போன்ற நாடுகளில், பெயர்களை இலத்தீன் எழுத்தில் எழுதும்போது மேல் நாட்டு முறைப்படி ஒழுங்கு மாற்றி குடும்பப் பெயரைப் பின் வைத்து எழுதுகின்றனர். பன்னாட்டுத் தொடர்புகளில் ஏற்படக் கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகத் தற்காலத்தில், இந்த நடை முறையைப் பல பண்பாட்டினரும் கடைப்பிடிக்கின்றனர்.

இந்தியாவின் பல பகுதிகளில் சாதிப் பெயரே கூடுதல் பெயராக வழங்கி வருகின்றது. காமராச நாடார், சரத் யாதவ், சந்திரபாபு நாயுடு போன்ற பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். தமிழ் நாட்டில் சாதிப் பெயர்களைச் சேர்த்து வழங்கும் முறை தற்போது சட்டப்படி இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு உட்பட இந்தியாவின் சில பகுதிகளில், குடியேற்றவாத ஆட்சிக் காலத்தில் தந்தையின் பெயரை அல்லது ஊர்ப் பெயரை அல்லது இரண்டையும் கூடுதல் பெயராகச் சேர்த்துக்கொள்ளும் வழக்கமும் உருவானது. இம்முறையில் கூடுதல் பெயரைச் சூட்டிய பெயருக்கு முன் வைப்பதே வழக்கம்.

குறிப்புக்கள்

தொகு
  1. Online Heritage Dictionary இல் Surname என்பதற்கான பதிவைப் பார்க்கவும்.
  2. The Free Dictionary இல் surname சொல்லுக்கான பதிவு.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடும்பப்_பெயர்&oldid=2746592" இலிருந்து மீள்விக்கப்பட்டது