குதுப் சாகி கல்லறைகள்

குதுப் சாகி கல்லறைகள் (Qutb Shahi Tombs) இந்தியாவில், ஐதராபாத் நகரில் கோல்கொண்டா கோட்டைக்கு அருகில் உள்ள இப்ராகிம் பாக் எனுமிடத்தில் அமைந்துள்ள கல்லறைகள் ஆகும். இவ்விடத்தில் குதுப் சாகி வம்சத்தில் வந்த பல்வேறு அரசர்களின் கல்லறைகளும் மசூதிகளும் அமைந்துள்ளன.[3] சிறிய கல்லறைகள் ஒரு தளத்தையும், பெரிய கல்லறைகள் இரண்டு தளங்களையும் கொண்டுள்ளன. ஒவ்வொரு கல்லறையின் நடுவிலும் ஒரு சுடுமண் ஈமப்பேழை உள்ளது, இது கீழே உள்ள புதைகுழியில் ஈமப்பேழைக்காக விடப்பட்ட இடத்தை நிரப்பி விடும். இந்த மாடங்கள் நீலம் மற்றும் பச்சை நிற பளிங்கு கற்களால் அழகுபடுத்தப்பட்டன. அவற்றின் ஒரு சில துண்டுகள் மட்டுமே இப்பொழுது காணப்படுகின்றன.[4]

குதுப் சாகி கல்லறைகள்
அயாத் பக்சி பேகமின் கல்லறை
வகைகல்லறை சதுக்கம்
அமைவிடம்கோல்கொண்டா, ஐதராபாத்
ஆள்கூற்றுகள்17°23′42″N 78°23′46″E / 17.395°N 78.396°E / 17.395; 78.396
கட்டப்பட்டது16ஆம் மற்றும் 17ஆம் நூற்றாண்டுகள்
மீட்டெடுப்பு2013-2019
மீட்டெடுத்தவர்தெலுங்கானா மாநில தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறை மற்றும் ஆகா கான் கலாச்சார அறக்கட்டளை[1][2]
கட்டிட முறைஇந்தோ - இசுலாமிய கட்டிடக்கலை

அமைவிடம் தொகு

 
கோல்கொண்டா கோட்டையில் இருந்து குதுப் சாகி கல்லறைகளின் தோற்றம்

அவை கோல்கொண்டா கோட்டையின் பஞ்ஜாரா தர்வாஸா (நாடோடி மக்களின் நுழைவாயில்) அருகில் உள்ள வெளிப்புற கோட்டைச்சுவரின் வடபகுதியில் இப்ராகிம் பாக் என்றழைக்கப்படும் இடத்தின் மத்தியில் அமைந்துள்ளது.

கல்லறைகள் தொகு

கல்லறைகள் பெரிய தொகுதியை உருவாக்குவதோடு ஒவ்வொன்றும் ஒரு உயர்த்தப்பட்ட மேடையின் மீது அமைக்கப்பட்டுள்ளன. இவை குவிமுக மாடத்தைக் கொண்டவையாகவும், சதுர வடிவ அடித்தளத்தைக் கொண்டவையாகவும் கூர்முனைகளைக் கொண்ட அலங்கார வளைவுகளைக் கொண்டும் இந்திய மற்றும் பெர்சிய கட்டிடக் கலைகளின் தனித்துவமான கலவையாகவும் அமைந்துள்ளன. இக்கல்லறைகள் நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளையும், சுற்றிலும் அழகாக வடிவமைக்கப்பட்ட தோட்டங்களையும் கொண்டுள்ளன. [5] இந்தக் கல்லறை மாடங்கள் முன்னொரு காலத்தில் விரிப்புகள், சர விளக்குகள், வெள்ளித் தம்பங்களின் மேலான விதானங்கள் ஆகியவற்றால் அழங்கரிக்கப்பட்டிருந்தன. திருக்குரானின் நகல்கள் பீடங்களில் வைக்கப்பட்டு பார்வையாளர்கள் அவற்றில் காணப்படும் இறை வசனங்களை மனனம் செய்ததோடு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஓதவும் செய்தனர். சுல்தான்களின் கல்லறைக் குவிமாடங்களை மற்ற அரச/அமைச்சு குடும்ப உறுப்பினர்களின் கல்லறை மாடங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு தங்கமயமான தூபிகள் இணைக்கப்பட்டன.

வரலாறு தொகு

குதுப் சாகியின் காலத்தில், இந்தக் கல்லறைகள் மிகவும் மதிப்பிற்குரிய இடங்களாக இருந்தன. ஆனால், அவருடைய ஆட்சிக் காலத்திற்குப் பிறகு சர் சலார் ஜங் III 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புத்தாக்கத்திற்கு உத்தரவிடும் வரையிலும் புறக்கணிக்கப்பட்டே வந்தது. அதன் பின்னர் மீண்டும் குதுப் சாகி குடும்பத்தின் கல்லறைத் தோட்டமானது ஒரு அமைதியான அழகாக மாறியது. குதுப் சாகி சுல்தான்களின் கடைசி சுல்தானைத் தவிர மற்ற அனைவரும் இந்தக் கல்லறைத் தோட்டத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டனர்.

சுல்தான் குலி குதுப் முல்க்கின் கல்லறை அமைப்பின் பாணியே அவருக்குப் பின் வந்த சந்ததியினருக்கு ஒரு மாதிரியாக அமைந்தது. இதன்படி மையத்திலிருந்து அனைத்து திசைகளிலும் 30 மீட்டர்கள் கொண்ட பரப்பளவைக் கொண்ட பீடங்களின் மேல் இவை அமைக்கப்பட்டன. குவிமாடமானது ஒரு ஒழுங்கு எண்கோணமாகவும், ஒவ்வொரு பக்கமும் 10 மீட்டர்கள் பக்க அளவைக் கொண்டதாகவும் அமைக்கப்பட்டிருந்தன. ஒட்டுமொத்த அமைப்பும் நடுநாயகமாக ஒரு வட்ட வடிவ குவிமாடத்தைக் கொண்டிருந்தது. இந்த கல்லறைத் தோட்டத்தில் மூன்று இடுகாடு களங்கள் காணப்படுவதோடு குதுப் சாகி சந்ததியின் குடும்ப உறுப்பினர்கள் 21 பேரின் கல்லறைகளும் இந்தச் சுற்றுப்புற நிலப்பகுதியில் காணப்படுகின்றன.

முக்கிய கல்லறையைத் தவிர மற்ற பெரும்பாலானவற்றில் கல்வெட்டுகள், சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் கல்வெட்டுகள் குறைவாகவே காணப்படுகின்றன. சுல்தான் குலியின் கல்லறையில் உள்ள கல்வெட்டு நாஸ்க் மற்றும் டெளக் (இசுலாமிய எழுத்தணிக்கலை) வடிவ எழுத்துக்களாலான மூன்று பட்டைகளைக் கொண்டுள்ளது. இந்தக் கல்வெட்டானது, தக்காணத்தின் மக்கள் சுல்தானை அழைப்பதற்குப் பயன்படுத்திய வார்த்தையான படே மாலிக் (பெரிய தலைவன்) என்ற சொல்லைக் கொண்டுள்ளது. இந்தக் கல்லறையானது கி.பி. 1543 இல் சுல்தானின் வாழ்வுக் காலத்திலேயே கட்டப்பட்டதாகும். தங்களுக்கான கல்லறையைத் தாங்களே கட்டுவது வழக்கமாக இருந்தது.

மறுசீரமைப்பு பணிகள் தொகு

கல்லறை மாடங்கள் தெலுங்கானா மாநில தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் துறை மற்றும் ஆகா கான் கலாச்சார அறக்கட்டளை ஆகியோரின் கூட்டு முயற்சியால் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடந்து கொண்டிருக்கிறது.[6][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Restoration in Hyderabad | Aga Khan Development Network". www.akdn.org. பார்க்கப்பட்ட நாள் 2019-01-05.
  2. Sigamany, Navin (2018-04-29). "In Images: As Hyd's Qutb Shahi Tombs reopen after 5 years, a peek into the restoration". The News Minute. https://www.thenewsminute.com/article/images-hyds-qutb-shahi-tombs-reopen-after-5-years-peek-restoration-80395. 
  3. 3.0 3.1 Centre, UNESCO World Heritage. "The Qutb Shahi Monuments of Hyderabad Golconda Fort, Qutb Shahi Tombs, Charminar". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-05.
  4. Restoration of Quli Qutub Shahi tombs
  5. Archaeology Dept. increases security at Qutb Shahi tombs
  6. Nanisetti, Serish (2018-02-07). "Resurrected monuments at Qutb Shahi tombs set to be thrown open in March" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Hyderabad/resurrected-monuments-at-qutb-shahi-tombs-set-to-be-thrown-open-in-march/article22682711.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதுப்_சாகி_கல்லறைகள்&oldid=3840724" இலிருந்து மீள்விக்கப்பட்டது