குருதியடக்குவடப் பரிசோதனை
குருதியடக்குவடப் பரிசோதனை அல்லது குருதி நுண்குழாய்ச் சிதைதன்மைப் பரிசோதனை (tourniquet test) என்பது குருதி நுண் குழாயில் (மயிர்த்துளைக்குழாய்) சிதைவு ஏற்பட்டு குருதிக் கசிவு உண்டாகின்றதா என்பதை அறிய உதவும் அறுதியிடல் பரிசோதனை ஆகும். இது ஒரு நோயாளியின் குருதிப் போக்கைத் தீர்மானிக்கவல்ல ஒரு மருத்துவப் பரிசோதனை முறையாகும். குருதி நுண் குழாயின் சுவர்களில் சிதைவுத் தன்மை உண்டாவதை இப் பரிசோதனை மூலம் மதிப்பீடு செய்து கொள்ளலாம், இது குருதிச் சிறுதட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதென்பதைக் கண்டறிய உதவுகின்றது.
டெங்கு காய்ச்சலை அறுதியிடத் தேவையானதொரு பரிசோதனை என இது உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது. குருதி அழுத்தத்தை அளக்கப் பயன்படும் குருதியழுத்தமானியின் அழுத்தவடம் கையில் இடப்படும். பின்னர், சுருக்க அழுத்தத்துக்கும் விரியல் அழுத்தத்துக்கும் இடைப்பட்ட அழுத்தத்தில் காற்று நிரப்பப்பட்டு ஐந்து நிமிடங்களுக்கு விடப்படும். பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட சிவப்புக் குருதிப்புள்ளிகள் ஒரு சதுர அங்குலத்தில் தோன்றின் இப்பரிசோதனை நேரானது. டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் உள்ளவரில் வழமையாக சிவப்புக் குருதிப்புள்ளிகளின் எண்ணிக்கை இருபதுக்கும் மேற்பட்டு இருக்கும்.[1]
பெண்களில் மாதவிடாயின் முன்னர் அல்லது பின்னர், சூரியக் கதிரால் பாதிக்கப்பட்ட தோல் உடையவர் ஆகியோரில் குருதி நுண் குழாயில் சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு ஆதலால் இப்பரிசோதனை உயர் தனிக்குறிப்புத் தன்மை அற்றது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.searo.who.int/LinkFiles/Regional_Guidelines_on_Dengue_DHF_prevention_&_control_searo-29.pdf
- ↑ Pagana, & Pagana, 1998; Tsai, 2000