குலையா குலையா முந்திரிக்காய்

குலையா குலையா முந்திரிக்காய் அல்லது குலை குலையா முந்திரிக்கா என்னும் விளையாட்டு சிறுவர் சிறுமியர் கூடி விளையாடும் திளைப்பு விளையாட்டு. இதனை 'ஆனைத்திரி', 'திரி திரி பந்தம்' என்றும் பாடப்படும் பாடலுக்கேற்பப் பெயரிட்டு வழங்குவர். விளையாடுவோர் அனைவரும் வட்டமாக உட்காருவர். ஒருவர் மட்டும் துணித்திரி ஒன்றைத் தன் ஆடைக்குள் மறைத்துக்கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும் வட்டத்துக்கு வெளியே சுற்றிவருவார். அப்போது அவர் பாடிக்கொண்டே வருவார். அமர்ந்திருப்போரில் ஒருவருக்குப் பின்னால் அவருக்குத் தெரியாமல் துணித்திரியை வைத்துவிட்டு மீண்டும் தன் கையில் துணி இருப்பது போல் பாவனை காட்டிக்கொண்டு பாடிக்கொண்டே வருவார்.

தனக்குப் பின்னால் துணித்திரி இருப்பது தெரியவந்தால் அவர் அதனை எடுத்துக்கொண்டு திரி வைத்தவரைப் பின் தொடர்ந்து அவர் முதுகில் அந்தத் துணித்திரியால் அடித்துக்கொண்டே வருவார். அடிபடுபவர் துரத்தி அடிப்பவர் இடத்துக்கு வந்ததும் அவர் இடத்தில் தான் அமர்ந்துகொள்வார். பின் கையில் திரி உள்ளவர் பாடிவர ஆட்டம் தொடரும்.

தனக்குப் பின்னால் துணித்திரி இருப்பது தெரியாமல் ஒருவர் அமர்ந்திருந்தால், ஒரு சுற்று வந்ததும் தான் வைத்த திரியை எடுத்து அவர் முதுகில் அடித்துக்கொண்டு துரத்துவார். அவர் அடி பட்டுக்கொண்டே ஒரு சுற்று வந்து தான் இருந்த இடத்திலேயே அமர்ந்துகொள்வார்.

இதுதான் விளையாட்டு. தந்திரமாக வைப்பது, அடிப்பது, அடி படுவது, மற்றவர் பார்த்து மகிழ்வது போன்ற திளைப்புகள் இந்த விளையாட்டில் உண்டு.

பாடல்கள்

தொகு
பாடல் 1
திரி திரி பந்தம்
திருமால் தந்தம்
திரும்பிப் பார்த்தால் ஒருமொட்டு

இவ்வாறு சுற்றிவருபவர் மட்டும் பாடுவார். தனக்குப் பின்னால் திரி வைக்கிறாரா என்று திரும்பிப் பார்ப்பவர் தலையில் ஒரு குட்டும் போடுவார்.

பாடல் 2
குலையா குலையா முந்திரிக்காய் (சுற்றுபவர் பாடும் பாடல்)
நரியே நரியே சுற்றி வா (அமர்ந்திருப்பவர் அனைவரும் சேர்ந்திசை)
கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான் (சுற்றுபவர் பாடும் பாடல்)
கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி (அமர்ந்திருப்பவர் அனைவரும் சேர்ந்திசை)

திரும்பத் திரும்பப் பாடப்படும்

மேலும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  1. நா. செயப்பிப்பிரகாசு, பெருங்கதையின் காலம், பதினாலாவது கருத்தரங்கு மலர் ஆய்வுக்கோவை, தொகுதி ஒன்று, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்மன்றச் சார்பு வெளியீடு, 1982
  2. இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியாடு, 1980.
  3. இ.ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982.