குள்ளநரியா அல்லது புலியா?
குள்ளநரியா அல்லது புலியா? என்பது ஒரு இந்திய விசித்திரக் கதையாகும். ஸ்காட்லாந்திய எழுத்தாளர் ஆண்ட்ரூ லாங் இக்கதையை அவரது ஆலிவ் ஃபேரி புத்தகத்தில் இணைத்துள்ளார்.[1]
சுருக்கம்
தொகுஒரு நாள் இரவில் ஒரு அரசனும் அரசியும் ஊளைச் சத்தத்தைக் கேட்கின்றனர். அரசன் புலி என்றும், அரசி குள்ளநரி என்றும் நினைத்தனர். இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது. அரசியின் கூற்றுப்படி அது குள்ளநரியாக இருந்தால் அரசன் தனது அரசை அரசியிடமே கொடுத்துவிடுவேன் என்றும், மாறாகப் புலியாக இருந்தால் அரசி நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டுமென்றும் அரசன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அவளை அரசியாக்கி விடுவேன் என்றும் கூறினான். அவன் காவலாட்களை அழைத்து சத்தமிட்ட விலங்கு எதுவென்று கேட்டான். அரசன் எண்ணிய புலியல்ல அவ்விலங்கு என்று கூறினால் அரசனின் கோபத்துக்கு ஆளாகித் தண்டனை கிடைத்துவிடுமென்ற அச்சத்தில் காவலாட்கள் அவ்விலங்கு புலிதான் என்று கூறிவிட்டனர்.
அரசன் அரசியைக் காட்டில் விட்டுவிட்டான். ஒரு விவசாயி அவளுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவளுக்கு அமீர் அலி என்ற மகன் பிறந்தான். பதினெட்டு வயதில் அமீர் அலி சாகசங்களைச் செய்யத் தொடங்கினான். அவர் ஒரு புறாவைச் சுட்டதால், ஒரு வயதான பெண்ணின் பானையை உடைத்து விட்டான். அதனால் தான் எடுத்துச் சென்ற பித்தளை பானையை அவளிடம் கொடுத்து, அவளுக்கு தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தான். அவளது குடிசையில் ஒரு அழகான இளம் பெண்ணை பார்த்தான். அவனுக்கு எப்போதாவது உதவி தேவைப்பட்டால் காட்டின் தேவதையை அழைக்கும்படிக் கூறினாள். அவன் அந்த அழகான இளம் பெண்ணை மட்டுமே நினைத்தான்.
அமீர் அலி அரசனின் அரண்மனைக்குச் சென்று அவனுடைய சேவையில் சேர்ந்தான். ஒரு புயல் இரவு, வெளியே ஒரு பெண் அழும் சத்தம் கேட்டது. அது என்ன என்பதைக் கண்டுபிடிக்க ராஜா ஒரு வேலைக்காரனுக்குக் கட்டளையிட்டார், ஆனால் அந்த வேலைக்காரன் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியதால் அமீர் அலி செல்ல முன்வந்தான். தூக்குக் கயிற்றின் அடியில் ஒரு பெண் புலம்புவதைக் கண்டான், அவள் உண்மையில் ஒரு அரக்கியாக இருந்தாள். அந்த உடல் தனது மகனுடையது என்று அமீர் அலியிடம் கூறினார். அவன் அதை அவளுக்காகக் கீழே இறக்க முயன்றபோது, அவள் அவனைப் பிடிக்க முயன்றாள். ஆனால் அவன் அவளைக் கத்தியால் குத்தினான். அவள் அவனிடமிருந்து தப்பி ஓடினாள். தப்பி ஓடும்போது தனது கணுக்கால் கொலுசு ஒன்றை விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். அரசனிடம் சென்று அமீர் அலி நடந்ததைக் கூறி கொலுசையும் தந்தான். அரசன் அக்கொலுசைத் தனது செருக்கும் கெட்ட குணமும் கொண்ட மகளிடம் கொடுத்தான்.
அந்த இளவரசியிடம் இரண்டு பேசும் பறவைகள் இருந்தன. ஒன்று கிளி மற்றது ஒரு மைனா. மைனா, தானே கொலுசாக மாறியதாக எண்ணிக் கொண்டது. ஆனால் கிளி இளவரசியின் கால்கள் பொருத்தமாக இல்லையெனக் கூறியது. இளவரசி அரசனிடம் சென்று மற்றொரு கொலுசு வேண்டுமெனக் கேட்டாள். அரசனும் அமீர் அலியைக் கூப்பிட்டு ஒரு மாதத்திற்குள் இன்னுமொரு கொலுசைக் கொண்டுவரவேண்டுமென்றும் தவறினால் மரணதண்டனை கிடைக்குமென்றும் ஆணையிட்டான்.
ஒரு மாதம் முடிவதற்கு ஒரு வாரமே இருந்தபோது அமீர் அலி காட்டின் தேவதையை அழைத்தான். அந்த அழகிய இளம்பெண் அவன் முன்னே தோன்றினான். அவனது தேவையைக் கேட்ட அவள் தனது பாதத்தை வெட்டுமாறும் அதனால் கிடைக்கும் இரத்தத்தைக் கொண்டு நகைகளைப் பெறலாமென்றும் அதன் பின்னர் அவளது பாதத்தை மந்திரக்கோல்களின் உதவியால் சரிசெய்து விடலாமென்றும் கூறினாள். முதலில் அவளது காலை வெட்ட அமீர் அலி தயங்கினான். என்றாலும் அவள் சொன்னபடியே செய்து கொலுசைப் பெற்றான்.
மைனா அந்த இரு கொலுசுகளைப் பார்த்துப் பாராட்டியது. ஆனால் கிளி திருப்தியடையவில்லை. எனவே இளவரசி மீண்டும் அரசனிடம் சென்று மேலும் கழுத்தணியும் வளையல்களும் வேண்டுமென்று கேட்டாள். அரசன் அவற்றைக் கொண்டுவருமாறு அமீர் அலிக்கு ஆணையிட்டான். அமீர் அலியும் முன்பு செய்ததைப்போன்றே செய்து அவற்றையும் கொண்டுவந்து கொடுத்தான்.
கிளி இப்போது இளவரசியை அமீர் அலியைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியது. இளவரசியும் அரசனிடம் வந்து அவ்வாறே கேட்டாள். அரசனும் ஒத்துக்கொள்ள அமீர் அலி மறுத்துவிட்டான். அதனால் அரசன் அமீர் அலியைச் சிறையிலடைத்தான். தனது மகளின் திருமணத்திற்காகவும் அரச வாரிசுக்காகவும் ஆட்களைப் பல இடங்களுக்கும் அனுப்பி மணமகனைத் தேட முற்பட்டான்.
இந்நிலையில் அரசியைக் காப்பாற்றிய விவசாயி கூட்டத்துடன் சேர்ந்துவந்து அரசனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். நரிகள் உணவு கிடைக்கக்கூடிய இடங்கள் எங்கும் வேட்டையாடும் ஆனால் புலி காட்டில் மட்டுமே வாழும் என்பதை அரசன் நினைவில் கொள்ள வேண்டுமென அரசனிடம் கூறினார். மேலும் அவ்விவசாயி ராணியை எவ்வாறு கண்டுபிடித்தார் என்பதையும், அமீர் அலி அவளுடைய மகன் என்பதையும் விளக்கினார். அரசன் தனது செயலுக்கு வெட்கித் தனது அரியணையை அமீர் அலிக்கே அளித்தார். அவனும் காட்டில் வாழ்ந்த அழகிய பெண்ணை மணந்து அரசாண்டான்.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- "Jackal or Tiger? by Andrew Lang". – at the Educational Technology Clearinghouse, தெற்கு புளோரிடா பல்கலைக்கழகம்