கூட்டப்பள்ளி
கூட்டப்பள்ளி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டு வட்டத்தில் உள்ள சிற்றூர். திருச்செங்கோட்டிலிருந்து ஈரோடு செல்லும் சாலையில் நான்கு கல்தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. திருச்செங்கோடு நகராட்சியின் எல்லை இது. 'பள்ளி' என்பது ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறாக அமைவதுண்டு. தமிழகம் முழுவதும் பல 'பள்ளி'கள் உள்ளன. சமண முனிவர்களின் தங்குமிடத்தைப் 'பள்ளி' என அழைத்த காரணத்தால் ஊர்களுக்கும் 'பள்ளி' எனப் பெயர் வந்ததாகச் சிலர் கருதுகின்றனர். ஆடு மாடுகள் நிறைந்திருந்த ஊர்களையும் 'பள்ளி' என அழைப்பதுண்டு. அவ்வகையில் இவ்வூர்ப் பெயர் அமைய இரண்டு காரணங்களையுமே கூறலாம். திருச்செங்கோட்டு மலையில் சமண முனிவர்களின் படுக்கைகள் இருக்கின்றன. திருச்செங்கோட்டுக்கு அண்மையில் இவ்வூர் இருப்பதாலும் ஒருகாலத்தில் சமணர்கள் கூடி வாழ்ந்த காரணத்தாலும் கூட்டப்பள்ளி எனப் பெயர் பெற்றிருக்கலாம். ஆடுமாடுகளுக்கான மேய்ச்சல் நிலமாக இருந்த காரணத்தால் கூட்டப்பள்ளி என அழைக்கப்பட்டிருக்கலாம். மாரியம்மன் கோயில் சிறப்புடையது. அண்ணா நகர் என்னும் அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பெரிய அளவில் இங்கு அமைந்துள்ளது. நகராட்சி நடுநிலைப் பள்ளி ஒன்று இங்கு செயல்படுகின்றது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லும் சாலையில் நம்பியூரை அடுத்து 'கூட்டப்பள்ளி' என்னும் பெயர் கொண்ட சிற்றூர் ஒன்று உள்ளது.