கூட்டாட்சி

(கூட்டரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பலதரப்பட்ட அரசியல் சமூகங்களை ஒரு பொது அரச கட்டமைப்பில் அச்சமூகங்களின் பொதுத் தேவைகளை நிறைவு செய்வதற்காக உருவாக்கப்படும் அரசாட்சி முறையே (government sytem) கூட்டாட்சி (இலங்கை வழக்கு:சமஷ்டி) (Federal system) ஆகும். கூட்டாட்சி முறையில் அமைக்கப்படும் அரசு கூட்டரசு எனப்படும்.

உலகில் உள்ள கூட்டரசு நாடுகள்


கூட்டாட்சியில் பொதுத் தேவைகளுக்காக ஒரு பொது அரச கட்டமைப்பும், அந்த கூட்டமைப்பில் சேர்ந்துள்ள தனித்துவ அரசியல் சமூகங்களுக்காக உள்ளூர் அல்லது மாகாண அல்லது மாநில அரச கட்டமைப்புக்களும் இருக்கும். கூட்டரசு உருவாக்கப்படும்பொழுது ஏற்றுக்கொள்ளப்படும் அரசியலமைப்பு சட்டம் கூட்டரசுக்கும் உள்ளூர் அரசுகளுக்குமிடையே இருக்கும் உறவுகளையும், கடமைகளையும், உரிமைகளையும் விபரித்து இரண்டு அம்சங்களுக்கிடையான சட்ட ஆக்க அதிகாரப் பங்கீடுகளையும் விபரிக்கும். இந்தியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாட்சி அரசுகளுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.


தோற்றம்

தொகு

கூட்டாட்சி, கூட்டரசு முறையை ஆங்கிலத்தில் பெடரலிசம் (Federalism) என்பர். இச் சொல் நட்பு என்னும் பொருள் தரும் பேடசு (“foedus”) என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததாகும். நட்புறவான கூட்டு ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை என பொருள்படும். கூட்டாட்சி அரசியலமைப்பு அண்மைக்காலமாக அதிகளவில் பேசப்படுகின்ற ஒரு ஆட்சிமுறையாகும். என்றாலும் கிரேக்கத்தின் நகர அரசுகளிலும் இனங்காணப்படுமளவிற்கு பழமைவாய்ந்த ஒன்றாகும்.

1787 ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பில் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டதுடன் புதியதொரு வளர்முகத்தை அடைந்தது எனலாம். அமெரிக்கக் கூட்டுநாடுகளின் அரசியல் அமைப்பு உலகின் முதன்முதலாக எழுதப்பட்ட யாப்பாகக் கருதப்படுகின்றது. எனவே கூட்டரசு முறையின் தொடக்கமாக 18 ஆம் நூற்றாண்டும், அறிமுக நாடாக அமெரிக்கக் கூட்டுநாடுகள் என்னும் ஐக்கிய அமெரிக்காவும் கருதப்படுகிறதது.

கூட்டாட்சி தொடர்பாக அரசியல் அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:-

தொகு

பல நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய நாட்டினை அமைக்கும் முறையே கூட்டரசு ஆகும்.-ஆமில்டன்

நாட்டு ஒற்றுமையையும் அதிகாரத்தினையும் மாநில உரிமைகளின் பாதுகாப்பினையும் பொருந்தச் செய்யும் அரசியல் வழிமுறையே கூட்டாட்சி முறையாகும்.-பேராசிரியர் டைசி

தேசிய நோக்கிலும் உட்பகுதிகளின் நோக்கிலும் அதிகாரங்களை பங்கீடு செய்து கூட்டரசில் இணைந்த ஒவ்வொரு அலகும் ஈடான (சமமான) முறையில் தொடர்புகளையும் பேணிக்கொள்கின்ற அதேவேளை விடுபாட்டுணர்வோடும் (சுதந்திரமாகவும்) தமது எல்லைக்குள் செயற்படும் ஓர் அரசுமுறை- கே.சி வெயர்

நாடுகள் குறுநிலப்பகுதிகள் மாநிலங்கள் குடியரசு எனப்பலவிதமாக உரைக்கப்படும் உள் உறுப்புக்களுக்கும் நடுவண் அரசுகளுக்கும் இடையிலான அதிகாரப்பங்கீடு கூட்டரசு எனப்படும்.-சே'.டபிள்யூ. கானர்.

ஆகவே கூட்டரசு என்பது நடுவண் அரசொன்றின் தலைமையின் கீழ் சிறிய மாநில அரசுகளும் பிற ஆட்சிப்பகுதிகளும் தமது தன்னுரிமையையும் தனித்துவத்தையும் இழந்துவிடாத வகையில் சில பொதுவான நலன்களை எய்துவதை நோக்காகக் கொண்டு ஆட்சிப்பொறுப்புப் பங்கீடு (அதிகாரப்பங்கீடு) ஏற்பாட்டின் அடிப்படையில் இயங்கும் ஆட்சி முறையானது கூட்டரசு ஆட்சிமுறை எனப்படும்.

ஒருதலை ஆட்சியும் கூட்டரசு ஆட்சியும்

தொகு

ஒருதலை ஆட்சி கூட்டரசு ஆட்சி

ஆட்சிப்பொறுப்பு (அதிகாரம்) நடுவே குவிந்திருப்பது ஆட்சிப்பொறுப்பு பன்முகப்படுத்தப்பட்ட அரசமுறை

நடுவண் அரசு மட்டுமே காணப்படும் நடுவண்-மாநில அரசுகள் காணப்படும்.

முழு நாட்டின் மீதும் நடுவணரசு மேலாண்மை செலுத்தும் மாநில அரசுகள் தமது பரப்பினுள் தன்னுரிமையுடன் செயற்படும்

அரசியல் யாப்பினுடாக மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய சட்ட மன்றத்திடமே எல்லா அதிகாரங்களும் காணப்படும். இரு மன்றம் காணப்படும் சட்டங்கள் அதிகளவில் வேறுபட்டு காணப்படும். மத்திய அரசே இறைமையின் உறைவிடம்.

சட்டங்கள் நாடு முழுவதற்கும் பொதுவானது. நாட்டின் இறைமை மத்திய மாநில நிர்வாக மட்டத்தில் நன்மைகள் காணப்படும். அரசுகளிடம் காணப்படும்.

தேசிய ஒருமைப்பாடு பேணப்படும். நிர்வாக சிக்கல்கள் கணப்படும். பலமான அரசாக இருக்கும்..


ஒருதலை ஆட்சிக்கு முற்றிலும் மாற்றமான ஒன்றாகவே கூட்டரசு முறை விளங்குகிறது.

கூட்டரசு முறையானது பொது நன்மையை அடைய விரும்பிய நாடுகள் ஒன்றிணைவதன் மூலம் குறிக்கப்பட்ட அரசொன்றின் நிலப்பகுதிக்குள்ளான ஒரு இனக்குழுவினதோ அல்லது இனங்களினதோ தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் இடமளிக்கும் வகையிலும் உருவாக்கப்படும். இன்று உலகில் மக்கள் வாழும் நிலப்பரப்பல் ½ பங்கிற்கும் மேறபட்டவை கூட்டரசு முறைக்கு உட்பட்டவையாகும்.

மேலும் கூட்டாட்சி என்னும் போது நடுவண் அரசாங்கத்தையும் மாநில அரசாங்கத்தையும் ஈடான(சம) உரிமை கொண்ட அரசாங்கங்களாக கருதி ஒன்றுக்கொன்றான உறவு நோக்கிலன்றி ஒன்றினுடைய கட்டளைக்கு மற்றொன்று அடங்கி நடக்கும் நிலையைத் தவிர்த்து தன்னுரிமையான (சுதந்திரமான) முறையில் இரு அரசாங்கங்களும் தமது ஆட்சிப்பொறுப்பு (நிர்வாக) எல்லைக்குள் ஆட்சி செலுத்தும் ஒரு முறையென சுருக்கமாக கூறலாம்.

உலகில் இந்நிலைக்கு மாறான இரு வேறு நிலைகளில் கூட்டாட்சி இயங்குவதைக் காணலாம்.

1.நடுவண் அரசின் அதிகாரம் முதன்மை பெற்ற கூட்டாட்சி 2.மாநில அரசாங்கத்தின் ஆட்சியுரிமை வலுப்பெற்ற கூட்டாட்சி


அத்தோடு ஒருதலையாட்சி கூட்டரசு ஆட்சி இரண்டினதும் பண்புகள் இனணந்த வகையில் காணப்படும் பாதி கூட்டரசு அல்லது குறைகூட்டு ஆட்சி முறைகளும் காணப்படுகிறது.

எடுத்துக்காட்டு;; தென் ஆப்பிரிக்கா-ஒருதலையாட்சியின் சாயல் அதிகம்  இந்தியா- நடுவண் அரசின் தலையீடு அதிகம்.  செருமனி -நடுவண் அரசு மாநில அரசிற்கு கட்டுப்படவேண்டிய நிலை.  பிரசியா எனும் மாநிலம் –அதிக மக்கள்தொகையையும் பெரிய நிலப்பரப்பையும் கொண்டதால் நடுவண் அரசையே கட்டுப்படுத்தும்.


எந்த ஒரு அரசின் மத்திய அரசும் மாநில அரசுகளும் நாட்டின் இறைமையை தமக்குள் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒன்றை மற்றையது கட்டுப்படுத்தாமல் அவற்றுக்கென அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்டிருக்கும் எல்லைக்குள் நின்று தன்னுரிமையுடன் (சுதந்திரமாக) செயற்படுகின்றனவோ அதவே கூட்டரசு முறையாகும்.

ஆகவே கூட்டரசு முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா, கனடா சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம்.

கூட்டரசு ஆட்சி முறையின் பண்புகள்

தொகு

•நடுவண் அரசு மாநில அரசு என்ற பிரிவினை •நடுவண்- மாநில அரசுகளுக்கிடையிலான அதிகாரப்பங்கீடு •எழுதிய உறுதியான நெகிழாத யாப்பு •சம பிரதிநிதித்துவம் •உயர்நீதிமன்றங்கள் •இரட்டைக் குடியுரிமை •இரண்டாம் மன்றம்

கூட்டரசு முறையின் நன்மைகள்

தொகு

•பொருளாதார வளர்ச்சி (எ.கா: ஆத்திரேலியா) •ஆட்சிபொறுப்புரிமை பங்கீடு (செருமனி, அமெரிக்கா) •வேற்றுமையில் ஒற்றுமை (இந்தியா) •பாதுகாப்பு (அமெரிக்கா) •நிர்வகிக்க பொருத்தமான ஆட்சிமுறை (முன்னாள் சோவியத் யூனியன்)


கூட்டரசு முறையின் தீமைகள்

தொகு

•எளிமைற்ற சிக்கலான அமைப்பு •அதிக நிர்வாகச் செலவு.பொருளாதார வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு சுமை அதிகம். •ஆட்சிப்பொறுப்புப் பகிர்வால் மத்திய மாநில அரசகளுக்கிடையில் முரண்பாடுகள் •தேசப்பற்று கூறுபோடப்படல். •ஒன்றில் மத்திய அரசின் பலம் அல்லது மாநில அரசின் பலம் அதிகரித்தல். •கூட்டரசு முறையில் விரைவான தீர்மானங்களை எடுக்க முடியாமை. •அதிகளவு சட்டங்களும் அவற்றில் வேறுபாடுகளும் காணப்படல். •இரட்டை வரி –மக்களுக்கு சுமை அதிகம். •தேசிய ஒருமைப்பாடு பாதிக்கப்படல். •பலங்குன்றிய தேசிய அரசாங்கம் காணப்படல். •இனப்பிரச்சினைக்கு கூட்டரசு முறை நிலைத்தத் தீர்வாக அமையுமா என்பது கேள்விக்குறியாகும். •வெளிநாட்டுக் கொள்கை அமைப்பில் மாநில அரசுகளுக்கு உரிமையின்மை காணப்படல்.

கூட்டரசு முறையின் வெற்றிக்கு அவசியமானவை

தொகு

•இனணவதற்கான விருப்பம் •புவியியல் அண்மை •சமூக நலன்கள் •அரசியற் சமுதாய நிறுவனங்களின் ஒத்த தன்மை •சமூக பொருளாதார வளர்ச்சி •சமத்துவமற்ற நிலைமைகள் இல்லாமை •இன உணர்வு •திறமைவாய்ந்த தலைமைத்துவம் •நடுவ்வண்-மாநில அரசுகளுக்கிடையிலான உறவு


கூட்டரசு முறை அரசாங்கத்தின் நெருக்கடிகள்

தொகு

•நிறைவுதரும் ஆட்சிப்பொறுப்புப் பங்கீடு (இல்லாமை) •பெரிய அலகுகளின் மேலாதிக்கத்திற்கு எதிராக சிறிய அலகுகளை பாதுகாத்தல் •நடுவண்-மாநில அரசாங்க அமைப்புக்கிடையிலான உறவுகள் (பிணக்குகள்) •நிறைவுதரும் அரசியலமைப்பைத் திருத்தும் முறை (இல்லாமை) •பிரிந்து செல்லும் உரிமை (இல்லாமை).


இவை போன்ற நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து அவற்றை தீர்கக்கூடிய முறையில் அரசுகள் செயற்படடால் கூட்டரசு முறை ஒரு சிறந்த ஆட்சி முறையாக விளங்கும் எனக்கருதப்ப்படுகின்றது.

மிகப் பெரிய நிலப்பரப்புக்களை கொண்ட நாடுகளுக்கும் இன மத பொருளாதார வேறுபாடுகளைக் கொண்ட மக்களைக் கொண்ட நாடுகளுக்கும் மிகப் பொருத்தமான ஆடசி முறையாக இக் கூட்டாட்சி முறை விளங்குகிறது. உலகிலே பல நாடுகளிலும் கூட்டாட்சி முறை பின்பற்றப்பட்ட போதிலும் "தூய" கூட்டாட்சி முறை உலகில் எங்கும் நடைமுறையில் இல்லை எனலாம். கூட்டாட்சி என்பது பழமைவாய்ந்த ஒரு முறையாக இருந்த போதிலும் இன்று உலகிலே வலிமை வாய்ந்த நாடுகளில் உள்ள ஒரு முறையாக இது காணப்படுகிறது. பல குறைபாடுகளை இம்முறை கொண்டிருந்ந போதிலும் இன்றும் இலங்கையின் இனச்சிக்கலுக்குக் கூட ஒரு சிறந்த தீர்வாக கூட்டாட்சி முறை திகழும் என அரசியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.

உசாத்துனைகள்

தொகு
  • சமாதான நோக்கு (2006), மாற்றுக் கொள்கைக்கான நிலையம்
  • இலங்கையில் சமஷ்டி எண்ணக்கருவின் தோற்றமும் வளர்ச்சியும் (1926-2005), மாற்றுக் கொள்கைக்கான நிலையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டாட்சி&oldid=2955979" இலிருந்து மீள்விக்கப்பட்டது