கெற்பு
கெற்பு (அல்லது வெடிதூண்டி) (Detonator) எனப்படுவது வெடிமருந்துத் தொகுதியொன்றின் வெடித்தலைத் தொடக்கி வைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வெடிபொருள் ஆகும்.
வகைகள்
தொகுஇவை வெடிக்கவைக்கப்படும் முறைகளைக் கொண்டு பொறிமுறைக் கெற்பு (அல்லது சாதாரண கெற்பு), மின்சாரக் கெற்பு என வகைப்படுத்தப்படுகிறது. இவை பயன்படுத்தப்படும் தேவையைக் கொண்டு இராணுவப் பயன்பாட்டுக் கெற்பு, வர்த்தகப் பயன்பாட்டுக் கெற்பு என வகைப்படுத்தப்படுகிறது.
பொறிமுறை அல்லது சாதாரண கெற்பு
தொகுஒருபக்கம் அடைக்கப்பட்ட சிறிய மெல்லிய குழாயொன்றினுள் உணர்திறன் கூடிய வெடிமருந்துக் கலவைகள் அடைக்கப்பட்டிருக்கும். அடைக்கப்பட்டிருக்கும் முனைப்பக்கமாக வெடிப்பதிர்வைத் தரக்கூடிய உயர்சக்தி வெடிமருந்தும், அதற்கு மேல் தொடக்க வெடிமருந்தாக சிறப்பு இரசாயனக் கலவைகளும் அடுக்கப்பட்டிருக்கும். இத் தொடக்க வெடிமருந்தானது தீப்பொறியொன்று கிடைக்கும்போது வெடித்தலைத் தொடக்கி அடுத்திருக்கும் உயர்சக்தி வெடிமருந்தை வெடிக்க வைக்கும். திறந்த முனையிலிருந்து பார்த்தால் முதலில் தொடக்கி வெடிமருந்து அடுக்குக் காணப்படும். திறந்த முனையூடாக தீப்பொறி கிடைக்கும்போது கெற்பு வெடிக்கிறது. தீப்பொறியை வழங்குவதற்காக கெற்பின் முனையில் வெடிப்பியொன்று பொருத்தப்படலாம் அல்லது திரி மூலம் தீப்பொறி கிடைக்கும் வகையில் செய்யலாம்.
மின்சாரக் கெற்பு
தொகுமின்சாரம் மூலம் வெடிக்கவைக்கப்படும் கெற்புகளே மின்சாரக் கெற்புகள் எனப்படுகின்றன. மேலே குறிப்பிட்ட சாதாரண கெற்பிலுள்ள தொடக்கி வெடிமருந்துக்கு தீச்சுவாலை கிடைத்தால் கெற்பு வெடிக்கும். இந்நிலையில் சாதாரண கெற்பின் திறந்தமுனையில் மின்சார வெடிப்பியொன்றைப் பொருத்திவிட்டால் அது மின்சாரக் கெற்பு ஆகிவிடுகிறது. மின்சார வெடிப்பியானது தங்குதன் இளையொன்றைக் கொண்டிருக்கும். அவ்விளையைச் சுற்றி வெப்பத்துக்கு எரியக்கூடிய மருந்தொன்று தடவப்பட்டிருக்கும். மின்சாரம் கிடைத்தவுடன் தங்குதன் இளை சூடாக அதைச்சுற்றியுள்ள மருந்து தீப்பற்றுகிறது. இதுவே மின்சார வெடிப்பியின் செயற்பாடு. இத்தீச்சுவாலையைத் தொடர்ந்து கெற்பு வெடிக்கிறது.
இராணுவப் பயன்பாட்டுக் கெற்புகள்
தொகுஇராணுவத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் கெற்புகள் இராணுவப் பயன்பாட்டுக் கெற்புகள் எனப்படும்.
வர்த்தகப் பயன்பாட்டுக் கெற்பு
தொகுவர்த்தகத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் கெற்புகள் வர்த்தகப் பயன்பாட்டுக் கெற்புகள் எனப்படுகின்றன. கிணறு தோண்டுதல், பாறையுடைத்தல், சுரங்கம் தோண்டுதல், கட்டடங்களைத் தகர்த்தல் என வர்த்தகத் தேவைகளின்போது இக்கெற்புகள் பயன்படுத்தப்படுகின்றன. வர்த்தகத் தேவைகளில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் ஒப்பீட்டளவில் உணர்திறன் குறைந்தவையாதலால், வர்த்தகப் பயன்பாட்டுக் கெற்புகள் கூடியளவு வெடிப்பதிர்வை வெளியிட வேண்டியுள்ளன. பொதுவாக வர்த்தகக் கெற்புகளில் உணர்திறனும் வெடிப்பதிர்வும் அதிகமாகக் கொண்ட PETN எனும் உயர்சக்தி வெடிமருந்து பயன்படுத்தப்படுகிறது.