ஒன்றனைப் பற்றி அறிந்து கொள்ள ஒருவரை ஒருவர் வினவுகின்றனர். இதை வினா என்கின்றனர்.[1][2][3]

வினா வகைகள்

தொகு

வினா ஆறு வகைப்படும்.

  1. அறிவினா
  2. அறியா வினா
  3. ஐய வினா
  4. கொளல் வினா
  5. கொடை வினா
  6. ஏவல் வினா

அறிவினா

தொகு

தம் அறிவோடு பிறர் அறிவை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும், பிறர் அறிவை அளந்தறியவும் அறியாதவர்க்கு உண்மைப் பொருளை உணர்த்தவும் தாம் அறிந்த ஒரு பொருள் பற்றிப் பிறரிடம் வினாவுவது அறிவினா ஆகும்.

எ.கா:

இப்பாடற் பொருள் யாது? என ஆசிரியர் மாணவரிடம் வினாவுதல், அவன் அறிவை அளந்தறியவும், உண்மைப் பொருளை அவனுக்கு உணர்த்தவுமாதலின் இவ்வினா அறிவினாவாகும்.

அறியா வினா

தொகு

இப்பாடற் பொருள் யாது? என மாணவன் ஆசிரியரிடம் வினாவுதல்.

மாணவன் தான் அறியாத பொருளை அறிந்து கொள்ள வினாவுதல் அறியா வினாவாகும்.

ஐய வினா

தொகு

தொலைவில் தோன்றுவது எருதோ? பசுவோ?

இதுவோ அதுவோ என ஐயத்தைப் போக்கிக் கொள்ள வினாவுதல் ஐய வினாவாகும்.

கொளல் வினா

தொகு

ஒன்றனைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டுப் பிறரிடம் வினாவும் வினா கொளல் வினாவாகும்.

எ.கா:

பத்தாம் வகுப்பு மாணவன் புத்தகக் கடைக்குச் சென்று “பத்தாம் வகுப்புத் தமிழ்ப் புத்தகம் உள்ளதோ?” என்று வினாவுவது கொளல் வினாவாகும்.

கொடை வினா

தொகு

இல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்தற் பொருட்டு வினாவுவது கொடை வினாவாகும்.

புலவரிடம் பொருள் இல்லையோ? என்று மன்னன் புலவரிடம் வினாவுதல் கொடை வினாவாகும். கொடுத்தற் பொருட்டு வினாவுவதால் கொடை வினாவாயிற்று.

ஏவல் வினா

தொகு

ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற்பொருட்டு வினாவப்படும் வினா ஏவல் வினாவாகும். ஆசிரியர் மாணவனிடம் “இப்பாடலை மனப்பாடம் செய்து விட்டாயா?” என்று வினாவுதல் ஏவல் வினா ஆகும்.

மாணவன் மனப்பாடம் செய்யவில்லை என்று கூறினால் அவனை மனப்பாடம் செய்யும்படி ஏவவும், மனப்பாடம் செய்துவிட்டேன் என்று கூறினால் “பார்க்காமல் எழுதிக்காட்டு” என்று ஏவவும் வினாவினாராதலின் இது ஏவல் வினாவாயிற்று.

நன்னூல் பாடல்

தொகு

வினா குறித்து நன்னூல் பாடல் 385 குறிப்பிடுகிறது. அது.

“ அறிவறி யாமை ஐயுறல்கொளல் கொடை
ஏவல் தரும்வினா லவ்லிஆறும் இழுக்கார்”

ஆதாரம்

தொகு
  • தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்ட பத்தாம் வகுப்பிற்கான “பைந்தமிழும் பழகுதமிழும்” தமிழ் இலக்கணம் - மொழிப்பயிற்சிகள் (துணைப்பாடநூல்)(முதற்பதிப்பு: 2004, மறுபதிப்பு: 2008)

மேற்கோள்கள்

தொகு
  1. Huddleston, Rodney, and Geoffrey K. Pullum. (2002) The Cambridge Grammar of the English Language. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-43146-8.
  2. Searle, J (1969). Speech acts. Cambridge: Cambridge University Press.
  3. Searle, J (1969). Speech acts. Cambridge: Cambridge University Press. p. 69.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேள்வி&oldid=3894119" இலிருந்து மீள்விக்கப்பட்டது