கைத்தீராவுக்குக் கப்பலேறுதல் (ஓவியம்)

கைத்தீராவுக்குக் கப்பலேறுதல் (The Embarkation for Cythera) என்பது பிரான்சு நாட்டைச் சேர்ந்தவரும், ரோக்கோக்கோ கலைப்பாணி ஓவியருமான அத்வான் வாட்டூ (Antoine Watteau) என்பவர் வரைந்த ஒரு ஓவியம் ஆகும். வாட்டூ இந்த ஓவியத்தை 1717 ஆம் ஆண்டு ஓவியத்துக்கும் சிற்பத்துக்குமான அரச கல்விக் கழகத்துக்கு அளித்தார். இது தற்போது பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் உள்ளது. இவ்வோவியத்தைப் போலவே இன்னொரு ஓவியத்தையும் வாட்டூ 1718 ஆம் ஆண்டுக்கும் 1721 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வரைந்தார். "கைத்தீராவுக்கான யாத்திரை" என்று பெயரிடப்பட்ட இவ்விரண்டாவது ஓவியம் பெர்லினில் உள்ள சார்லெட்டன்பர்க் மாளிகையில் உள்ளது.

கைத்தீராவுக்குக் கப்பலேறுதல் (லூவரில் உள்ளது): பல விமர்சகர்கள் இவ்வோவியம் வீனசின் பிறப்பிடமாகக் கருதப்படும் கைத்தீராத் தீவில் இருந்து புறப்படுவதைக் காட்டுவதாகக் கருதுகின்றனர்.

கருப்பொருள்

தொகு

பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னன் காலத்து உயர்குடியினருடைய காதல் களியாட்டங்களை அல்லது ஒரு விழாவினை இவ்வோவியம் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இவ்வாறான களியாட்டங்களில் இன்பம் பெறுவதற்காக அக்கால உயர் குடியினர் புல்வெளிகளிப் பின்னணியாகக் கொண்ட பகுதிகளுக்குச் செல்வது வழக்கம். படத்தில் காணப்படும் காதலர்களைச் சுற்றிப் பறந்துகொண்டு அவர்களை நெருக்கமான நிலைக்குக் கொண்டுவரும் காதல் தேவதைகளும், வீனசின் சிலையும் விழாவின் பாலுணர்வு சார்ந்த தன்மைக்குக் குறியீடாக அமைகின்றன.