கையாடல் (Embezzlement) என்பது பொறுப்பாகக் கொடுக்கப்பட்ட பணத்தை அல்லது வேறு வகையான சொத்துக்களை, ஒருவரோ அல்லது பலரோ நேர்மையற்ற முறையில் தமதாக்கிக் கொள்வதைக் குறிக்கும்.[1] கையாடல் என்பது ஒருவகையான நிதிசார் ஊழல். சட்டத்தரிணி ஒருவர் தனது வாடிக்கையாளரின் நம்பிக்கைப் பொறுப்புக் கணக்கில் இருந்து நிதியை எடுத்துக்கொள்ளல், ஒரு நிதி ஆலோசகர் தனது வாடிக்கையாளரின் முதலீட்டில் இருந்து பணத்தைத் தனதாக்குதல், கணவனுக்கும் மனைவிக்கும் பொதுவான கூட்டு வங்கிக் கணக்கில் இருந்து கணவனோ மனைவியோ மற்றவருக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்வது போன்றவை கையாடலுக்கு எடுத்துக்காட்டுகள்.

கையாடல் என்பது திட்டமிட்டு ஒழுங்கமைந்த முறையில் புரியப்படும் குற்றச்செயல் ஆகும். கையாடல் பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாமல் செய்யப்படுவதால், கையாடல் செய்பவர் தன்னுடைய செயல்களை மறைப்பதில் கவனம் எடுத்துக்கொள்வார். பொதுவாக, கையாடல் செய்பவர், இச்செயல் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்காகத் தனது கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பணம் அல்லது சொத்தின் ஒரு சிறு பகுதியையே கையாடல் செய்வார். இது வெற்றியானால், கையாடல் கண்டுபிடிக்கப்படாமலே பல ஆண்டுகளுக்குத் தொடரக்கூடும். பாதிக்கப்படுபவருக்குப் பெரிய அளவில் நிதி தேவைப்படும்போதோ, அல்லது அது வேறு தேவைகளுக்கு எடுக்கப்படும்போதோ, நிறுவனங்களானால் பெரிய மாற்றங்கள் இடம்பெறும்போது எல்லாச் சொத்துக்களினதும் சுதந்திரமான கணக்காய்வு தேவைப்படும்போதோதான் பணமோ, வேறு சொத்தோ குறைவது கண்டுபிடிக்கப்படும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கையாடல்&oldid=3679657" இலிருந்து மீள்விக்கப்பட்டது