கொலிமா ஆறு
கொலிமா ஆறு (Kolyma River) (உருசியம்: Колыма́, பஒஅ: [kəlɨˈma]) சைபீரியாவின் வடகிழக்குப் பகுதியில் ஓடும் ஒரு ஆறு ஆகும். இதன் வடிநிலப்பகுதியானது சகா குடியரசு, சுகோத்கா தன்னாட்சி வட்டாரம், மற்றும் ருசியாவின் மகதான் மாகாணம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும். குலு ஆறு சங்கமிக்கும் இடத்தில் இது தொடங்குகிறது. இந்த ஆறு 69°30′N 161°30′E / 69.500°N 161.500°E என்ற இடத்தில் ஆர்க்டிக் பெருங்கடலின் பகுதியாக விளங்கும் கிழக்கு சைபீரியக் கடலின் கொல்ய்மா வளைகுடாவில் கடலுடன் கலக்கிறது. கொல்ய்மா ஆறானது 2,129 கிலோமீட்டர்கள் (1,323 mi) நீளமுடையது. இதன் வடிநிலத்தின் பரப்பானது 644,000 சதுர கிலோமீட்டர்கள் (249,000 sq mi) ஆகும்.
கொலிமா ஆறு | |
---|---|
டெபின் கொலிமா ஆற்றின் மீது காணப்படும் காலைப்பனியின் ஊடாக, 8 செப்டம்பர் 2004 | |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | கிழக்கு சைபீரிய கடல் |
நீளம் | 2,129 km (1,323 mi) |
வடிநில அளவு | 644,000 km2 (249,000 sq mi) |
வெளியேற்றம் | |
⁃ சராசரி | 3,800 m3/s (130,000 cu ft/s) (near mouth) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | போபோவ்கா ஆறு, யாசச்னாயா ஆறு, சைர்யங்கா ஆறு, ஓசோகினா ஆறு, செடேடெமா ஆறு |
⁃ வலது | புயுன்டா ஆறு, பாலிக்யசான் ஆறு, Sugoy, Korkodon, Beryozovka, Anyuy, Omolon |
கொலிமா ஆறானது ஒவ்வொரு ஆண்டும் 250 நாட்கள் வரை பல மீட்டர்கள் ஆழப்பகுதி வரை உறைந்து காணப்படுகிறது. சூன் மாதத் தொடக்கம் முதல் அக்டோபர் மாதம் வரை மட்டுமே பனிக்கட்டியாக உள்ள நிலையிலிருந்து மாறி ஓடும் நீராக காணப்படுகிறது. சகா குடியரசின் கொல்ய்ம்சுகோயே பகுதியில் இந்த ஆற்றால் வெளியேற்றப்படும் சராசரி நீரின் அளவானது 3254 கனமீ/விநாடி ஆகவும் மிக அதிகபட்சமாக 1985 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட 26201 கனமீ/விநாடி அளவும், குறைந்தபட்சமாக ஏப்ரல் 1979 இல் பதிவு செய்யப்பட்ட 30.6 கனமீ/விநாடி அளவும் இருக்கிறது. [1]
வரலாறு
தொகு1640 ஆம் ஆண்டில் டிமிட்ரி சிர்யான் (யாரிலோ அல்லது எரிலோ என்றும் அழைக்கப்படுகிறார்) இண்டிகிர்கா ஆற்றுக்கு தரைவழிப் பயணமாக சென்றார். 1641 ஆம் ஆண்டில், அவர் இண்டிகிர்கா ஆற்றில் நீர் வழிப் பயணமாக ஆலசேயா ஆறு வரை சென்றார். இங்கே அவர் கொல்யாமா ஆற்றினைப் பற்றி கேள்விப்பட்டு முதன்முறையாக சுக்சி தீபகற்பத்தில் வாழ்ந்து வந்த சுக்சி இன பூர்வீகக் குடிமக்களை சந்தித்தார். 1643 இல், அவர் இண்டிகிர்காவிற்குத் திரும்பினார். தனது மரியாதையை யாகுட்ஸ்க்கிற்கு அனுப்பி விட்டு ஆலசேயா சென்றார். 1645 ஆம் ஆண்டில் அவர் லீனா நதிக்கு திரும்பினார். அங்கு அவர் ஒரு பிரிவினரைச் சந்தித்தார். அவர் கொலிமாவின் பிரிகாசிக் என அழைக்கப்படும் நில நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள செய்தியைத் தெரிந்து கொண்டார். அவர் கிழக்குப் பகுதிக்கு திரும்பிய பின் 1646 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இறந்தார். 1641-1642 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் மிக்காலி இசுடாடுகின் மற்றும் செம்யான் டெஸ்னியாவ் ஆகியோர் தரைவழியாக மேல் இண்ட்ரிகாவிற்குச் சென்றனர். அவர்கள் அந்தக் குளிர்காலத்தை அங்கேயே கழித்தனர். படகுகள் கட்டினர். மேலும், இண்ட்ரிகாவில் நீர்வழிப் பயணம் மேற்கொண்டனர். ஆலசேயாவின் கிழக்குப் பகுதிக்குச் சென்று சிர்யானை சந்தித்தார்கள். சிர்யான் மற்றும் டெஸ்னியாவ் ஆகிய இருவரும் ஆலசேயாவில் தங்கினர். அதே நேரத்தில் இசுடாடுகின் கிழக்குப் பகுதிக்குச் சென்றார். 1644 ஆம் ஆண்டின் கோடையில் கொலிமா ஆற்றினை அடைந்தார். அவர்கள் சிமோவ்யே (குளிர்கால தங்கும் அறை) ஒன்றை அனேகமாக சிரெட்னெகோலிம்ஸ்க் என்ற இடத்தில் கட்டினர். யாகுட்ஸ்கிற்கு 1645 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வந்தடைந்தனர். [2] 1892-94 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பேரான் எடுவார்ட் வான் டோல் மிகத்தொலைவில் காணப்படும் கிழக்கத்திய சைபீரிய ஆறுகளில் கொலிமா ஆற்றின் வடிநிலப்பகுதிகளில் ருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் சார்பாக நிலவியல் ஆய்வுகளை மேற்கொண்டார். ஓராண்டு மற்றும் இரண்டு நாட்கள் மேற்கொண்ட குறிக்கோள் சார்ந்த பயணத்தில் அவர் 2600 மைல்கள் அல்லது 4200 கிலோ மீட்டர்கள் ஆற்றுப்பகுதியைக் கடந்து புவி அளக்கையை மேற்கொண்டார். கொலிமா அதன் தங்கச் சுரங்கத் தொழிலுக்கும், கூலித்தொழிலாளர்கள் மற்றும் குலக் முறைக்குமாக அறியப்பட்ட ஒன்றாகும். மேற்கூறிய இரண்டுமே, சோசப் ஸ்டாலின் காலகட்டத்திலிருந்து சோவியத் ஆவணக்கிடங்குகள் திறக்கப்பட்ட காலம் வரை தீவிரமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆறானது வார்லாம் சாலாமோவ் என்பவரால் எழுதப்பட்ட குலக் முகாம்களில் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை முறை தொடர்பான கொலிமா கதைகள் என்ற நுால் வரிசைக்கு தனது பெயரை அளித்துள்ளது.
கூலித்தொழிலாளர்களின் முகாம்கள் மூடப்பட்ட பின்னர் மாநில அரசலால் வழங்கப்பட்ட மானியங்கள், உள்ளூர் தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொடர்பு போன்றவை கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லாத அளவிற்கு சுருங்கிப்போனது. ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர். அந்தப் பகுதியிலேயே வாழ்வதற்காகத் தங்கிய மக்கள் மீன்பிடித் தொழிலையும், வேட்டையாடுதலையும் தங்கள் வாழ்வாதரமாகக் கொண்டனர். சிறிய மீன்பிடி குடியிருப்புகளில், சில நேரங்களில் குடையப்பட்ட குகைகளில் காணப்பட்ட நிலத்தடி உறைபனியைப் பயன்படுத்தி சேமித்து வைக்கப்பட்டது.[3]
குடியேற்றப் பகுதிகள்
தொகுகொலிமா ஆற்றின் கரையோரமாக அமைந்துள்ள குடியேற்றப் பகுதிகள் பின்வருமாறு(நீரோடும் திசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன): சினெகோரை, டெபின், உஸ்த்-சிரெட்னெகான், செய்ம்சான் (நகர்ப்புறம்) சிரையங்கா (சகா குடியரசு), சிரெடனெகோலிம்ஸ்க் மற்றும் செர்ஸ்கி ஆகியவை ஆகும்.
ஆற்றின் மீதான கட்டுமானங்கள்
தொகுசினெகோரை என்ற இடத்தில் ஒரு நீர்மின்சக்தி திட்டம் (கொலிமா நீர்மின்சக்தி திட்டம்) அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றின் தோற்றுவாய் பகுதியில் இது அமைந்துள்ளது. இந்தத் திட்டம் 1980 ஆம் ஆண்டு கொலிமா கெஸ்ட்ராயால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் மற்றும் சினெகோரியா நகரம் ஆகிய இரண்டுமே ஓலேக் கோகாடோவ்ஸ்கி என்ற தலைமைப் பொறியாளரின் கண்காணிப்பில் எழுப்பப்பட்டவையாகும். இந்த நகரமானது, ஒலிம்பிக் தரத்திலான ஒரு நீச்சல் குளம் நிலத்தடியிலான துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்களம் மற்றும் சிறிய ருசிய நகரங்களில் இல்லாத பல வசதிகளைக் கொண்டதாக இருந்தது. நல்ல திறமையுள்ள பணியாளர்களை இத்தகைய வெகுதுார அமைவிடங்களுக்கு கவரும் விதத்தில் இந்த நகரமானது சிறப்புத்தன்மையுடன் அமைக்கப்பட்டதாக பொறியாளர் கோகடாவ்ஸ்கி தெரிவித்துள்ளார். இங்கமைக்கப்பட்ட நீர்மின்சக்தி திட்டமானது மகதன் மற்றும் இப்பகுதியில் உள்ள பல குடியிருப்பு அமைவிடங்களுக்கான மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதாக அமைந்தது. இந்த அணைக்கட்டானது 150 அடி உயரமுள்ள நிலவியல் அணைக்கட்டாகும்.
தீவுகள்
தொகுகடைசி 75 கிலோ மீட்டர் தொலைலவில் கொலிமா ஆறு இரு கிளைகளாக பிரிகிறது. கொலிமான கிழக்கு சைபீரியக் கடலை அடையும் முகத்துவாரப்பகுதியியல் பல தீவுகளை இது உருவாக்கி விடுகிறது. அவற்றில் முக்கியமானவை:
- மிக்கால்கினோ 69°24′58″N 161°15′18″E / 69.416°N 161.255°E இத்தகைய தீவுகளுள் மிகப்பெரியது ஆகும். கொலிமாவின் கிழக்குப் பகுதி கிளை ஆற்றின் மேற்கில் இது அமைகிறது. இந்த தீவு தனது வடக்கு முனையில் மேலும் சிறு தீவுகளாக பிளவுற்றுக் காணப்படுகிறது. இத்தீவு 24 கி.மீ நீளமும் 6 கி.மீ அகலமும் கொண்டு காணப்படுகிறது. இத்தீவு கிளாவ்செவ்மார்புட் தீவு எனவும் அழைக்கப்படுகிறது.
- சுகார்னை என்றழைக்கப்படும் தீவு மிக்கால்கினோவின் வடகிழக்கு எல்லையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இது 11 கி.மீ நீளமும், 5 கி.மீ அகலமும் உடையதாகும். வடகிழக்கு சுகார்னையானது சிறிய தீவுகளின் தொகுப்பாக அமைகிறது. இப்பகுதி மார்ஸ்கியே சோட்கி தீவுகள் எனவும் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kolyma At Kolymskoye". R-ARCTICNET. பார்க்கப்பட்ட நாள் 2017-08-11.
- ↑ Lantzeff, George V., and Richard A. Pierce (1973). Eastward to Empire: Exploration and Conquest on the Russian Open Frontier, to 1750. Montreal: McGill-Queen's U.P.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Personal observation in 1991, journals kept by Wallace Kaufman