கோட்டுக் குவியக் கோட்பாடு

(கோட்டுக் குவியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோட்டுக் குவியக் கோட்பாடு (line focus principle) எக்சு-கதிர் குழாயில் குவியப் புள்ளியின் (focal spot) செயலுறு பரப்பளவைக் (effective area) குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது.

குவியப் புள்ளியின் அளவைக் குறைப்பதால் (மோதும் இலத்திரன்களின் எண்ணிக்கை, மற்றும் ஆற்றல் மாறாமல் இருக்கையில்), அந்த அனோடில் சேகரிக்கப்படும் வெப்பம் அதிகரிக்கின்றது. இதனைச் சரி செய்வதற்காக எக்சு கதிர்க் குழாயின் நேர் மின்முனை (அனோடு), கதோடில் இருந்து சிறிது சரிவாக வைக்கப்படுகிறது. இதனால் எக்சு கதிர்க் குழாயில் குவியம், புள்ளி அளவில் இல்லாமல் கோடு போன்று காணப்படும். இக்குவியத்திலேயே இலத்திரன்கள் மோதி எக்சு கதிர்களைத் தோற்றுவிக்கின்றன. குவியப்புள்ளி இவ்வாறு கோடு போல் இருப்பதால் அதிக பரப்பில் இலத்திரன் சுமையினை அதனால் ஏற்க முடியும்.

விளக்கம்

தொகு
 
கோட்டுக் குவியக் கோட்பாட்டை விளக்கும் படிமம்.

நேர்முனையான அனோடின் மேற்பரப்பு இலத்திரன் கற்றை ஒன்றினால் மோதவிடப்படுகிறது. அனோடின் சரிவுக் கோணத்தின் சைன் பெறுமானத்தைப் பொறுத்து ab என்பது cd என்றவாறாகக் குறைக்கப்படுகிறது. அனோடைச் சரிவாக வைப்பதன் மூலம் இலத்திரன் கற்றையின் குவியப் புள்ளி குறைக்கப்படுகிறது, எனவே சிறிய எக்சு-கதிர் மூலம் பெறப்படுகிறது. இது குவியப் புள்ளியின் செயலுறு அளவு எனக் கூறப்படும்.

செங்குத்துக் கோட்டிற்கும் நேர்முனையின் சாய்ந்த பரப்பிற்கும் இடைப்பட்டக் கோணம் நேர்முனைக் கோணம் அல்லது அனோடுக் கோணம் (Anode angle) எனப்படுகிறது. நவீன ரக எக்சுக் கதிர்க் குழாய்களில் அனோடுக் கோணங்கள் பொதுவாக 6-15o ஆக இருக்கும். மிகத் துல்லிய எக்சு-கதிர் படிமங்களின் தேவைக்காக இரத்தக்குழாய் வரைவியில் (angiography) சிறிய அனோடுக் கோணங்கள் கொண்ட குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக, அனோடின் சரிவுக்கோணம் சிறிதாக இருக்கும் போது, குவியப் புள்ளியின் செயலுறு பரப்பளவும் சிறிதாக இருக்கும். (சரிவுக் கோணம் 45 பாகையை விடக் குறைவாக இருந்தால் உண்மையான குவியப் புள்ளியை விட செயலுறு குவியப்புள்ளி சிறிதாக இருக்கும்). இதனைச் சரிசெய்வதற்கு இலத்திரன் மூலத்திற்கும் பிம்பத்திற்கும் இடைப்பட்ட தூரம் (source-to-image distance, SID) அதிகரிக்கப்பட வேண்டியிருக்கும்.

குதிகால் விளைவு

தொகு
 
குதிகால் விளைவை விளக்கும் படம்.

பொதுவாக எக்சு-கதிர்க் கற்றையின் செறிவு அதன் முழுமையான பாதையிலும் ஒரே அளவாக இராது. எக்சு-கதிர்வீச்சு கூம்பு வடிவில் வெளியேறுவதால், எக்சு கதிர் குழாயிலிருந்து, கருவியினை இயக்கும் போது வெளிப்படும் கதிர்களின் செறிவு நேர்முனைப் பக்கம் (anode side) சற்றுக் குறைந்தும், எதிர்முனைப் பக்கம் (Cathode side) சற்று அதிகமாகவும் காணப்படும். இதற்குக் காரணம் நேர்முனையில் கதிர்கள் சிறிது ஏற்கப்படுவதேயாகும். இவ்விளைவு குதிகால் விளைவு (heel effect) எனப்படுகிறது. இதனைச் சரி செய்வதற்கும் இலத்திரன் மூலத்திற்கும் பிம்பத்திற்கும் இடைப்பட்ட தூரம் (SID) அதிகரிக்கப்படலாம்.

உசாத்துணை

தொகு