கோப்பாய் சங்கிலியன் கோட்டை

இலங்கைக் கோட்டை

வரலாற்றுப் பழமை வாய்ந்த கோப்பாய் சங்கிலியன் கோட்டை கோப்பாய் சந்தியில் இருந்து வடக்காகக் சில யார் தூரத்தில் வலப்பக்கமாக சற்று உள்நோக்கி அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

கோப்பாயை யாழ்ப்பாண மன்னர்கள் தமது நடவடிக்கைகளின் முக்கிய ஒரு மையமாக தெரிவு செய்ததற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நல்லூர் இராசதானியின் கடற்கரைப் பட்டினமாக யாழ்ப்பாணம் விளங்கினாலும் இதன் பாதுகாப்பிற்காகப் பண்ணைத்துறை, கொழும்புத்துறை, கோப்பாய், செம்மணி போன்ற இடங்களில் அரண்களை அமைத்தனர் எனக் கூறப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் போரத்துக்கேயருக்கும் யாழ்ப்பண மன்னர்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் யாழ்ப்பாண மன்னர்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் யாழ்ப்பாண மன்னர்கள் கோப்பாயில் உள்ள கோட்டையைத் தமது முக்கிய பாதுகாப்பு அரண்களாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக சங்கிலி மன்னன் காலத்தில் போர்த்துக்கேயர் மீண்டும் படையெடுக்கலாம் என அஞ்சித் தமது படையின் ஒரு பிரிவை நல்லூரிலும் இன்னொரு பிரிவை கோப்பாயிலும் வைத்திருந்ததாகத் தெரிகிறது.

யாழ்ப்பாண அரசு காலத்தில் அதிலும் குறிப்பாக சங்கிலி மன்னன் ஆட்சியில் இது ஒரு முக்கிய பாதுகாப்பு அரணாகவும் அரச மையமாகவும் திகழ்ந்ததெனக் கூறலாம். 1505 இல் இலங்கைக்கு வந்த போர்த்துக்கீசர் தென்னிலங்கையில் கரைநாடுகளை வசப்படுத்தி ஆண்ட போதும் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற எடுத்த படையெழுச்சிகள் பல தோற்க்கடிக்கப்பட்டன. மீண்டும் 1624 இல் புரட்டாதியில் காக்கைவன்னியன் என்பவன் சூழ்ச்சியுடன் பறங்கிப் படை வழமை போல் கொழும்புத்துறையில் இறங்காது பண்ணையில் இறங்கி நல்லூரை நோக்கி நகர்ந்தது. அன்று விஜயதசமி, ஆயுத பூசையில் தமது ஆயுதங்களை வைத்து வழிபாடு செய்து கொண்டிருந்த நேரம். திடீரென நுழைந்த பறங்கிப் படைகளின் குண்டுமாரிக்கு எதிர்கொள்ள தமிழ் வீரர்கள் ஆயத்தமான போது காக்கைவன்னியன் தோன்றிச் செய்த சூழ்ச்சியினால் சங்கிலியனை அகப்படுத்திச் சிறையிலிட்டனர். சங்கிலியன் சிறைக்கூடத்திலிருந்து சுரங்கப்பாதை வழியாக வெளியேறி தப்பி கோப்பாய்க் கோட்டைக்குப் பின்வாங்கினான். பறங்கியர் நல்லூர்க் கோட்டையைக் கைப்பற்றிக்கொண்டு கோப்பாய்க் கோட்டையை நோக்கி வந்தனர். சங்கிலியன் கோப்பாயில் தங்கியிருந்து அங்கிருந்து தென்மராட்சி ஊடாக மந்துவிலில் உள்ள இன்னொரு கோட்டைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. யாழ்ப்பாண அரசுகால தென்னிந்திய வணிகம் பருத்தித்துறை , கச்சாய், கோப்பாய் வழியாக நடந்ததாக பிற்கால இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்வாறு பலவழிகளில் கோப்பாய் சிறப்புற்றிருந்ததே அங்கு யாழ்ப்பாண அரசு காலக் கோட்டையொன்று அமைக்கப்படக் காரணமாகும். இதனால் யாழ்ப்பாண அரசு காலத்தில் நல்லூரை அடுத்து மக்கள் அதிகமாக வாழ்ந்த இடமாக கோப்பாய் இருந்திருக்கலாம். இதை இங்கு பரவலாகக் கிடைத்த யாழ்ப்பாண அரசுகால நாணயங்களும் உறுதிப்படுத்துகின்றன.

அமைப்பு

தொகு

கோப்பாயை மையமாகத் தெரிவு செய்தமைக்கும் முக்கிய பாதுகாப்பு மையமாகத் தெரிவு செய்தமைக்கும் அதன் அமைவிடம் ஒரு முக்கிய காரணமாகும். தற்போது கோட்டையின் அழிபாடுகள் காணப்படும் இடம் பெரு நிலப்பரப்பிலிருந்து தென்மராட்சி ஊடாக யாழ்ப்பாண அரசின் மீது மேற்கொள்ளப்படும் படையெடுப்புக்களைத் தடுப்பதற்கு முக்கிய மையமாகக் காணப்படுகிறது. இதற்கு கோப்பாய்க்கும் தென்மராட்சிக்கும் இடைப்பட்ட சிறு கடல் பெருந்துணையாக இருந்தது. ( இராசநாயகம் 1926) 12ஆம் நூற்றாண்டில் பொலநறுவையில் ஆட்சி செய்த முதலாம் பராக்கிரமபாகு கோப்பாய்க்கு எதிரேயுள்ள மட்டுவழல் என்னும் இடத்தில் தன்படைகளை நிறுத்தி வைத்திருந்தான். இதே காலப்பகுதிக்குரிய சோழர் கல்வெட்டுக்கள் கோப்பாய்க்கு நேரெதிரே அமைந்த மட்டுவில் என்னும் இடத்தைப்பற்றி அங்கிருந்த படைவீரர்களையும் யானைகளையும் சிறைப்பிடித்ததாக கூறுகின்றன.

அழிவு

தொகு

பறங்கியர் கோப்பாய்க் கோட்டையை முற்றாக இடித்துத் தரைமட்டம் ஆக்கினார்கள். குறித்த தரைமட்டமாக்கப்பட்ட கோட்டையின் நுழைவாயிலில் பழைய கோட்டை (OLD CASTLE ) என்று எழுதப்பட்டிருந்த கட்டிடம் சில காலத்தின் முன்னரே இடித்தழிக்கப்பட்டது.

தற்போதைய நிலையும் இடுபாடுகளின் எச்சங்களும்

தொகு

தற்போது பல வீடுகள் கட்டப்பட்ட போதிலும் சில இடங்களில் நிலத்தினை அகழும்போது செங்கற்க் குவியல்கள் வெளிப்படுகின்றன. எஞ்சியிருந்த கட்டிடப் பகுதிகள் கூட இடிக்கப்பட்டு வேறு தேவைகளிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ் அரணின் சுற்றாடலில் கிணறு வெட்டிய போதும் வீடு கட்ட அத்திவாரம் வெட்டிய போதும் பழமையான கலைச்சின்னங்கள் வெளிவந்ததாக அறிய முடிகின்றது.குறித்த கோட்டை வளவில் செங்கற்க்களாலான உறுதியான சுவர்களையுடைய விசாலமான பழமையான வீடு ஒன்று இன்றுமுண்டு. குறித்த கோட்டையிருந்த இடத்திலுள்ள குடியிருப்பாளர்கள் உறுதிகளிலும் கோட்டை வாய்க்காலும் பழைய கோட்டை என்றே எழுதப்பட்டிருப்பதுவும், நல்லூர்க் கோட்டைக்கு யமுனா ஏரி போல கோப்பாய்க் கோட்டைக்குக் குதியடிக்குளம் நீச்சல் தடாகமாக அமைந்திருந்ததும். குறித்த கோட்டை வளவிற்கு தெற்கு எல்லையில் செல்லும் கோட்டை வாய்க்காலும் கோப்பாய் கோட்டையை நினைவுபடுத்தும் சின்னங்களாக இன்றும் உள்ளன. குறித்த குதியடிக்குளம் 1955 ஆம் ஆண்டளவில் கி.மு.ச. கோரிக்கையின் படி அரச செலவில் ஆழமாக்கப்பட்டு, குறித்த குளத்தைச் சுற்றியுள்ள அறைசாந்தால் கட்டப்பட்ட அகலமான சுவர்கள் இடிக்கப்பட்ட போது தென்மேற்கு மூலையில் 6 x 2 அடி வரையுள்ள ஓர் குழி காணப்பட்டது. அதற்குள் சாம்பல் போன்ற உக்கிய அசேதனப் பொருள்கள் காணப்பட்டன. பண்ண்டைய வழக்கப்படி தடாகம் பூரணமாக்கப்பட்ட வேலை கொடுக்கப்பட்ட நரபலியின் சேதனப் பொருட்க்களாயிருக்கலாம் என்ற அபிப்பிராயம் பல அனுபவத்தர்களினாலும் கூறப் பெற்றது.

அண்மையில் இவ் இடத்தில் தொல்லியல் ஆய்வை மேற்கொண்ட கலாநிதி ரகுபதி இங்கு பரவலாகக் கிடைத்த மட்பாண்டங்களை ஆய்வு செய்து அவற்றின் காலம் யாழ்ப்பாணம் அரசு தோன்றுவதற்கு முற்பட்டதாக இருக்கலாம் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். (ரகுபதி 1987) இக் காலக்கணிப்பு யாழ்ப்பாண அரசு தோன்ற முன்னரே இவ் இடத்தில் செறிவான மக்கள் குடியிருப்புக்கள் இருந்ததைக் காட்டுகிறது.

  1. ஞானப்பிரகாசர் 1928