கோமாரி நோய்

(கோமாரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோமாரி நோய் (Foot-and-mouth disease) ஒரு தொற்று நோயாகும். பிகொர்ணா எனும் நச்சுயிரியால் இந்த நோய் ஏற்படுகின்றது. இந்த நோயை கரணை நோய், குளம்பு வாய் நோய் என்றும் கூறுகிறார்கள். இந்த நோய் பிளவு பட்ட குளம்பு உள்ள அனைத்து விலங்குகளையும் தாக்குகின்றது. ஆடுகளை விட, மாடுகள் மற்றும் பன்றிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அசை போடும் வன விலங்குகளும் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. ஒட்டகம், குதிரை, ஆய்வுக்கூட விலங்குகள் மற்றும் மனிதர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.

நோய் ஏற்படும் வழிமுறைகள்

தொகு
  1. நச்சுயிரி பாதித்தவற்றை உட்கொள்ளுதல்.
  2. உமிழ்நீர், சிறுநீர், மலம், பால் ஆகியவற்றில் நச்சுயிரி காணப்படும். இவற்றின் மூலமாகவும் நச்சுயிரி பரவும்.
  3. கொப்புளங்கள் தோன்றுவதற்கு முன்னரே இந்த நச்சுயிரி உமிழ்நீர், சுரப்புநீர் மற்றும் உடற் கழிவு நீரில் காணப்படுகின்றது .
  4. சளிச்சவ்வு பாதிக்கப்படிருந்தால், இது காற்றின் மூலமாக பரவும் வாய்ப்புள்ளது.

நோயரும்பு காலம்

தொகு

மாடுகளில் சில மணிகளிலிருந்து சில நாட்கள் வரையும், செம்மறியாடுகளில் மூன்றிலிருந்து எட்டு வாரங்கள் வரையும் பன்றிகளில் ஒரு வாரமும் நோயரும்பு காலம் காணப்படும்.

நோய் கடத்திகள்

தொகு

குணமடைந்த செம்மறியாடுகள் நச்சுயிரியினை 5 மாதங்கள் வரையும், குணமடைந்த மாடுகள் நச்சுயிரியினை 6 மாதங்கள் வரையும் தாங்கி கடத்தும்.

நோய் அறிகுறிகள்

தொகு
 
கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட பன்றியின் குளம்பு
  1. பாதிக்கப்பட்ட மாடுகளில் காய்ச்சல், தீவனம் உண்ணாமை, பால் உற்பத்தி குறைந்து காணப்படும்.
  2. வாயில் கொப்புளங்கள் உருவானவுடன் காய்ச்சல் குறையும்.
  3. வாயை அசைக்கும் போது கொப்புளங்கள் உடைந்து புண் ஏற்படும்.
  4. எச்சில் சுரப்பு அதிகமாக இருக்கும்.
  5. கொப்புளங்கள் குளம்புகளிலும் காணப்படும், இதனால் கால்நடைகள் நடக்க சிரமப்படும்.
  6. பராமரிக்கப்படாத புண்களில் ஈப்புழுக்களால் ஈப்புழு நோய் பாதிப்பு ஏற்படும்
  7. மடிக்காம்பில் கொப்புளங்கள் ஏற்பட்டால் அவை பால்மடிக்குப் பரவி மடி வீக்க நோய் ஏற்படும்.
  8. கால்நடைகளில் கருச்சிதைவு ஏற்படும்.
  9. நாளமில்லா சுரப்பிகளும் பாதிக்கப்படுவதால் தோல் காய்ந்து, ரோமங்கள் நீளமாகக் காணப்படும் (கரடி முடி போல).
  10. பாதிக்கப்பட்ட மாடுகளில் (எருது மற்றும் உழவு) இழுக்கும் திறன் குறைந்து மூச்சிறைப்பு காணப்படும்.
  11. கோமாரி நோய் பாதிப்பு கலப்பின மற்றும் அயல் நாட்டின மாடுகளில் அதிக அளவில் காணப்படும்.

நோயால் ஏற்படும் விளைவுகள்

தொகு
  • மடி வீக்கம் .
  • இரத்தசோகை.
  • நீரிழிவு நோய்.
  • உரோமங்களின் அதிக வளர்ச்சி.
  • மூச்சிறைப்பு.
  • எடை மற்றும் வளர்ச்சி குறைதல்.
  • வேலை செய்யும் திறன் குறைதல்.
  • இனப்பெருக்க பக்க குறைபாடுகள் ( கருச்சிதைவு).
  • இனப்பெருக்கத்திறன் குறைதல்.
  • பால் உற்பத்தி குறைதல்.
  • கன்றுகளில் இறப்பு.
  • இறைச்சி உற்பத்தி குறைதல்.

நோய் கண்டறியும் முறைகள்

தொகு
  1. பாதிக்கப்பட்ட மாடுகளில் நோய் அறிகுறிகளை வைத்தும் ( வாய், குளம்பு, மற்றும் மடியில் கொப்புளம் மற்றும் அதிக அளவில் உமிழ் நீர் சுரப்பு).
  2. கொப்புள நீரை பரிசோதனை செய்து நச்சுயிரியின் வகையைக் கண்டறியலாம்.
  3. திசுக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நச்சுயிரியை செயற்கை திசுக்களில் வளர்த்தோ அல்லது எலிகளில் கொப்புள திரவத்தை செலுத்தி ஒரு வார இடைவெளியில் கொப்புளங்கள் ஏற்படுகின்றதா எனவும் கண்டறியலாம்.

சிகிச்சை முறைகள்

தொகு
  1. கோமாரி நோய் பாதித்த கால்நடைகளை தனியாக பிரித்து பராமரிக்க வேண்டும்.
  2. பாதிக்கப்பட்ட இடங்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த தண்ணீரால் கழுவி விட வேண்டும்.
  3. பாதிக்கப்பட்ட வாய் மற்றும் நாக்கில் கிளிசரின் தடவி விட வேண்டும்.
  4. பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு நோய் எதிருயிரி மருந்து கொடுக்க வேண்டும்.
  5. கோமாரி நோயால் ஏற்பட்ட புண்களில் வேப்ப எண்ணெய் தடவுவதன் மூலம் ஈக்களைத் தவிர்க்கலாம்.
  6. பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு அரிசிக் கஞ்சி அல்லது கம்புக் கஞ்சி கொடுக்கலாம்.
  7. மருத்துவர் ராஜமாணிக்கம், பாரம்பரிய மூலிகை உருண்டை [1]

தடுப்பு முறைகள்

தொகு

நோய் வராமல் தடுக்க நோய் வருவதற்கு முன்பே கோமாரி நோய் தடுப்பூசியை ஆண்டுக்கு இரு முறை போட வேண்டும்.[2] பண்ணையிலிருக்கும் மாடுகளுக்கு கோமாரி நோய்க்கான முதல் தடுப்பூசியினை மூன்றாம் மாத வயதிலும், இரண்டாம் தடுப்பூசியினை முதல் தடுப்பூசி கொடுத்து 30 நாள் கழித்தும் கொடுக்கவேண்டும். பிறகு ஆறு மாதத்திற்கு ஒரு முறை அதாவது ஏப்ரல்- மே மாதம் தடுப்பூசியினை தொடர்ந்து அளிக்கவேண்டும்.[3] ஒரு பகுதியிலிருக்கும் அல்லது ஒரு கிராமத்திலிருக்கும் அனைத்து மாடுகளுக்கும் ஒரே சமயத்தில் தடுப்பூசி கொடுக்கவேண்டும்.

கலைச் சொல் களஞ்சியம்

தொகு
  • Cloven foot - பிளவு பட்ட குளம்பு
  • Endocrine glands - நாளமில்லா சுரப்பிகள்
  • Epithelial cells - மேலணி அணுக்கள்
  • Foot and Mouth Disease - கோமாரி நோய் / கால்நோய் வாய்நோய்
  • Mammary gland - மடி
  • Incubation period - நோயரும்பு காலம்
  • Lymph node - நிணநீர்கலம்
  • Teat - மடிக்காம்பு
  • Virus - நச்சுயிரி

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-26. பார்க்கப்பட்ட நாள் 2013-11-27.
  2. http://www.dinamalar.com/news_detail.asp?id=1467126
  3. http://agritech.tnau.ac.in/ta/expert_system/cattlebuffalo/Foot%20and%20Mouth%20Disease.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமாரி_நோய்&oldid=3726887" இலிருந்து மீள்விக்கப்பட்டது