கோயில் வீடு

கோயில் வீடு என்பது நாட்டார் தெய்வங்களை தங்களின் குடியிருப்புகளுக்கு மத்தியில் வீடொன்றைக் கட்டி வைத்திருப்பதாகும். [1] பெரும்பாலும் குல தெய்வங்களுக்கே கோயில் வீடுகள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு கோயில் வீடுகள் அமைக்கப்பட்ட பிறகு அங்கு வழிபடுபவர்களை கோயில் பங்காளிகள் என அழைக்கின்றார்கள். இவ்வாறு கோயில் பங்காளிகளுக்குள் திருமணம் செய்வதை தவிர்க்கின்றனர்.

காரணம்

தொகு

பலருடைய குலதெய்வங்கள் அவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே இருப்பதில்லை. கல்வி, வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக இடம்பெயரும் குடிபாட்டினர், வெகு தொலைவில் இருக்கும் குல தெய்வங்களின் கோயில்களுக்கு செல்வது கடினமான காரியமாக உள்ளது. குடிபாட்டினர் குலதெய்வக் கோயில்களுக்கு தங்களின் திருமண அழைப்பிற்கும், குழந்தையின் காதுகுத்திற்கும், அம்மாவாசை, சிவன்ராத்திரி போன்ற விசேச நாட்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது. அதனால் மிக தொலைவில் இருக்கும் குல தெய்வங்களின் கோயில்களுக்கு செல்லுதலுக்கு மாற்றாக கோயில் வீட்டினை உருவாக்குகின்றார்கள்.

அனுமதி

தொகு

இவ்வாறு கோயில் வீடு கட்டுவதற்கு குடிபாட்டினர் தங்கியிருக்கும் ஊரில் உள்ள கோயில் பங்காளிகளை ஒன்று சேர்க்கின்றனர். அவர்கள் ஒருமித்தக் கருத்துடன் குலதெய்வக் கோயிலில் உடுக்கை அடித்து குறி கேட்டல், சிவப்பு வெள்ளை பூ போட்டல் போன்ற முறைகளில் அனுமதி வாங்குகின்றனர். பின்பு அக்கோயிலிருந்து பிடிமண் எடுத்துவந்து தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே வீடொன்றினை கட்டி அதில் தெய்வத்தினை வைக்கின்றார்கள்.

தெய்வம்

தொகு

தங்களுடைய வசதிக்களுக்கும், முன்பு பின்பற்றிக் கொண்டிருக்கும் வழிமுறைளுக்கும் ஏற்ப தெய்வ சிலைகளையோ, பதிவுகளையோ அமைக்கின்றார்கள். அன்னகாமாட்சியம்மன் போன்ற தெய்வங்களுக்கு பெரும்பாலும் தீபத்தின் ஒளியையே கடவுளாக வணங்குகின்றனர். கோயில் வீடுகளில் கருப்பு, முனி, காத்தவராயன் போன்ற ஆண் தெய்வங்களை வணங்க அருவாள், வேல் போன்றவற்றை வைக்கின்றார்கள்

அமைப்பு

தொகு

கோயில் வீடுகள் என்பவை பெரும்பாலும் இந்து சமய கோயில்களின் அமைப்பில் கட்டப்படுவதில்லை. எந்த ஆகம விதிகளையும், வாஸ்து விதிகளையும் பேணாது வீடுபோலவோ, உள் அறையும், வெளி மண்டபமும் உள்ளதாகவோ கட்டுகின்றனர். வெளிமண்டபத்தின் உறவினர்களுடன் அமரவும், அன்னதானம் போன்றவற்றில் உணவருந்தமும் பயன்படுத்துகின்றார்கள்.

பூசாரி

தொகு

கோயில் வீடுகளில் பிற இனத்தவர்களை பூசை செய்ய அனுமதிப்பதில்லை. கோயில் வீடு கட்டுகின்றவர்கள் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்து பூசாரியாக அறிவிக்கின்றார்கள். அந்த பூசாரிக்குப் பின் அவரது வாரிசுகள் அந்தப் பொறுப்பினை ஏற்கின்றார்கள். இந்தப் பூசாரிகள் எவ்வித சமஸ்கிருத, வேதங்களையும் கற்காமல் தங்களுக்குத் தெரிந்த தமிழ் மொழியிலேயே இறை வழிபாட்டினைச் செய்கின்றார்கள்.

கோயில்வீட்டில் சாமியை வணங்கும் போது மேலாடைப் போடுவதில்லை. துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு பூசை செய்கின்றார்கள். சாமிக்கு விருந்து படைக்கும் போது வாயைச்சுற்றி துண்டால் கட்டிக்கொண்டு படைக்கின்றனர்.

திருவிழாக்கள்

தொகு

அம்மாவாசை, மாத சிவராத்திரி, மகாசிவராத்திரி போன்ற நாட்களில் ஒன்று கூடி விழாவாக செய்கின்றனர். வருடத்திற்கு ஒருமுறை கொடை விழா எடுக்கின்றனர். அத்துடன் பூப்புநீராட்டு விழா, புதுத்தொழில் தொடக்கம், புதுஇல்ல புகுதல் மற்றும் திருமணம் போன்றவற்றுக்கு முதல் பத்திரிக்கையை குலதெய்வத்திற்கு வைக்கின்றார்கள். கொடை விழாவின் போது பல்வேறு விதங்களில் பணிகளை செய்பவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். கரூர் மாவட்டம் மணவாடி எனும் கிராமத்தில் இருக்கும் தொட்டியச்சியம்மன் கோயில் வீட்டில் திருவிழா நடக்கும் போது ஒவ்வொரு முறையும் பங்காளிகள் அனைவரும் ஒன்று சேர்கின்றனர். கரகம் எடுத்தல், வேல் எடுத்தல், குடை பிடித்தல், தொட்டியச்சியம்மன் பெட்டி எடுத்தல், கருப்பசாமி, பெரியசாமி பெட்டி எடுத்தல் என அனைத்தையும் அடுத்தடுத்து அருள் வருகின்ற நபர்களை வைத்து முடிவு எடுக்கின்றனர். சில கோயில்வீடுகளில் சீட்டுக் குலுக்கிப் போட்டும் எடுக்கின்றனர்.

ஆதாரங்கள்

தொகு
  1. கோயில் வீடு அவள் விகடன் 12.03.2010 பக்கம் 94 கோயில்வீடு கூடவே குடியிருக்கும் குலதெய்வம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயில்_வீடு&oldid=2098119" இலிருந்து மீள்விக்கப்பட்டது