கோல்ப் நைட்ரைல் தொகுப்புவினை

கோல்ப் நைட்ரைல் தொகுப்புவினை (Kolbe nitrile synthesis) என்பது ஒர் ஆல்க்கைல் ஆலைடுடன் உலோக சயனைடைச் [1] சேர்த்து வினைபுரியச் செய்து ஆல்க்கைல் நைட்ரைல்கள் தயாரிக்கும் வேதி வினையாகும். ஐசோநைட்ரைல் இவ்வினையில் ஒரு பக்க விளைபொருளாக உருவாகிறது. ஏனெனில் சயனைடு அயனி பல பிணைப்புத்திறன் கொண்ட மின்னணு மிகுபொருளாக செயல்படக்கூடியது ஆகும். கோர்ன்பிளம்மின் விதியின்படி கார்பன் அல்லது நைட்ரசன் உடன் இதனால் வினைபுரிய முடியும். எர்மான் கோல்ப் கண்டறிந்த காரணத்தால் இவ்வினை கோல்ப் நைட்ரைல் தொகுப்புவினை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

கரைப்பான் மற்றும் வினைவழி முறையைப் பொருத்து உருவாகும் மாற்றியன்களின் விகிதம் மாறுபடுகிறது. சோடியம் சயனைடு மற்றும் முனைவுறு கரைப்பான்கள் போன்ற கார சயனைடுகளின் பயன்பாட்டினால் இவ்வினை எசு.என் 2 வகை வினையாகக் கருதப்படுகிறது. சயனைடு அயனியின் மின்னணுமிகு கார்பன் ஆல்க்கைல் ஆலைடை தாக்குகிறது. இவ்வகை வினையுடன் டைமெத்தில் சல்பாக்சைடு ஒரு கரைப்பானாக இருப்பது நைட்ரைல் தொகுப்பிற்கு பொருத்தமான முறையாகும் [2]. மறுசீராக்கல் பக்க வினைகள் இல்லாமலிருப்பது டைமெத்தில் சல்பாக்சைடு உபயோகிப்பதால் கிடைக்கும் அனுகூலமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Organikum, 22. Edition (German), Wiley-VCH, Weinheim, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-31148-3
  2. L. Friedman, Harold Shechter (1960). "Preparation of Nitriles from Halides and Sodium Cyanide. An Advantageous Nucleophilic Displacement in Dimethyl Sulfoxide". Journal of Organic Chemistry 25 (6): 877–879. doi:10.1021/jo01076a001.