கோல்வாளே கோட்டை (கோவா)

ஃபோர்டாலெஸா டி சாவோ செபாஸ்டினோ டி டிவிம் அல்லது டிவிம் கோட்டை என்றழைக்கப்படும் இது ஒரு காலத்தில் நீண்ட சுவர் கட்டமைப்பின் ஒரு பகுதி. இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள கோவா மாநிலத்தில் உள்ள டிவிம் கிராமத்திலிருந்து கோல்வாளே எனப்படும் பகுதி வரை இந்த அமைப்பு பரவியுள்ளது. எனவே மத்தியக் கோட்டை அல்லது கோல்வாளே கோட்டை என்றும் குறிப்பிடப்படுகிறது. தற்போது, இவற்றில் பெரும்பாலானவை இடிந்து விழும் நிலையில் உள்ளன. இருப்பினும், கட்டமைப்பின் பகுதிகளை மீட்டெடுக்கும் பணி நடைபெறுகிறது.

வரலாறு தொகு

இந்தக் கோட்டை 1635 ஆம் ஆண்டில் போர்த்துகேய இந்தியாவின் ஆளுநரான, மிகேல் டி நோரொன்யா, லின்யாரெசின் நாலாம் கவுன்ட்டு உத்தரவின் பேரில் கட்டப்பட்டது. மராட்டியர்கள் மற்றும் போன்ஸ்லெஸ்கள் பார்டெஸ் எல்லையில் நுழையாமல் பாதுகாக்க, ஒரு தடையாக 1681 ஆம் ஆண்டில் ஆல்வோர் கவுன்ட் இந்தக் கோட்டைகளை நிறைவு செய்தார். இந்தக் கோட்டைகள் அதன் மேற்குக் கரையில் உயரமான சுவரைக் கொண்ட கால்வாயைக் கொண்டிருந்தன. இது ஒரு அகழியாகும். இது தொடர்ச்சியான காவலர் குடியிருப்புகளைக் கொண்டிருந்தது. அவற்றில் குறைந்தது மூன்று இன்னும் அடையாளம் காணக்கூடிய இடிபாடுகளாக உள்ளன.

1739 ஆம் ஆண்டில், இது மராட்டிய வீரர்களால் இணைக்கப்பட்டது, பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதை லூரியலின் முதலாவது மார்க்விஸ் லூயிஸ் கார்லோஸ் இனாசியோ சேவியர் டி மெனிசஸ் மீண்டும் கைப்பற்றினார். இந்தக் கோட்டை போர்த்துகீசிய வீரர்களால் காவலில் வைக்கப்பட்டது. பின்னர் 1841 ஆம் ஆண்டில் அவர்கள் அருகிலுள்ள நகரமான மப்பூசாவுக்கு மாற்றப்பட்டபோது திரும்பப் பெறப்பட்டது. மப்பூசா கோட்டை படிப்படியாக அதன் போர்க்கள முக்கியத்துவத்தை இழந்து, சில ஆண்டுகளாக கைவிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டது. இது இப்போது கோவாவில் உள்ள காப்பகங்கள் மற்றும் தொல்பொருள் இயக்குநரகத்தின் ஆதரவினால் மீட்டெடுக்கப்படுகிறது. [1]

பாதுகாக்கப்பட்ட தளம் தொகு

கோட்டையின் இடிபாடுகள் மற்றும் தளம் 1983 முதல் வரலாற்று பாரம்பரிய தளமாக கோவா, டாமன் மற்றும் டையூ (இப்போது கோவா அரசு) ஆகியவற்றால் பாதுகாக்கப்பட்டுள்ளன.[2]

கட்டிடக்கலை தொகு

இந்தக் கோட்டை போர்த்துகீசிய மற்றும் இந்திய கட்டிடக்கலை இரண்டின் தாக்கத்தையும் கொண்டுள்ளது. இந்தக் கோட்டையில் மராட்டியர்கள் தங்கியிருந்தபோது, உள்ளூர்க் கட்டடக்கலை பாணி அடிப்படையில் நினைவுச்சின்னத்தின் சில பகுதிகளை அவர்கள் மீண்டும் வடிவமைத்தனர். கோட்டையின் பெரும்பகுதி இடிந்து கிடந்தாலும், அதன் கட்டமைப்பின் முக்கியத்துவத்தை இன்றும் புரிந்து கொள்ள முடியும்.

இந்தக் கோட்டை முதன்மையாக செங்கல், கல் மற்றும் மண்ணால் கட்டப்பட்ட நீண்ட சுவராக ஒரு கால்வாயின் மேற்குக் கரையுடன் ஓடியது. அதில் அந்தப் பகுதியைக் காக்க படைகள் இருந்தன. கூடுதலாக, குறைந்தது மூன்று காவலர் குடியிருப்புகளைக் கொண்டிருந்தது. வெளிப்புறத்தில் கோட்டைக்கு எதிரிகள் நுழைவதைத் தடுக்க உயர்ந்த சுவர்கள் இருந்தன. அவை பார்டெஸ் என அழைக்கப்படுகின்றன. பார்டெஸ் கோட்டையின் உட்புறத்தில் ஒரு காலத்தில் மராட்டியர்கள் மற்றும் போர்த்துகீசிய ஆட்சியாளர்களின் கொத்தளம் மற்றும் பீரங்கிகள் இருந்தன என்று நம்பப்படுகிறது. ஆனால் இன்றைய கோட்டையின் பெரும்பகுதி பாழடைந்துவிட்டதால், அவற்றில் மிகக் குறைந்த தடயங்கள் மட்டுமே காணப்படுகின்றன.

இருப்பிடம் தொகு

கோட்டைப் பகுதி பார்டெஸில் உள்ள கோல்வளே கிராமத்தின் சர்வே எண் 74 துணைப்பிரிவு 23 இல் அமைந்துள்ளது. மேலும் இந்த நிலம் கோவா அரசுக்கு சொந்தமானது.[3]

1591 இல் பிரான்சிஸ்கன் சபையால் நிறுவப்பட்ட கோல்வாளே தேவாலயம் அருகிலேயே உள்ளது. 1678 இல் மீண்டும் கட்டப்பட்டது. பின்னர் 1683 இல் சம்பாஜியின் கட்டளையின்படி மராட்டியப் படைகள் படையெடுத்தபோது ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

குறிப்புகள் தொகு

  1. Archives Archichologicalhttp://daa.goa.gov.in
  2. "Ancient Monuments and Archaeological Sites" (PDF). Goa Printing Press.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-01-21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்வாளே_கோட்டை_(கோவா)&oldid=3707065" இலிருந்து மீள்விக்கப்பட்டது