சங்கவருணர் என்னும் நாகரியர்

சங்கவருணர் என்னும் நாகரியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சிலர் இவரைச் சங்கவருணர் என்றனர். சிலர் நாகரியார் என்றனர். அனைவரும் இவரை ஒருவராக உணர்ந்துகொள்ளும் பொருட்டு இவரைச் 'சங்கவருணர் என்னும் நாகரியார்' என்று புறநானூற்றைத் தொகுத்தவர் குறிப்பிட்டுள்ளார். புறநானூறு 360 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவரால் பாடப்பட்டதாகச் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

தந்துமாறன் தொகு

தந்துமாறன் சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். புறநானூற்றைத் தொகுத்தவர் இந்தப் பாடலுக்குத் தந்துள்ள அடிக்குறிப்பு 'தந்துமாறனைப் பாடியது' என்று குறிப்பிடுகிறது. பாடலில் இந்த அரசனின் பெயர் இல்லை. எனினும் 'பெரும கேண்மதி!' என்று வருகிறது. இது இந்தப் பாண்டியனை விளித்த மொழி என அறிதல் வேண்டும்.

நாடாள்வோர் நற்பண்புகள் தொகு

  • சினம் கொள்ளவேண்டும். அது சிறிதாக இருக்கவேண்டும். மிகுதியாக இருக்கக் கூடாது.
  • பிறர் சொல்வதைப் பலவாகக் கேட்க வேண்டும். சில சொற்களே சொல்ல வேண்டும்.
  • பிறர் குறிப்பறிந்து அவர் விரும்புவதை விட மிகுதியாகக் கொடுக்க வேண்டும்.
  • நனை, தேறல், கனி, தாளித்த துவையல் முதலானவற்றை, அரவணைக்கும் பணிமொழி பேசி நல்கவேண்டும்.
  • தன்னால் பிறர் பயன் துய்க்கும்படி ஆட்சி புரியவேண்டும்.

செல்வம் நிலையாமை தொகு

இந்த நற்பண்புகளுடன் அரசாண்டோர் சிலர்தான். பலர் அப்பண்புகளுடன் ஆட்சி புரியாதவர்கள். இவர்களின் செல்வம் அவர்களுக்கும் நிலைப்பதில்லை.

ஈமச் சடங்கு தொகு

வெள்ளில் என்னும் சுடுகாட்டில் கள்ளும், புல்லில் இட்ட சோறும் பிணத்துக்குப் படைப்பர். புலையன் சொல்லச் சொல்ல இவற்றைப் படைப்பர்.

தந்துமாறனை வேண்டுதல் தொகு

  • எந்த நாளும் நீ ஒழுக்கம் தவறக் கூடாது.
  • உன்னை நச்சி வருபவர் கையிலிருந்து நீ எதனையும் எதிர்பார்க்கக் கூடாது.