சங்கிலியம் (நூல்)

சங்கிலியம் என்பது, 1519 முதல் 1561 வரை யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட முதலாம் சங்கிலி அரசனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். காரை. செ. சுந்தரம்பிள்ளையினால் எழுதப்பட்ட இக்காவியம் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த ஈழநாடு பத்திரிகையின் 10 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி நடத்தப்பட்ட காவியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.[1] இலங்கை சாகித்திய மண்டலப் பரிசும் இதற்குக் கிடைத்தது. இதன் முதற்பதிப்பு 1970 சித்திரை மாதம் ஈழநாடு வெளியீடாக வெளிவந்தது.

சங்கிலியம்
நூல் பெயர்:சங்கிலியம்
ஆசிரியர்(கள்):காரை செ. சுந்தரம்பிள்ளை
வகை:வரலாற்றுக் காவியம்
துறை:சங்கிலி மன்னன் வரலாறு
காலம்:1970
இடம்:யாழ்ப்பாணம்
மொழி:தமிழ்
பதிப்பகர்:ஈழநாடு வெளியீடு
பதிப்பு:முதற்பதிப்பு

நோக்கம்

தொகு

இலங்கையின் வடபகுதியில் பல நூற்றாண்டுகளாகத் தமிழ் அரசு ஒன்று இருந்த போதிலும் அதன் நினைவாகக் குறிப்பிடத்தக்க நினைவுச் சின்னங்கள் எதுவும் இல்லை. முதலாம் சங்கிலி மன்னன் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்களுட் குறிப்பிடத்தக்கவன். இவன் காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தில் போர்த்துக்கேயர் தலையீடு ஏற்பட்டது. எனினும், அவர்களை வெற்றிகரமாகச் சமாளித்து யாழ்ப்பாணத்தின் இறைமையைப் பேணிப் பாதுகாத்து வந்தான். அவனுடைய போர் வலியும், ஆட்சித்திறனும், இராச தந்திரமும், தேச பக்தியும் இந்த நூலாசிரியரைக் கவர்ந்தன. இந்நூல் எழுதப்பட்ட காலம்வரை அம்மன்னனுக்கு யாழ்ப்பாண மக்கள் எவ்வித நினைவுச்சின்னத்தையும் அமைத்திருக்கவில்லை என்பதும், அவன் வாழ்ந்த பகுதியாகிய சங்கிலித்தோப்பு கவனிப்பாரற்று இருந்ததும் நூலாசிரியரின் மனத்தை உறுத்தியது. இந்த வருத்தத்தை இச் சிறு காவியத்தைப் படைத்ததன் மூலம் ஓரளவு துடைத்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.[2]

துணை நூல்கள்

தொகு

முதலாம் சங்கிலியைத் தலைவனாகக் கொண்டு பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஒரு நாடகத்தை எழுதியிருந்தார். இதை அடிப்படையாகக் கொண்டும், பிற நூல்களின் வழி யாழ்ப்பாண வரலாற்றை ஆராய்ந்தும் இக்காவியத்தை எழுதியிருப்பதாக நூலாசிரியர் கூறுகிறார்.[3] இக்காவியத்தில் உண்மை வரலாற்றோடு நூலாசிரியரின் கற்பனையும் ஓரளவு கலந்துள்ளது.

முக்கியத்துவம்

தொகு

இலங்கை 1948ல் விடுதலை பெற்றபோதும், 1950களின் முற்பகுதியிலேயே மக்களிடையே தேசிய, இன, மொழி உணர்வுகள் உருவாகின என்றும், தமிழ் மக்களும் தம்முடைய மொழி, பண்பாடு, நாடு, சமயம் ஆகியவற்றின் பெருமைகளையும் நிலைமைகளையும் உணரத் தலைப்பட்டார்கள் என்றும், இந்நிலையில் மக்களுக்கு மொழிப்பற்று, நாட்டுப்பற்று, வீர உணர்வு, ஒற்றுமை உணர்வு ஆகியவற்றை ஊட்டுவதற்கான தேவை உணரப்பட்டது என்றும் இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய பேராசிரியர் வித்தியானந்தன் குறிப்பிடுகிறார். இதற்கு ஒரு வழியாக பேராசிரியர் கணபதிப்பிள்ளை சங்கிலியன் நாடகத்தை எழுதியதைப் போலவே சுந்தரம்பிள்ளையும் சங்கிலியத்தை எழுதியுள்ளார் என்பது அவரது கருத்து.[4]

பொருளடக்கம்

தொகு
  1. அவையடக்கம் - ஒரு பாடல்
  2. ஈழநாட்டுச் சிறப்பு - 16 பாடல்கள்
  3. யாழ்ப்பாண நாட்டுச் சிறப்பு - 16 பாடல்கள்
  4. நல்லைநகர்ச் சிறப்பு - 10 பாடல்கள்
  5. பரராசசேகரன் ஆட்சி - 10 பாடல்கள்
  6. இளவரசுப் பட்டங்கட்டல் - 11 பாடல்கள்
  7. சதியும் விதியும் - 14 பாடல்கள்
  8. ஞானியின் அறிவுரை - 5 பாடல்கள்
  9. சீறும் சிங்கம் - 20 பாடல்கள்
  10. அப்பா முதலி - 5 பாடல்கள்
  11. சங்கிலி அரசனாதல் - 5 பாடல்கள்
  12. பதறும் பரநிருபன் - 24 பாடல்கள்
  13. அமைச்சர் பதவியும் அழிவுத் திட்டமும் - 10 பாடல்கள்
  14. மன்னனும் மங்கையும் - 20 பாடல்கள்
  15. பறங்கியர் - 11 பாடல்கள்
  16. மன்னார்ப் படையெடுப்பு - 15 பாடல்கள்
  17. பிரிவும் பரிவும் - 7 பாடல்கள்
  18. மாயாதுன்னை உதவி வேண்டல் - 6 பாடல்கள்
  19. பறங்கியர் சதி - 18 பாடல்கள்
  20. தமிழ்வாசம் புரியாதார் - 8 பாடல்கள்
  21. மந்திராலோசனை - 10 பாடல்கள்
  22. படை உதவி பெறல் - 8 பாடல்கள்
  23. வரமீயும் வீரகாளி - 18 பாடல்கள்
  24. சூழ்ச்சி - 10 பாடல்கள்
  25. வீழ்ச்சி - 7 பாடல்கள்
  26. வருந்தும் வனிதை - 11 பாடல்கள்
  27. அப்பா சென்றான் - 6 பாடல்கள்
  28. அதிர்ச்சியுற்றான் - 6 பாடல்கள்
  29. தெய்வமானாள் - 8 பாடல்கள்
  30. சங்கிலி ஆட்சி சிறந்தது - 1 பாடல்
  31. வாழ்த்து - 1 பாடல்

மேற்கோள்கள்

தொகு
  1. சுந்தரம்பிள்ளை, காரை. செ., 1970, பதிப்புரை பக். VII
  2. சுந்தரம்பிள்ளை, காரை. செ., 1970,என்னுரை பக். XXI, XXII
  3. சுந்தரம்பிள்ளை, காரை. செ., 1970,என்னுரை பக். XXII
  4. சுந்தரம்பிள்ளை, காரை. செ., 1970, சு. வித்தியானந்தனின் அணிந்துரை பக். XI, XII

உசாத்துணைகள்

தொகு
  • சுந்தரம்பிள்ளை, காரை. செ., சங்கிலியம், ஈழநாடு வெளியீடு, யாழ்ப்பாணம், 1970.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கிலியம்_(நூல்)&oldid=1914217" இலிருந்து மீள்விக்கப்பட்டது