சங்கீத இரத்தினாகாரம்
சங்கீத இரத்தினாகாரம் என்பது, 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு இசை நூல். இது சமசுக்கிருத மொழியில் எழுதப்பட்டது. ஐந்தாம் நூற்றாண்டில் பரதர் எழுதிய நாட்டிய சாத்திரம் என்னும் நூலுக்குப் பிறகு நமது இசையியல் செய்திகளை அறிந்துகொள்ளும் வகையில் கிடைக்கும் பழைமையான நூல் இதுவாகும். இவற்றுக்கு இடையில் 800 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கால வேறுபாடு இருப்பது குறிப்பிடத்தக்கது. சாரங்கதேவர் என்பவர் இதை எழுதினார். இவர் இந்தியாவின் பல பகுதிகளிலும் பயணம் செய்து தகவல்களைத் திரட்டி இந்நூலை எழுதியதாகத் தெரிகிறது.[1] இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பல பல இலட்சணங்கள் தற்காலத்துக்குப் பொருந்தாவிட்டாலும், இதன் காலத்தில் சங்கீத அம்சங்கள் பல வளர்ச்சியடைவதற்கு இந்நூல் ஆதாரமாக அமைந்தது.[2]
உள்ளடக்கம்
தொகுஏழு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் நாதம், சுரம், இராகம், தாளம், இசைக்கருவி, பாடகருக்கு இருக்கவேண்டிய குணங்கள், தவிர்க்கவேண்டியவை போன்ற பல தகவல்கள் உள்ளடங்கியுள்ளன. இந்நூலில் இருந்து 264 இராகங்களைப் பற்றிய தகவல்களை அறியக்கூடியதாக உள்ளது.[3] சில இராகங்களுக்கு சாரங்கதேவர் பாஷா இராகங்கள் என்று பெயர் சூட்டியிருப்பதாகவும் இந்தச் சொல் தமிழ் மொழியையே குறிப்பதாகவும், அதேவேளை சில இராகங்களுக்கு இந்நூலில், தட்சிணம், தேவாரவர்த்தனி போன்ற பின்னொட்டுக்கள் தரப்பட்டுள்ளதாகவும், இவை தென்னாட்டு இராகம், தேவாரப் பண்ணிலிருந்து பெறப்பட்டது போன்ற பொருள் தருவதாகவும் நா. மம்மது கருதுகிறார்.[4]
விமரிசனங்கள்
தொகுஇந்நூலைக் குறித்துச் சில இசை ஆய்வாளர்கள், குறிப்பாகத் தமிழிசை ஆய்வாளர்கள் விமரிசனங்களை முன்வைத்துள்ளனர். தமிழிசைக்குத் தமிழகப் பண்பாடு சார்ந்த அடையாளம் இல்லாமல் போனதற்கு இந்த நூல் முக்கிய காரணமாக அமைந்ததாக அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். தமிழ்ப் பண்களுக்கு வடமொழிப் பெயர்களை வழங்கியதன் மூலமும், வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தி இலக்கணம் அமைத்ததன் மூலமும் தமிழிசை தனது அடையாளத்தை இழந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ மம்மது, நா., தமிழிசை வேர்கள், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, 2008. பக் 70
- ↑ பக்கிரிசாமி, கே. ஏ., இந்திய இசைக் கருவூலம், குசேலர் பதிப்பகம், சென்னை, 2006. பக். 470
- ↑ செல்லத்துரை, பி. டி., தென்னக இசையியல், வைகறைப் பதிப்பகம், திண்டுகல், 2005 (ஐந்தாம் பதிப்பு). பக். 198
- ↑ 4.0 4.1 மம்மது, நா., 2008. பக். 70, 71